Monday, December 28, 2020

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 7

பர்மாவில் இருந்த ஆங்கில ராணுவம்   போதிய பயிற்சி இல்லாமல் இருந்தது. நம்மை யாரும் தாக்க மாட்டார்கள் என கவனக் குறைவாக இருந்து விட்டார்கள். இந்தியாவில்  இருந்து வந்த ராணுவம் அவர்களுக்குப் பலம் அளித்தது. ஜப்பான், பர்மாவைக் கைப்பற்றினால்  அடுத்து மணிப்பூர் வழியாக இந்தியாவிற்குள் நுழையலாம் எனத் திட்டமிட்டது. எனவே ஜப்பான் படையினர்  பர்மாவைத் தாக்க ஆரம்பித்தனர். ஆங்கில இந்தியப் படைகள் அவர்களை எதிர்த்துப் போராடினர்.  1942ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை கடுமையான போர் நடந்தது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்தனர்.நம்மை வெல்ல யாராலும் வெல்ல முடியாது என்ற ஆங்கிலேயரின் நம்பிக்கை பொய்த்துப் போனது. ஜப்பானின் கை ஓங்கியது. 50,000 வீரர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அரக்கான் காடுகளில் கூடாரங்கள்  அமைத்து அவர்களைச்  சிறையில் இட்டனர். வைத்தியநாதன் நொந்து போனான். வீர மரணம் அடைந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என நினைத்துக் கொண்டான். மருதவாணனின் நிலைமை தெரியவில்லையே என வருந்தினான். ஒரு நாள் காலை குளிப்பதற்கு ஐராவதி ஆற்றுக்குச் சென்று திரும்பிய போது எதிரே வந்த வீரர்கள் கூட்டத்தில் மருதவாணன் இருந்தான்."வைத்தியா"என்றதும் அவனை நோக்கி வைத்தியநாதன் ஓடினான்."மருதா!நீ உயிரோடு இருக்கிறாயா? நான் எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன்.தெரியுமா?"என்று அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்."நானும் தான்"என்றான் மருதவாணன்‌. உடன் வந்த காவலன் பேச விடாமல் இழுத்துச் சென்று விட்டான்.
            ஓரிரு நாட்களில் இருவரும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.காட்டில் விறகு வெட்டும் பணிக்கு அனுப்பப் பட்டிருந்தனர்.பிறருக்குத் தெரியாமல் தள்ளி நின்று பேசினார்கள். "இவர்களிடம் இப்படி மாட்டிக் கொண்டோமே‌.கடவுள் நம்மை ஏன் காப்பாற்றினார்?"என்று மருதவாணன் புலம்பினான் .வைத்தியநாதன்,"மருதா! கடவுள் நம்மை ஏதோ காரணமாகத்தான்  காப்பாற்றி இருக்கிறார்."என்றான். "உன் சப்பாத்தி,சப்ஜி சாப்பிட ஒரு சர்தார்ஜி ஹவில்தார் வருவாரே. அவரும் இங்கே தான் இருக்கிறார்". என்று மருதவாணன் கூறினான். "எங்களது கூடாரத்தில்  வங்காளத்து டாக்டர் ஒருவர் இருக்கிறார். பாவம்.நல்ல மனிதர்."என்றான் வைத்திய நாதன்.பேசிவிட்டு அவரவர் குழுவிற்குச் சென்று வேலையைத் தொடர்ந்தனர். அவர்களைக் கடவுள் காப்பாற்றிய காரணம் ஓரிரு மாதங்களில் தெரிந்தது.
     பல மொழிகள் பேசும் இந்தியர்கள் தங்களுக்குள் நட்பானார்கள்.சில நாட்களுக்குப் பிறகு மோகன் சிங் என்பவர் அவர்களைச் சந்தித்துப்  பேசினார். நாம்  அனைவரும் சேர்ந்து ஆங்கில ஆகாதிபத்தியத்தை எதிர்ப்போம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொரு முகாமிற்கும் சென்று உரையாடினார். ஆங்கிலேயப் படை ராணுவ வீரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக மாறினார்கள்.இந்திய தேசிய ராணுவம் உருவானது.ஆனால் மோகன் சிங்கிற்கு போதுமான உதவி கிடைக்கவில்லை.அடுத்து ஜப்பான் நாட்டில் இருந்த ராஸ் பிகாரி போஸ் தலைமை ஏற்றார். அதுவும்  சரிப்பட்டு வரவில்லை.இதனை  நேதாஜி அறிந்து கொண்டார்.ஜெர்மனில் இருந்த அவர் நீர்மூழ்கிக் கப்பலில் 91 நாட்கள் பயணம் செய்து மலேசியா வந்து சேர்ந்தார் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்."ஒரு துளி ரத்தத்தை எனக்குத் தாருங்கள். நான் உங்களுக்கு  சுதந்திரத்தைத் தருகிறேன்"என்று வீரவுரை ஆற்றினார்.வைத்தியநாதனும், மருதவாணனும் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான வீரர்கள் அவரைத் தலைவராக ஏற்றனர். பர்மா, மலேசியா நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் அவர்களுடன் இணைந்து   கொண்டனர். தமிழகத்தில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 600 பேரை பர்மாவிற்கு அனுப்பி வைத்தார். ஜப்பானும்,ஜெர்மனியும் நேதாஜிக்கு ஆதரவு தந்தார்கள்.
              ஆஸாத் ஹிந்த் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.அதில் நேதாஜி உரையாற்றினார்.டில்லி சலோ என்ற அவரின் கட்டளையைத் தாரக மந்திரமாக வீரர்கள் ஏற்றனர்.நேதாஜி அவர்களுக்கு  சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினார். மாபெரும் வீரனின் தலைமையில் போருக்குத் தயார் ஆனார்கள்.                  
               தொடரும்.

No comments:

Post a Comment