நிறைய தாமரைப் பூக்கள் இருந்தன. தேங்காய்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் அனைத்தும் விற்கப்பட்டன.உயரமான இடத்தில் கோவில் இருந்தால் பல படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்ல வேண்டியிருந்தது.அன்னையின் சன்னதியில் மகாகாளி, மகாலெட்சுமி, மகாசரஸ்வதி என்று மூன்று தேவியரும் வீற்றிருந்தனர். அன்னை மகாலெட்சுமி நடுவில் காணப்பட்டார்.தேவியர்களை வணங்கி விட்டு பின்னால் இருந்த குளத்திற்குச் சென்றோம்.அதன் பெயர் மணிகர்ணிகா என்று கூறினார்கள்.தரிசனம் முடிந்து வெளியே வந்தோம்.பல வண்ணக் குங்குமங்கள், காப்புக் கயிறுகள், அம்மனின் திருவுருவப் படங்கள், பொம்மைகள் என எங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கினோம். எங்களது ஆசிரியை ஒருவரின் அண்ணியார் மும்பையில் வசித்து வந்தார்.அவர் எங்களுக்காக தன்னுடைய வீட்டில் இருந்து வடைகள் செய்து கொண்டு வந்திருந்தார். மகிழ்ச்சியுடன் அவற்றைச் சாப்பிட்டோம்.ஆசிரியர் ஒருவர் வாழைப்பழங்கள் வாங்கி வந்தார். அவைகளையும் உண்டு தண்ணீர் குடிக்க வயிறு நிரம்பி விட்டது.ஹோட்டலுக்கு போகும் எண்ணமே போய்விட்டது. அங்கு அமர்ந்து சாப்பிடும் நேரத்தில் மும்பையைச் சுற்றிப் பார்க்கலாம் என ஏகமனதாக நினைத்தோம். தலைமை ஆசிரியை ,"இப்போது சாப்பிடவில்லை எனில் இரவு உணவுதான் கிடைக்கும்." என்றார்."பரவாயில்லை அம்மா! இரவே சாப்பிட்டுக் கொள்கிறோம்." என்று அனைவரும் கூறிவிட்டோம். கேட் வே ஆஃப் இந்தியாவை நோக்கி பேருந்தில் பயணித்தோம். சினிமாக்களில் மட்டுமே பார்த்த அக்கட்டிடத்தை நேரில் கண்டோம். மிகப் பிரபலமான தாஜ் ஹோட்டல் அதனை அடுத்து அமைந்திருந்தது.
இரண்டுக்கும் இடையே இருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான புறாக்கள் இருந்தன.சிலர் தங்கள் கைகளில் தானியங்களை வைத்து நீட்ட பயமின்றி புறாக்கள் கைகளில் அமர்ந்து உண்டன.அடுத்து காணப்போவது காஜி அலி தர்ஹா இது கடற்கரையில் இருந்து 500மீட்டர் தொலைவில் உள்ள மணல்திட்டில் கட்டப்பட்டுள்ளது.நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது .கடல் அலைகள் தீவிரமாகும்போது தர்ஹாவை கடல்நீர் சூழ்ந்து விடும்.பேருந்தில் இருந்தபடியே தர்ஹாவைப் பார்த்தோம்.இரவு 10 மணிக்கு விமானம் ஏறவேண்டும். எனவே விமான நிலையத்தை நோக்கி பயணமானோம். தொடரும்.