Friday, January 31, 2020

கங்காரு தேசம் 30

STORY BRIDGE 
பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள ஆற்றுப்
பாலங்களில் ஒன்று story bridge. அதைப் பார்க்க எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று மைத்துநர் விரும்பினார்.நாங்கள் விக்டோரியா பாலத்தைப் பார்த்து விட்டோமே எனக் கூறி விட்டோம்.இந்தியாவிற்குத் திரும்பும் முன்பு சிறிய மைத்துநர் வீட்டிற்குச் சென்று விடை பெற்று வரவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஜனவரி 26ஆம் நாள் ஆஸ்திரேலிய தினமாகக் கொண்டாடப் படுகிறது.அது ஞாயிற்றுக் கிழமை என்பதால்  27 ஆம் தேதி திங்கள் கிழமை தேசிய விடுமுறை விடப்பட்டது.அன்று சிறிய மைத்துநர்  எங்கள் அனைவரையும் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.எனவே நாங்கள் அங்கு சென்றோம்.சிறிய தங்கை, மைத்துநர் மற்றும் மகன்கள் ஆகியோருடன் உரையாடினோம். மதிய விருந்து அருமையாக இருந்தது.பின்னர் விடைபெற்றுக் கிளம்பினோம். மைத்துநர் முருகன் Story bridgeக்கு அழைத்துச் சென்றார்.
இந்தப்  பாலம் முழுவதும் இரும்பு, எஃகு ,சிமென்ட் கலவையால் உருவாக்கப் பட்டுள்ளது.இதைக் கேள்விப்பட்டதும்  மதுரை மணிநகரத்தில் உள்ள சிறிய ரயில் பாலத்தை கர்டர் பாலம் என்று கூறுவது நினைவுக்கு வந்தது. Girder bridgeல் மரமும் இவற்றுடன் பயன்படுத்தப்படும் எனத் தெரிந்தது.இந்தப் பாலம் 1940 ல் பயன்பாட்டுக்கு  வந்தது.777 மீட்டர் நீளமும், 24 மீட்டர் அகலமும்,74 மீட்டர் உயரமும் கொண்டது.இதன் மேல் பகுதியில் தக்க பாதுகாப்புடன்
நடைப்பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
(Downloaded picture)
இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.Day climb,night climb, cantilever climb,plank climb என பல நடைப்பயணங்கள் உள்ளன. பாதுகாப்பிற்கு ஒரு பெல்ட் அணிந்து கொள்ள  அது கைப்பிடி ஓரமாக ஏறுபவர்களுடன் நகர்ந்து கொண்டே வருமாம். இது பாதுகாக்க மட்டும் அல்ல.தற்கொலையைத் தடுக்கவும் தான்.கூடவே ஒரு வழிகாட்டியும் வருவார். Abseiling என்று பாலத்தின் உச்சியில் இருந்து கயிற்றைக் கட்டிக் கொண்டு கீழே இறங்குகிறார்கள்.
          (Downloaded picture)
  சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சாகசச் செயல்களில் மக்கள்  ஈடுபடுகின்றனர்.    
                    CLOCK TOWER TOUR
பிரிஸ்பேன் சிட்டி ஹாலை ஏற்கனவே பார்த்து விட்டோம். அங்குள்ள கடிகாரக் கூண்டைப் பார்க்க அனுமதிப்பார்கள் என்பதை அங்கு சென்ற பின்தான்  அறிந்தோம்.ஆன் லைனில் முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.ஒரு  குழுவில் ஏழு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.  அதைப் பார்க்கவில்லை.எனவே தங்கை ரமணாவும்,மைத்துநரும் அங்கு அழைத்துச் செல்ல விரும்பினர்.ஆன்லைனில் பதிவு செய்து மாலை 3.30 க்கு அங்கு பார்வையிட அனுமதி பெற்றோம்.  மைத்துநர் பணிக்குச் சென்று விட்டார்.நாங்கள்  ஐவரும் கிளம்பினோம்.பேருந்து சரியான நேரத்திற்கு வந்து விடும்.எனவே காலஅட்டவணையைப் பார்த்து  சரியான நேரத்திற்கு  பேருந்தில் ஏறி சிட்டி ஹாலுக்குச் சென்று விட்டோம்.  
           வழிகாட்டிப் பெண்மணி வந்து அழைத்துச் சென்றார்.சரியாக ஏழு பேர் மட்டுமே அனுமதிக்கப் பட்டோம். மூன்றாவது தளத்தில் இருந்து மேலும் ஒரு தளத்திற்கு  படிக்கட்டில் ஏறிச் சென்றோம்.அதன் பிறகு ஒரு மரத்தால் ஆன பழைய லிஃப்ட்டில் ஏறினோம்.கட்ட  ஆரம்பித்த போது பொருட்களை ஏற்றக்  கட்டப்பட்ட இந்த  லிஃப்ட்  மின்சாரத்தால் இயக்கப் படுவதில்லை.பழைய இயந்திரத்தால் இயக்கப் படுகிறது. 
கடிகாரத்தின் பின்புறத்தைப் பார்க்க நிறுத்தினார்கள்.வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

கடிகாரமணி அடிக்க உதவும் கருவியைப் பார்த்தோம். Master clock என்ற பெண்டுலம் உள்ள கடிகாரம் சுவரில் மாட்டப்பட்டுள்ளது. அதில் உள்ள நேரத்தைத் தான் பெரிய கடிகாரம்  காட்டுமாம்.
தரையில் இருந்து 87.47 மீீட்டர் உயரத்தில் உள்ளது.அதற்கு மேல் Observation deck உள்ளது.தூண்கள் அமைந்துள்ள அந்த சிறிய இடத்தைச் சுற்றி வந்தோம்.
(தூணின் ஒரு பகுதி)
அங்கிருந்து பிரிஸ்பேனின்  கட்டிடங்களின் அழகை ரசித்தோம்.
அவற்றைப் பார்த்து விட்டு கீழே வந்தோம்.மூன்றாம் தளத்தில் 
பிரிஸ்பேன் மியூசியம் உள்ளது. நாங்கள்  இருவரும் மீண்டும் அதைப் பார்த்தோம்.இம்முறை நிறைய படங்கள் எடுத்தோம்.
நின்று நிதானமாக ரசித்தோம். வரும்போது அடிலெய்டு வீதி  வழியாக வந்தோம்.வீட்டிற்குத் திரும்பும் போது  Queen street mallஐப்
பார்த்துக் கொண்டே வந்தோம்.Bus station சுரங்கத்தில் அமைந்துள்ளது.  பயணிகள் காத்திருக்க வேண்டிய பகுதியும் மாலின் ஒரு பகுதியில் மூடிய கதவுகளுடன் இருந்தன. நாங்கள்  பேருந்தில் ஏற வேண்டிய இடத்தை அங்குள்ள display ஐப் பார்த்து அறிந்து கொண்டோம். பேருந்தின் எண்ணுடன் அது எத்தனை நிமிடங்களில் வரும் என்பதையும்   அறிந்து கொள்ளலாம். பயணிகள் அழகாக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம். குளுகுளு பேருந்தில் ஏறி மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தோம்.   
                       தொடரும்.                        


 


   

Wednesday, January 22, 2020

கங்காரு தேசம் 29

CITY HALL
இது பிரிஸ்பேன் நகராட்சி அலுவலகம் ஆகும்.  மைத்துநர் சில நாட்களுக்கு முன்னதாகவே ஆன்லைனில்  விண்ணப்பித்து அனுமதி வாங்கி விட்டார்.கட்டணம் ஏதும் கிடையாது. பிற்பகல் 1.30 மணிக்கு guided tour இருந்தது.அதில் நாங்கள் கலந்து கொண்டோம்.
இந்த இடம் King square என்று அழைக்கப்படுகிறது.கட்டிடத்தின் முன் இருபுறங்களிலும் வெண்கலத்தால் செய்யப்பட்ட
சிங்கங்களின் சிற்பங்கள் இருந்தன.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலை ஒன்றும் உள்ளது. கட்டிடத்தூண்களைப் பார்த்த போது நமது நாட்டுப் பாராளுமன்றத் தூண்கள் போன்றே இருந்தது.
(இந்தியப் பாராளுமன்றக் கட்டிடம்)
பிரிஸ்பேன் நகரை உருவாக்கப்       பாடுபட்ட குடும்பங்களை                        
நினைவு படுத்தும் வகையில்  Petrie tableau என்ற சிற்பம் வைக்கப் பட்டுள்ளது.அதற்குக் கீழே இரு கங்காருகளின் சிலையும் உள்ளது
.
City hallன் முகப்பில் Tympanum என்ற சிற்பம் காணப்படுகிறது.    
      இவைகளைப் பார்த்த பின் உள்ளே சென்றோம்.  நமது பாராளுமன்றம் போன்றே  கீீழ்த் தளத்தில்  வட்ட வடிவத்தில் ஒரு அரங்கம் உள்ளது. அதன் மேல் பகுதி தாமிரத்தால் ஆன 31 மீட்டர் விட்டமுள்ள அரைக்கோள வடிவில் உள்ளது. மேடையின் பின்புறம் 4300 குழல்களை உடைய Organ என்ற பெரிய இசைக் கருவி இருக்கிறது. அரசாங்க நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன.மைத்துநர்,
தங்கை மற்றும் மகள்கள் இங்கு         நடைபெற்ற நிகழ்ச்சியில் தான்            ஆஸ்திரேலியக் குடியுரிமையைப்    பெற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. கட்டணம் செலுத்தி தனியார் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களையும் இங்கு  நடத்தலாம்.
மேல் தளத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக்  காண வசதி உள்ளது.அடுத்து கவுன்சில் கூடும் ஹாலுக்குச் சென்றோம்.அதைப் ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லை.
நடுவில் மேயருக்கு இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.ஆளுங்கட்சியினர்     சுயேச்சைகள்,எதிர்க் கட்சியினர்         அமரும்  இடங்களையும்  தனித்தனியே  அமைத்து உள்ளனர்.அழகாக மேசை, நாற்காலிகள், மைக்குகள் அமைக்கப் பட்டிருந்தன.மேயரின் ஆஃபீஸை வெளியில் இருந்து பார்த்தோம்.1925 முதல் பதவி வகித்த மேயர்களின் புகைப்படங்கள்மற்றும்
தற்போதைய மேயரின் புகைப்படம் மாட்டப் பட்டிருந்தன. சிறிய மியூசியம்
ஒன்றும் உள்ளது.அதில் பல ஓவியங்கள் இருந்தன.குழந்தைகள்
விளையாட தனி இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.
PARLIAMENT HOUSE
குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரம் பிரிஸ்பேன்.நம் நாட்டில் மாநில அளவில்  தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்களை M.L.A என்று கூறுவர்.இங்கு  M.P என்றுதான் கூறுகின்றனர். சட்டசபை, பாராளுன்றம் எனக் கூறப்படுகிறது.எனவே இங்கு Parliament house உள்ளது. முதலமைச்சர் Premier என அழைக்கப் படுகிறார்.    
 பார்வையாளர்கள் மறுபக்கம் உள்ள புதிய கட்டிடம் வழியாகத் தான் அனுமதிக்கப் படுகின்றனர்.
(downloaded picture)
மாலை 4 மணிக்கு உள்ளே சென்றோம். Security check செய்தனர்.கைப்பையும் ஸ்கேன் செய்யப் பட்டது.Pass port ஐப்பார்த்த பின்பு அனுமதி தந்தனர். பல லாக்கர்கள் உள்ளன.பையை  ஒரு லாக்கரில் வைத்து விட்டு சாவியை எடுத்துச்  சென்றோம்.வழிகாட்டிப் பெண் ஒருவர் குழுவை அழைத்துச்
சென்றார்.நடுவே இருந்த படிக்கட்டை மட்டுமே படம் எடுக்க அனுமதித்தார்.
பிற இடங்களைப் படம் எடுக்க அனுமதி கிடையாது. பாராளுமன்ற அறைக்குள் நுழைந்தோம். M.Pக்கள் அமரும் நாற்காலியில் அமரச் சொன்னார்கள். பட்டன் எதையும் தொடாமல் இருக்குமாறு கூறிவிட்டுபின் அறையைப் பற்றி விளக்கம்  
தந்தார்.  ஒரு நிமிட குவின்ஸ்லாந்து M.P.! ஒரே சிரிப்புதான்.           (Downloaded    picture)            
 ஆளுங்கட்சியினர்,எதிர்க்கட்சியினர்,சுயேச்சைகள் அமரும் இடங்கள், பத்திரிக்கையாளர்களுக்கு உரிய இடங்கள்,பார்வையாளருக்கு உரிய இடங்கள் ஆகியவற்றைக் காட்டினார்.பாராளுமன்றத்தில் பேசுபவர்கள் சரியாக உரையை முடிக்க நிமிடம்,நொடியைக் காட்ட பெரிய எலெக்ட்ரானிக் Stop watch வைக்கப் பட்டுள்ளது.
                    விருந்தினர் சந்திப்பு, பத்திரிக்கையாளர் சந்திப்பு ஆகியவற்றிற்கு ஒரு பெரிய அறை உள்ளது. ஓரிடத்தில் நூலகம் அமைக்கப் பட்டுள்ளது.அதில் ஆஸ்திரேலியாவின் எல்லா மாநிலப் பாராளுமன்றங்களின் நடவடிக்கைக் 
குறிப்புக்கள் தொகுக்கப்பட்டு புத்தகவடிவில் அடுக்கப் பட்டுள்ளன.  உட்கார்ந்து படிக்க நாற்காலிகள், மேஜைகள் உள்ளன.
            (Downloaded picture) 
எலிபெத் மகாராணி,அவரது தந்தை ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோரின்  படங்கள் இருந்தன. ஒரு தளத்தில் கண்ணாடியில் ஒரு அரசியாரின் படம் இருந்தது. பார்த்ததும் நினைவு வந்து விட்டது. படிக்கும் காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் விக்டோரியா மகாராணியாரின் பேரறிக்கையில் கூறப்பட்ட அம்சங்கள் மிக முக்கியமானது என திருப்பித் திருப்பிப் படித்திருக்கிறோம்.எட்டாம் வகுப்பு ஆசிரியையாக 22 ஆண்டுகள் பாடமாக நடத்தியிருக்கிறேன்.எனவே விக்டோரியா மகாராணியார் நன்கு தெரிந்தவராகி விட்டார்.
(Downloaded picture) 
பாராளுமன்றத்தின் ஒரு சுவரில் இதுவரை உள்ள உறுப்பினர்களின் படங்களும்,பெயர்களும் எழுதப்பட்டுள்ளன.தற்செயலாக பாராளுமன்றஉறுப்பினர் ஒருவர் அங்கு வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்கிருந்து வருகிறீர்கள்?   எனக் கேட்டதும் நான் இந்தியாவில் இருந்து  வந்திருக்கிறேன்   என பதில் கூறினேன். வழிகாட்டி எல்லா இடங்களையும் காட்டினார்.பின்னர் லாக்கரில் இருந்த பையை எடுத்துக்கொண்டு நன்றி கூறி விடை பெற்றோம்.நமது தலைநகர் தில்லியில்  பாராளுமன்றத்தை 1985ல் நானும்,என் கணவரும் பார்வை இட்டிருக்கிறோம். தில்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த மைத்துநர்,முதல் தங்கையின் கணவர்
திரு.ராமகிருஷ்ணன் அங்கு கூட்டிச் சென்றிருந்தார்.இரு மைத்துநர்கள் தயவால் இரு நாட்டுப் பாராளுமன்றங்களைப் பார்த்து  விட்டோம்.1867ல் கட்டப்பட்ட பிரிஸ்பேன் பாராளுமன்றம்
 1921-1927ல் கட்டப்பட்ட இந்தியப்   பாராளுமன்றம்,1920-30களில்     கட்டப்பட்ட சிட்டி ஹால்ஆகிய அனைத்தும் அக்கால  ஆங்கிலேயரின்  கட்டிடக்கலைக்குச்
சான்றுகளாகத் திகழ்கின்றன.    
                   எனது மைத்துனர் முருகன் வேறு எதையாவது பார்க்க விரும்பினால் சொல்லுங்கள். போகலாம் என்றார்.பிரிஸ்பேன் ஆற்றங்கரையில் உள்ள sign of Brisbane ஐ இரவில் தான் பார்த்தோம்.இப்பொழுது போகலாம் என்றேன். பிரிஸ்பேன் ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள விக்டோரியா பாலத்தில் ஆற்றை ரசித்துக் கொண்டே நடந்தோம். கோடைகாலத்தில் எப்படி இவ்வளவு 
நீர் ஓடுகிறதென ஆச்சரியப் பட்டேன்.         பிரிஸ்பேன் நகரம் ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ளதால் கடலில் ஓதங்கள் ஏற்படும் போது கடல் நீர் ஆற்றுக்குள் வந்து விடுகிறது. எனவே  எப்போதும் நீர் இருக்கும்.          இது நன்னீர் இல்லை.படகுப் போக்குவரத்துக்கு  மட்டுமே   இங்கு 
 பயன்படுகிறது.  உற்பத்தியாகும் இடத்தில் இருந்து வரும்போது   நன்னீராகத் தான் வருகிறது.இங்கு உப்புநீராக மாறிவிடுகிறது என்று மைத்துநர் விளக்கம்  கூறினார். 
ஆற்றங்கரையில்   BRISBANE  என       
ஆங்கில எழுத்துக்கள்  பெரியதாகக் காட்சி  தந்தன.                                                       

                            சற்று நேரம் அமர்ந்து விட்டு வீீட்டிற்குக் கிளம்பினோம். பிரிஸ்பேனில்  உள்ள முக்கிய இடங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம். இனி மூட்டை, முடிச்சுக்களைக் கட்டிக்  கிளம்ப வேண்டும்.
                            தொடரும். 
   
                                


 

Monday, January 20, 2020

கங்காரு தேசம் 28

BUS TOUR OF SYDNEY
ஹைட் பூங்காவில் பேருந்து வருவதற்காகக் காத்திருந்தோம். முதலில் வந்தவர்கள் வரிசையாய் நிற்போம் என ஒருவர் கூற மற்றவர்கள் ஏற்றுக் கொண்டனர். வரிசையாகக் காத்திருந்தோம். முதலில் டிரைவர் வந்து பெயர்களைக் குறித்துக் கொண்டு கட்டணம் வசூலித்தார். சரியாக 10.30க்கு அருகில் இருந்த சாலையில் பேருந்தில் ஏறினோம். டிரைவர் விளக்கம் கூறிக் கொண்டே வந்தார். Mrs.Macquarie's chair என்ற இடத்தில் நின்றது.நியூ சௌத் வேல்ஸ் கவர்னராய்  இருந்த மக்வாரிஸ் அவர்களின் துணைவியாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.மணற்பாறை ஒன்றில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கல்வெட்டும் காணப்படுகிறது.
முக்கியமான இடங்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.எங்கு போனாலும் கடலைக் காண முடிந்தது.Rose bay என்னும் இடத்தில் நின்றபோது தொலைவில் ஓப்ரா ஹவுஸ்  மற்றும் ஹார்பர் பிரிட்ஜ்  காட்சி தந்தது.
மரங்கள் அடர்ந்த The gap என்ற இடத்தில் இறங்கி சுற்றிப் பார்த்தோம்.
அடுத்து ஒரு கடற்கரையில் நின்ற போது  செங்குத்தான பாறை அடுக்குகளைக் காண முடிந்தது.அதன் மேல் யாரும் ஏற வேண்டாம் என டிரைவர் வேண்டுகோள் விடுத்தார்.
எனவே தொலைவில் நின்று ரசித்தோம். 
சிட்னியில் முதன்முதலில் அமைக்கப்பட்ட Macquarie light house ஐப் பார்த்தோம்.
பேருந்தில் பயணம் செய்து கொண்டே சிட்னியின் பல பகுதிகளைப் பார்த்து விட்டோம். அடுத்து  Bondi beachல் இறங்கினோம். நமது மெரினா கடற்கரையை விட மிகச் சிறியதாகஉள்ளது.மணல் நல்ல வெண்மையாக இருந்தது.
          (Downloaded picture)
கடற்கரைக்குச் சென்று கடலை நோக்கி நடந்தோம். மக்கள் ஆங்காங்கே மணலில் படுத்து சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருந்தனர்.கடல் அலையில் கால்களை நனைத்து மகிழ்ந்தோம்.ஸர்பிங் செல்பவர்களையும் காண 
முடிந்தது.கடலில் மூழ்குபவர்களைக்காப்பாற்ற Life guards அருகிலேயே உள்ளனர்.கடல் நீரில் நீந்திக் களித்தவர்கள் கரைக்கு வந்து குளிக்க நன்னீர் ஷவர்கள் உள்ளன. குறித்த நேரத்தில் அனைவரும் வந்து சேர பேருந்து கிளம்பியது.வழியில் El Alamine fountain ஐக் கண்டோம்.
இது 1942ல் இரண்டாம் உலகப்போரின் போது எகிப்து நாட்டில் El Alamine என்ற இடத்தில் உயிர் நீத்த போர்வீரர்களின் நினைவுச் சின்னமாகும்.சரியாக இரண்டு மணிக்கு மீண்டும் ஹைட்பூங்காவில் இறங்கினோம்.
             மதிய உணவை உண்ட பின்பு பூங்காவில் சற்று ஓய்வெடுத்தோம். Woolworth's ஷாப்பிங்  சென்டருக்குச் சென்றோம்.ஒரு சுற்று சுற்றி விட்டு North Indian Flavour உணவகத்திற்கு வந்தோம்.வெஜிடபிள் பக்கோடா,  பிரட் பக்கோடா வாங்கி சாப்பிட்டோம். மாலை 6 மணிக்கு சிட்னி விமான நிலையத்திற்கு வந்து விட்டோம். அங்கும் வின்டோ ஷாப்பிங் செய்தோம்.  இரவு உணவாக பிரட் சாண்ட்விச் வாங்கினோம். உள்ளே தக்காளி,வெங்காயம்,கீரை அத்துடன் கத்திரிக்காயும் இருந்தது.Tigerair விமானத்தை விட Virgin Australia விமானம் சற்று பெரியதாக இருந்தது. இரவு 9.30மணிக்கு விமானம் கிளம்பியது. விமானப்பயணம்  ஒரு மணி நேரம்தான். வாடகைக்காரில்  ஏறி 10 மணிக்கு பிரிஸ்பேன் வீீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.அது எப்படி? எனத் தோன்றுகிறதா? கோடைகாலத்தில் அதிகாலையிலேயே சூரிய ஒளி வீச 
ஆரம்பித்து விடுகிறது. எனவேநியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில்  கடிகாரம் ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றப்படுகிறது. குவின்ஸ்லாந்து அதை ஏற்கவில்லை. எனவே சிட்னி நேரப்படி 11 மணி.பிரிஸ்பேன் நேரம் 10 மணிதான்.
             தொடரும்.


Saturday, January 18, 2020

கங்காரு தேசம் 27

HYDE PARK
சிட்னியில் மூன்றாவது நாள் காலை  சுற்றுலா பேருந்தில் ஊரைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்திருந்தோம்.அது 2 மணிக்குத் தான் நிறைவு பெறும். மதியஉணவை முடித்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்கு வந்து கிளம்புவது வீண் அலைச்சலாகும் என நினைத்தோம்.மாலை 5 மணிக்கு ஏர்போர்ட்டிற்குச்  சென்று 6 மணிக்குக் கிளம்பும் tigerairல் கிளம்ப எண்ணி  காலை 11.30 மணி வரை
மட்டுமே அறையை முன்பதிவு செய்திருந்தோம்.காலை 5 மணிக்கு விமானநிறுவனம்,மாலை 6மணிக்கு புறப்படும் விமானம் ரத்து செய்யப் பட்டதால் 9.30க்குக் கிளம்பும் virgin australia விமானத்தில் பயணம் செய்யுமாறு குறுந்தகவல் அனுப்பியது.சிட்னிக்கு எங்களை விட மனமில்லையோ என நினைத்துக் கொண்டேன்.                  
                 காலை உணவாக பிரெட் சாப்பிட்டுவிட்டு மதிய உணவிற்கு தயிர் சாதம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.அறையைக்  காலி செய்து பெட்டிகளோடு கிளம்பினோம். கடந்த இரு நாட்களில் நாங்கள் பயணம் செய்த கார்களின் டிரைவர்கள் லெபனான், ஈரான்,பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.இன்று வந்தவர் நம் நாட்டு சீக்கியர்.  அவரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
HYDE PARK
Anzac war memorial பூங்காவின் ஒரு பகுதியில் இருந்தது.நாங்கள் சென்றபோது அது மூடியிருந்தது. அதன் முன்னால் இருந்த குளத்தின்
நீரில் அக்கட்டிடம் பிரதிபலிக்குமாம். மேகமாக இருந்ததால் நாங்கள் பார்க்க இயலவில்லை.
             சாலையைக் கடந்து பூங்காவின் மறுபகுதிக்குச் சென்றோம். பெரிய மரங்கள்  அடங்கிய சோலை போல இருந்தது.
நடுவில் Archibald fountain உள்ளது. பாரிஸ் நாட்டு சிற்பக் கலைஞர்கள் வடித்த சிற்பங்கள் இங்கு வைக்கப் பட்டுள்ளன.
பூங்காவின் மற்றோர் பகுதியில் தற்போது மாலையில் மட்டும் பொருட்காட்சி நடைபெறுகின்றது.
நன்றாக பூங்காவைச் சுற்றிப் பார்த்து விட்டு Archibald fountain அருகே சுற்றுலா பேருந்துக்காகக் காத்திருந்தோம்.
                தொடரும்.

Friday, January 17, 2020

கங்காரு தேசம் 26

THE SYDNEY TOWER EYE

(Downloaded picture)

சிட்னி டவர்  சிட்னியில் உள்ள மிக உயரமான கட்டிடம் ஆகும்.தரையில்
இருந்து மேல் முனைப் பகுதிவரை  309 மீட்டர் உயரம் கொண்டது. 1504
படிகளைக் கொண்டது. ஆகஸ்ட்  மாதம் மட்டும் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக Sydney tower stair challenge என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.அப்பொழுது மட்டும் மக்கள் படிகளில் ஏறுகின்றனர். இக்கட்டிடம் West field நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதைத் தவிர இரு நிறுவனங்கள் அதை நடத்த உதவுகின்றன. 

            இந்த டவரை நிலைநிறுத்த 56 கேபிள்களும்,1,62,000 லிட்டர் கொள்ளவுள்ள தண்ணீர்த் தொட்டியும் உள்ளதாம்.நான்காவது தளத்தில் 4 D சினிமா தியேட்டர் உள்ளது.அதற்கான கண்ணாடியைத் தந்தார்கள்.அணிந்து கொண்டு உள்ளே சென்றோம். நின்று பார்க்க வேண்டியிருந்தது. சிட்னியின் கடல் அலைகள் நம்மை நோக்கி வீசின. காற்றின் ஒலியும் காதுகளில் ஒலித்தது.நீர்த் துளிகள் நம்மீது படுவது போல இருந்தது.கடல் மீது ஸர்பிங் செய்த காட்சி நாமே பயணம் செய்ததாக உணரச் செய்தது.     
அதன் பின்னர் லிஃப்டில் ஏறி indoor observation  deck ஐ அடைந்தோம்.
(Deckன் ஒரு பகுதி)

இது வட்ட வடிவில் அமைக்கப் பட்டிருப்பதால்  சிட்னி நகரின் முழுப் பகுதியையும் காண முடிந்தது.

(ஹைட் பார்க்கின் தோற்றம்)

இங்கு கஃபே ஒன்றும் உள்ளது. Deckன் மேல் பகுதியில் Sky walk என்ற
பகுதி உள்ளது. அங்கு செல்ல குறிப்பிட்ட குறைந்த அளவு எண்ணிக்கையில் மக்கள்  மாலை 6 மணி வரை அனுமதிக்கப் படுகிறார்கள்.அப்பகுதியின்   தரைத்தளம்  முழுவதும்  கண்ணாடியாலானது.மன தைரியம் இருந்தால் அதில் நடந்து கொண்டே  மிக உயரத்தில்  இருந்து நகரை ரசிக்கலாம்.முன்பே பதிவு செய்திருக்க வேண்டும்.நாங்கள்     அங்கு செல்லவில்லை. 

(Downloaded picture)

விளக்கொளியில் நகரத்தைக் காணலாம் என நினைத்தோம். ஆனால் கோடைகாலம்  என்பதால் சூரியன் மாலை 6.30 மணியாகியும் ஒளி வீசிக் கொண்டிருந்தது.எனவே அங்கிருந்து கிளம்பினோம். இரவு உணவை முடித்து விட்டு கிளம்ப முடிவு செய்தோம். சற்று தூரம் நடந்து வெஸ்ட் ஃபீல்டு ஷாப்பிங் மாலை அடைந்தோம். பொதுவாக எல்லா ஷாப்பிங்களிலும் பல நாடுகளின் உணவகங்கள் இருக்கும்.இந்திய உணவகமும் கண்டிப்பாக இருக்கும். North Indian Flavour என்ற உணவகம் இருந்தது. நாண் மற்றும் வெஜிடபிள் குருமா சாப்பிட்டோம். நம் நாட்டில் சாப்பிடுவது போன்றே இருந்தது. மற்றோர் பகுதியில் Mumbai express என்ற உணவகமும் இருந்தது. பின்னர் நாங்கள் தங்கி இருந்த Hotel Macleayக்கு வந்து சேர்ந்தோம். 

               தொடரும்