Thursday, November 28, 2019

கங்காரு தேசம் 4

இந்தியப் பெருங்கடலின் மேலே
              சிங்கப்பூர் விமானப் பணிப் பெண்கள்  முகமன் கூறி வரவேற்றனர்.செய்தித் தாட்களும், இயர் ஃபோனும்   இருந்தன.                இயர்ஃபோனை மட்டும் எடுத்துக்
கொண்டோம். சூடான டவலைத் 
தந்தார்கள்.தயக்கமின்றி வாங்கி முகத்தைத் துடைத்துக் கொண்டோம்.
விமானம் சீராகப் பறந்து கொண்டிருந்தது.பல நாட்டவர்கள்
இருந்தனர்.தமிழகத்து இளம் தம்பதிகள் ஒருவர்  தங்கள் மகனுடன் அமர்ந்திருந்தனர்.
                  முன் தின இரவு தூங்காததால்  தூங்க முயன்றேன்.ஆனால் தூக்கம் வரவில்லை.மானிட்டரை ஆன் செய்ய முயற்சி செய்தேன்.ஒரு வழியாக அது இயங்க ஆரம்பித்தது.Dora and the lost city of gold என்ற படத்தைப் பார்த்தேன்.காலை  உணவைத் தவிர்த்து விட்டு விமானம் ஏறி இருந்தோம்.எனவே சாப்பிட்டு  10 மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.பசிக்க 
ஆரம்பித்தது.கொடுக்கப் பட்டிருந்த
மெனுவில் சைவ உணவுகள் இல்லை.இன்று உண்ணா விரதம் தான் என்று நினைத்துக் கொண்டேன். 
                 வரிசையாக உணவு விநியோகம் செய்யப்பட்டது.  எங்களிடம் வந்த போது வெஜிடேரியன்  என்றோம்.சிறிது 
நேரத்தில் வந்தது. டோக்ளா, கீரை,
பீன்ஸ், ஜாம் ,.அத்துடன் சிறு
பன்,பட்டரும்  இருந்தது.காஃபியைத்
தவிர்த்து   ஆரஞ்சு ஜூஸைக்  குடித்தோம். ஐஸ்கிரீம் வந்தது.வயிறு 
நிறைந்தது.ஜன்னல் திரைகள் போடப்பட்டு இருளாக இருந்தது.  எனினும் தூக்கம் வரவில்லை.
விமானத்தின்  மானிட்டர் திரையில் 
சிங்கப்பூர் நேரம், பிரிஸ்பேன் நேரம் இரண்டும் காட்டப் பட்டன. கடந்த தூரம் ,கடக்க வேண்டிய தூரம் ஆகியவையும்  காட்டப் பட்டன.மொத்தம் 8 மணி நேரப் பயணம் என்பதால்  மலைப்பாக இருந்தது. பிரிஸ்பேன் நேரப்படி
5.30 p.mக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.எங்களுக்கு மஃபின் 2
தரப்பட்டது.காஃபி,தேநீரைத் தவிர்த்து தண்ணீர் மட்டும் அருந்தினோம். பொழுதுபோக்குககாக  I am a mother என்ற படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.படம் முடியும் முன்னரே விமானம் சற்று நேரத்தில்
தரையில் இறங்கத் தொடங்கும் என்று அறிவிப்பு வந்து விட்டது.
படத்தை நிறுத்தி விட்டேன்.எட்டாம் 
வகுப்பில் படித்த போது புவியியல் 
பாடத்தில் ஆஸ்திரேலியா இருந்தது.உலக வரைபடத்தையும்,
ஆஸ்திரேலியா வரை படத்தையும்
காட்டி பாடம் நடத்திய எனது ஆசிரியை நினைவில் வந்தார்.இப்போது அதில் காலடி வைக்கப் போகிறோம்.விமானம் தரையைத் தொட்டது.பத்திரமாக வந்ததற்கு  இறைவனுக்கு நன்றி 
கூறினேன்.
                விமானப்  பயணிகள் சென்ற
வழியில் பின் தொடர்ந்தோம்.செல் 
ஃபோனை ஆன் கூட செய்யவில்லை.
இம்மிகிரேஷன் பிரிவை அடைந்தோம். Frequently asked questions in immigration என்ற வீடியோவை  திரும்ப திரும்பப் பார்த்து  கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தயாராக இருந்தோம். அதிகாரி எங்களை அழைத்தார்.
புன்முறுவலோடு எங்கள் பாஸ்போர்ட்
மற்றும் இம்மிகிரேஷன் பார்மைப் 
பார்வையிட்டார். ஒன்றும் கேட்கவில்லை. Thank you என்று கூறி  பாஸ்போர்ட்டைத் தந்தார்.முன்னால் 
சென்றவர்களைத் தொடர்ந்து லக்கேஜ்களை எடுக்கச் சென்றோம்.
சுற்றிக் கொண்டு இருந்த பெல்ட்டில் இருந்த அவற்றை எடுத்துக்
கொண்டோம். இன்டர்நெட்டில்  விமானம் இறங்கியதைப் பற்றி அறிந்ததும் மகன் எங்களை செல் ஃபோனில் திரும்பத்திரும்ப
அழைத்திருக்கிறான்.தொடர்பு கொள்ள முடியாததால்   கலக்கம் 
அடைந்து  ஆஸ்திரேலியாவில் உள்ள சித்தப்பாவைத் தொடர்பு கொண்டு 
பேச , அவர்  பயணிகள் வெளியே
வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலைக் கூறியுள்ளார்.நாங்கள் வெளியேறும் வழியில் நின்று கொண்டு இருந்த மைத்துனர் எங்களைப் பார்த்து விட்டார்.முன்னே வந்து வரவேற்றார். எனது மகனுக்குத்  தகவல் தந்தார்.பின்னர் தங்கை, சிறிய மைத்துனர்
இருவருக்கும் எங்களது வருகையைத் தெரிவித்தார். காரில்  ஏறி  வீட்டை நோக்கிப் பயணம்  செய்தோம்.
                             தொடரும்.

தனிமை இல்லை.

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்  ஆனாலும் தனிமை இல்லை.                    பேர் சொல்ல  பேரக்குழந்தைகள்  பிறந்து விட்டனர் இப்போது.                     விரித்த படுக்கை அதனிலே   விரிப்பே இல்லை.                           பேரன்கள் ஒளியத்  துணையாய் கட்டிலின் அடியில் கிடக்கிறது.       காலையில் விழும்                செய்தித்தாள்    நொடிக்குள் கசங்கி  குட்டி வாய்க்குள் அடைக்கலம்  இப்போது.                                               வீடே சின்னதாய் போனது.               கால் வைக்க இடமே இல்லை.             சின்ன பொம்மைகள் சிதறிக் கிடக்கின்றன இப்போது.
மடியில் தவழ்ந்து  மார்பில் ஏறி தோளில் அமர வந்தனர்  சுட்டிக்குழந்தைகள் இப்போது. 

உணவு ஊட்ட கதையும்
உறங்க வைக்க தாலாட்டும் 
புதிய மழலையர்  பாடலும் 
இணையத்தில் தேடுகிறோம் இப்போது. 
எனைப் பார்க்க வாருங்கள்.          எனப்  பேசும் பேரனின் குரல்
தேனாய் இனிக்கிறது.
கட்டியணைத்து  கொஞ்சி கண்ணாலும் கையாலும்           கவிதை பாடும் பேத்தி
வரமாய்  வந்தாள். 
பேரக்குழந்தைகளுடன் 
கூடி விளையாடும் வேளையில் உலகமே மறந்து போகிறது இப்போது.
எங்கள் கரம் பிடித்து 
நடக்கும் இளந்தளிர்கள்
நாங்கள் தளர்ந்த காலத்தே 
எங்கள் கரம் பிடிப்பர் ஐயமில்லை.
நிறைவே கண்டு  மக்கள்                            குறை காணாது வாழ்ந்தால்                   தனிமை இல்லை எப்போதும். 
மண்ணை விட்டு மறைந்தாலும்  
மனதில் நிற்போம்.                                                         

Wednesday, November 27, 2019

கங்காரு தேசம் 3

சாங்கி விமான நிலையம்
சிங்கப்பூர்  விமான நிலையத்தின்
டெர்மினல் 2ல் நாங்கள் இறங்கினோம்.உள்ளே உட்கார வசதியாக இருக்கைகள் இருந்தன.ஜாய் ஃபுல் சிங்கப்பூர் என்ற பாடல் நினைவிற்கு வந்தது.
அந்த நிலையத்தின் இலவச wifiஐ
பதிவிறக்கம் செய்து கொண்டோம்.
முதலாவதாக பிரிஸ்பேனில் இருக்கும் தங்கை  கணவருக்கு வாட்ஸ் அப் கால் செய்து தகவல் தெரிவித்தோம்.பின் மகனிடம் பேசினோம்.அவன் சாங்கி விமான  நிலையத்தின்  வரைபடத்தை பதிவிறக்கி தந்திருந்தான்.
            காவேரி வெஜிடேரியன் க்யிஸின்  என்னும் உணவகத்தைத் தேடினோம்.பணியாளர் ஒருவர் வழி 
காட்டினார். காஃபி மட்டும் வாங்கினோம்.நம் ஊர் கப் போல இருக்கும் என நினைத்து ஆளுக்கு ஒன்று ஆர்டர் செய்தோம்.அது 3 மடங்கு பெரியதாக இருந்தது. அருந்தி விட்டு  மெல்ல நடந்தோம்.
அடுத்த விமானம் டெர்மினல் 3ல் இருந்து கிளம்பும்.ஆங்காங்கே ட்ராவலேட்டர்கள் இருந்தன. கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தோம்.ஸ்கை ட்ரெயினில் ஏறி T3க்கு வந்து சேர்ந்தோம்.உரிய இடத்தில் வந்து அமர்ந்தோம்.போர்டிங் பாஸ் சென்னையிலேயே தந்து விட்டார்கள்.
   செக்யூரிட்டி செக் முடிந்த பின்     பிரிஸ்பேனில் இறங்கியதும்
அங்கு நாங்கள் தர வேண்டிய இம்மிகிரேஷன்  ஃ பார்ம் சிங்கப்பூரிலேயே தரப்பட்டது.
அதில் எழுத வேண்டிய முகவரி, தொலைபேசி எண் மற்றும்  பிற தகவல்களை ஏற்கெனவே குறித்து 
வைத்து இருந்தோம்.எனவே எளிதாக  நிரப்பி விட்டோம்.அழைப்பு 
வந்ததும்  ஏறினோம்..சரியாக சிங்கப்பூர் நேரம் 9.45 a.mக்கு
விமானம் கிளம்பியது.
                                    தொடரும்.

Tuesday, November 26, 2019

கங்காரு தேசம். 2

வங்கக் கடலில்
‌.              விமானம் சென்னையைக் கடந்து வங்கக் கடலில் பறக்க ஆரம்பித்தது.இருக்கையின் எதிராக   சிறிய மானிட்டர் இருந்தது.அதில் அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் பற்றி கூறப்பட்டன.பணிப்பெண் ஒரு சூடான டவலைத் தந்தாள்.ஆவி பறந்தது . இட்லியாக இருந்தால் வாயில் போடலாம்.இதை என்ன 
செய்வது எனத் தெரியவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்தேன்.
அவர்கள் போலவே உள்ளங்கைகளையும், முகத்தையும் 
துடைத்துக் கொண்டோம்.
மானிட்டரில் படம் பார்க்க இயக்கும் 
முறை தெரியவில்லை.நள்ளிரவு 12 மணி. தூங்கலாம் என நினைத்த போது அறுசுவை மணம் நாசியைத்
துளைத்தது.எங்களுக்கு  தக்காளி சாதம், தயிர்சாதம், பாயாசம், உருளைக் கிழங்குக் கூட்டு,பீன்ஸ் பொரியல், காராமணி சுண்டல், காஃபி வழங்கப் பட்டது.இத்தனையும்
சாப்பிட்டால் சர்க்கரை அளவு எகிறி 
விடும் என மனம் எச்சரிக்கை மணி
அடித்தது.எனவேஅனைத்திலும்   பாதி மட்டுமே சாப்பிட்டேன். உண்ட மயக்கத்தில் உறக்கம் வந்தது.ஒரு மணி நேரத்தில் விழிப்பு வந்து விட்டது.
            கடலில் ஆங்காங்கே சிறுசிறு தீவுகள் இருந்தன.அதில் ஒளி விளக்குகள் புள்ளிகள் போல காட்சி அளித்தது.சற்று நேரத்தில் நகரும் ஒளிப்புள்ளிகள் தோன்றின.அவை கப்பல்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.சிங்கப்பூரின்  அருகில் வந்து விட்டோம் என அறிவிப்பு வந்தது.சீட் பெல்ட் போட்டு உள்ளார்களா என்பதை  பணியாளர்கள் உறுதி செய்து கொண்டனர்.சாய்ந்த நிலைகளில் இருந்த இருக்கைகளை நிமிர்த்தி வைத்தனர்.என் மடியில் வைத்து இருந்த கைப் பையை வாங்கி முன்  
இருக்கையின் கீழே வைத்தார் ஒரு பணியாளர்.விமானம் தரையில் இறங்கத் தொடங்கியது. இந்திய நேரம் 3.25a.m . சிங்கப்பூர் நேரம் 5.55 a.m.வெளியே காலநிலை 21 டிகிரி செல்சியஸ் என்று அறிவிக்கப்பட்டது.கிளம்பியதில் இருந்து 4 மணி நேரத்தில்
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் கால் பதித்தோம்.
                                         தொடரும்.



.

Friday, November 8, 2019

சூடிதார் கனவுகள்

 
            மீரா ஒரு நாள் கிரகப்பிரவேசம் ஒன்றிற்கு செல்ல வேண்டி இருந்தது.அவளுடைய தோழி ஆரப்பாளையத்தில் வீடு வாங்கி இருந்தாள்.அரை நாள் விடுமுறை  எடுத்து  விழாவில் கலந்து கொண்டாள். மதிய உணவிற்குப் பின்னர் கிளம்பினாள்.ஆட்டோவில் சென்றால்  பணிக்கு செல்ல நேரம் சரியாக இருக்கும் என்று  ஏறினாள். வண்டி கிராஸ் ரோட்டைக் கடந்தது.அவள் படித்த பள்ளி அங்கு தான் இருக்கிறது.காலாண்டுத்
தேர்வை காலையில் எழுதி முடித்திருந்த
மாணவிகள் பேருந்து நிறுத்தத்தில்
நின்று கொண்டு இருந்தனர்.சூடிதார்
அணிந்த அவர்களைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்தன.அப்பொழுதெல்லாம் ஒன்பதாம் வகுப்பில்  கண்டிப்பாக பாவாடை, சட்டை , தாவணி தான் அணிய வேண்டும். கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் மூன்றாம் செமஸ்டர் தேர்வு
தேர்வு முடிந்த பிறகு சேலைதான் அணிய வேண்டும்.இப்போது எல்லாம் மாறிவிட்டது.
          ‌‌  மாலையில் வீடு திரும்பியதும் மகளிடம்,"உமா நான் பத்து ஆண்டுகள் கழித்து பிறந்திருக்கக் கூடாதா?" என்றாள்.கல்லூரி மாணவியான அவள்," ஏம்மா?" என்றாள்." நானும் சூடிதார் போட்டிருக்கலாம்.சைக்கிள், டூ வீலர் ஓட்டி இருக்கலாம்." என்றாள் மீரா. " அம்மா, இப்போது கூட சூடிதார் போடலாம்.டூவீலர் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம்". என்றாள் மகள்." எனக்கு  50 வயதாகி விட்டது.இதெல்லாம் சாத்தியமே இல்லை." என்று பெருமூச்சுடன் மீரா கூறினாள்.அதைக் கேட்ட அவளது கணவன்," சூடிதார் போடலாம். டூவீலரில் பின்னால் உட்காரவே பயப்படும் உனக்கு அதை
ஓட்ட ஆசையா?" என்றார்.
        .      .           ஆண்டுகள் சில கழிந்தன.மகன், மகள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.இருவரின் குடும்பங்களும் சென்னையில் இருந்தன.மதுரைக்கும், சென்னைக்கும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருந்தது.மதுரைக்கு வந்த மருமகள் கலா , " அத்தை, உங்களுக்கு ஒரு பரிசு  வாங்கி வந்துள்ளோம்.அதை மறுக்காமல் அணிய வேண்டும்". என்றாள்.அது ஒரு சூடிதார்." ரயில் பயணத்தில் மிடில் பெர்த்தில் ஏற வசதியாக இருக்கும்." என்றாள்.அதை அணிய வைத்து  ஒரு ஃபோட்டோ எடுத்துக் காட்டினாள்.ஒரே ஒரு முறை
ரயில் பயணத்தில் அதை அணிந்தாள்.பிறகு அது பீரோவில் பத்திரமாய் இருந்தது.
                 பணி ஓய்வு பெற்ற பின்னர் மீராவும், கணவர் ரகுநாதனும் வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்பினர்.அமெரிக்காவில் இருந்த தம்பியின் அழைப்பை ஏற்று அங்கு செல்ல முடிவு செய்தனர்.மகள் உமா, மருமகள் கலா இருவரும் மீராவிடம்
விமானப் பயணம் செய்யும்போது சூடிதார் அணிந்தால் வசதியாக இருக்கும் என்றனர்.அந்த ஆடையில் முன்பின் அறியாத மக்களுடன் தான் பயணிக்கப்  போகிறோம்.யாரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று தோன்றியது. முதலில் தயங்கினாலும் பின் அதை ஏற்றுக் கொண்டாள் மீரா.குடும்பத்தோடு   பெயர் பெற்ற கடை ஒன்றிற்குச் சென்று பார்த்து, பார்த்து சூடிதார்களைத்  தேர்வு செய்தனர்.அது மட்டும் அல்லாமல் ட்ரையல் ரூமிற்குள்  சென்று போட்டும்  பார்த்தாள்.கையை நுழைத்தால் தலையை நுழைக்க இயலவில்லை.தலையில் முதலில் மாட்டினால் கையை மாட்ட இயலவில்லை.மருமகள் உள்ளே வந்து போட உதவினாள். மீராவிற்கு சிரிப்பு தாங்கவில்லை." உன் கணவன் குழந்தையாக இருந்த  போது தலை கொஞ்சம் பெரியதாக இருந்தது.அவனுக்கு வட்டக் கழுத்து உடைய பனியன் போட்டு விட இப்படித்தான் பாடுபட்டேன்". என்றாள் ஒரு வழியாக அதை அணியக் கற்றுக்  கொண்டாள். திருமணப் புடவை எடுத்த போது கூட இப்படித் தேடவில்லை.முடிவில் மூன்று செட் சூடிதார்களுடன் வீடு திரும்பினார்கள்.
விமானத்தில் அதை அணிந்து பயணித்த போது உடல் மட்டும் அல்ல மனமும் சந்தோஷத்தில் பறந்தது.