Thursday, December 31, 2020

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 8


ஒரு நாள் இரவு நேரத்தில் வைத்திய நாதனைச் சுற்றி பத்து பேர் அமர்ந்து இருந்தனர்.கல்கத்தாவில் இருந்த போது அந்த நகரத்தைச்  சேர்ந்த வீரர்கள் மூலமாக அவன் நேதாஜியைப் பற்றி  அறிந்து வைத்திருந்தான். எனவே மற்றவர்களுக்கு அவரைப் பற்றி கூற ஆரம்பித்தான்."நேதாஜியின் அப்பாவின் பெயர் ஜானகி நாத் போஸ். அம்மாவின் பெயர் பிரபாவதி. அவர்களுக்கு 14 பிள்ளைகள். அவர்களின் ஒன்பதாவது பிள்ளை நம் நேதாஜி.பெரிய பள்ளி, கல்லூரிகளில் படித்தார். 
லண்டனுக்குப்  போய் ICS படித்து பாஸ் ஆனார். ஆனால்  ஆங்கிலேயரின் கீழ் வேலை பார்க்க மாட்டேன் என்று கூறி விட்டார். சித்தரஞ்சன் தாஸுடன்  சேர்ந்து விடுதலைப் போரில் ஈடுபட்டார்.
 
ஒரு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியின் அகிம்சை முறை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே பதவியை விட்டு விலகினார்.ஆங்கில ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்ட நேதாஜி காசநோய் வாய்ப்பட்டார். மக்களின் கோபத்தைக் குறைக்க அரசு  அவரை வீட்டுச் சிறையில் இட்டனர். ஆனால் ஆங்கிலேயரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு நேதாஜி 1941ல் ஜெர்மனிக்குப் பறந்து விட்டார். ஜெர்மன் நாட்டுப்  பத்திரிகையில் அவரது வருகையைப் பற்றி செய்தி வந்தது.அதன் பிறகுதான் ஆங்கில அரசிற்குத் தெரிந்தது.அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக நேதாஜி தெரிந்தார். இப்பொழுது ஜப்பானில் இருந்து யார் கண்ணிலும் படாமல் நீர் மூழ்கிக் கப்பலில் வந்திருக்கிறார்." என்று வைத்தியநாதன் சொல்ல கூட்டம் கை தட்டி ஆர்ப்பரித்தது. அனைவரும் சேர்ந்து ஜய் ஹிந்த் எனக் குரல் கொடுத்தனர்.
              பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் அனுப்பப்பட்ட வீரர்களில் ஒருவர்," நான் மதுரையில் நேதாஜியைப் பார்த்திருக்கிறேன்". என்றார்.அப்படியா! என்று ஆச்சரியமாகக் கேட்டனர்."ஆமாம்.  1939 செப்டம்பர் 6ஆம் தேதி  நேதாஜி தலைமையில் மதுரையில் ஃபார்வார்டு பிளாக் கட்சி  ஆங்கில அரசை எதிர்த்து மதுரையில் ஊர்வலம் நடத்தியது." என்றார். "நான் 1937ஆம் ஆண்டே ராணுவத்தில் சேர்ந்து மதுரையில் இருந்து கிளம்பி விட்டேன். எனவே எனக்குத் தெரியாது."என்றான் வைத்தியநாதன். மருதவாணன் ,"நான் ஒரு விஷயம்கேள்விப்பட்டேன். உண்மையா ? பொய்யா? தெரியாது.சொல்லட்டுமா?"என்றான்
    " ஹிட்லரைப் பார்க்க நேதாஜி போனார்.அவரை உட்கார வைத்து சற்று நேரத்தில் ஹிட்லர்  வருவார் என்றார்கள். ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். ஹிட்லர் அவரைக் கடந்து போனார்.இரண்டு, மூன்று முறை இவ்வாறு நடந்தது.அவர்கள் ஹிட்லர் போல் வேடமிட்டவர்கள். நேதாஜி கண்டு கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து ஒரு கை அவரது தோளைத் தொட்டது. "ஹிட்லர்! வந்து விட்டீர்களா?"எனக் கேட்டுக் கொண்டே நேதாஜி திரும்பினார். ஹிட்லர்  ஆச்சரியமாகப் பார்த்து "எப்படிக் கண்டு  பிடித்தீர்கள்?"எனக் கேட்டார். "என் தோளைத் தொட்டுக் கூப்பிடும் தைரியம் உங்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்காது." என்றாராம் நேதாஜி." உண்மைதான்" என்று அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். " நாளை நமக்கு நேதாஜியின் கட்டளை வந்து விடும். போய் ஓய்வு எடுப்போம்".என்று கூற ஒருவர் "நேதாஜிக்குத் திருமணம் ஆகி விட்டதா?" எனக் கேட்டார். "ஆமாம். அவரது துணைவியார் எமிலி,ஆஸ்திரியா நாட்டுப் பெண்.அவர்களுக்கு அனிதா போஸ் என்ற பெண் குழந்தையும் உள்ளது"என்று வைத்திய நாதன் கூறினான்.
  பின்பு வீரர்கள் அவரவர் இடங்களுக்குச் சென்றனர்.
                     தொடரும்.

Monday, December 28, 2020

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 7

பர்மாவில் இருந்த ஆங்கில ராணுவம்   போதிய பயிற்சி இல்லாமல் இருந்தது. நம்மை யாரும் தாக்க மாட்டார்கள் என கவனக் குறைவாக இருந்து விட்டார்கள். இந்தியாவில்  இருந்து வந்த ராணுவம் அவர்களுக்குப் பலம் அளித்தது. ஜப்பான், பர்மாவைக் கைப்பற்றினால்  அடுத்து மணிப்பூர் வழியாக இந்தியாவிற்குள் நுழையலாம் எனத் திட்டமிட்டது. எனவே ஜப்பான் படையினர்  பர்மாவைத் தாக்க ஆரம்பித்தனர். ஆங்கில இந்தியப் படைகள் அவர்களை எதிர்த்துப் போராடினர்.  1942ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை கடுமையான போர் நடந்தது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்தனர்.நம்மை வெல்ல யாராலும் வெல்ல முடியாது என்ற ஆங்கிலேயரின் நம்பிக்கை பொய்த்துப் போனது. ஜப்பானின் கை ஓங்கியது. 50,000 வீரர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அரக்கான் காடுகளில் கூடாரங்கள்  அமைத்து அவர்களைச்  சிறையில் இட்டனர். வைத்தியநாதன் நொந்து போனான். வீர மரணம் அடைந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என நினைத்துக் கொண்டான். மருதவாணனின் நிலைமை தெரியவில்லையே என வருந்தினான். ஒரு நாள் காலை குளிப்பதற்கு ஐராவதி ஆற்றுக்குச் சென்று திரும்பிய போது எதிரே வந்த வீரர்கள் கூட்டத்தில் மருதவாணன் இருந்தான்."வைத்தியா"என்றதும் அவனை நோக்கி வைத்தியநாதன் ஓடினான்."மருதா!நீ உயிரோடு இருக்கிறாயா? நான் எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன்.தெரியுமா?"என்று அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்."நானும் தான்"என்றான் மருதவாணன்‌. உடன் வந்த காவலன் பேச விடாமல் இழுத்துச் சென்று விட்டான்.
            ஓரிரு நாட்களில் இருவரும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.காட்டில் விறகு வெட்டும் பணிக்கு அனுப்பப் பட்டிருந்தனர்.பிறருக்குத் தெரியாமல் தள்ளி நின்று பேசினார்கள். "இவர்களிடம் இப்படி மாட்டிக் கொண்டோமே‌.கடவுள் நம்மை ஏன் காப்பாற்றினார்?"என்று மருதவாணன் புலம்பினான் .வைத்தியநாதன்,"மருதா! கடவுள் நம்மை ஏதோ காரணமாகத்தான்  காப்பாற்றி இருக்கிறார்."என்றான். "உன் சப்பாத்தி,சப்ஜி சாப்பிட ஒரு சர்தார்ஜி ஹவில்தார் வருவாரே. அவரும் இங்கே தான் இருக்கிறார்". என்று மருதவாணன் கூறினான். "எங்களது கூடாரத்தில்  வங்காளத்து டாக்டர் ஒருவர் இருக்கிறார். பாவம்.நல்ல மனிதர்."என்றான் வைத்திய நாதன்.பேசிவிட்டு அவரவர் குழுவிற்குச் சென்று வேலையைத் தொடர்ந்தனர். அவர்களைக் கடவுள் காப்பாற்றிய காரணம் ஓரிரு மாதங்களில் தெரிந்தது.
     பல மொழிகள் பேசும் இந்தியர்கள் தங்களுக்குள் நட்பானார்கள்.சில நாட்களுக்குப் பிறகு மோகன் சிங் என்பவர் அவர்களைச் சந்தித்துப்  பேசினார். நாம்  அனைவரும் சேர்ந்து ஆங்கில ஆகாதிபத்தியத்தை எதிர்ப்போம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொரு முகாமிற்கும் சென்று உரையாடினார். ஆங்கிலேயப் படை ராணுவ வீரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக மாறினார்கள்.இந்திய தேசிய ராணுவம் உருவானது.ஆனால் மோகன் சிங்கிற்கு போதுமான உதவி கிடைக்கவில்லை.அடுத்து ஜப்பான் நாட்டில் இருந்த ராஸ் பிகாரி போஸ் தலைமை ஏற்றார். அதுவும்  சரிப்பட்டு வரவில்லை.இதனை  நேதாஜி அறிந்து கொண்டார்.ஜெர்மனில் இருந்த அவர் நீர்மூழ்கிக் கப்பலில் 91 நாட்கள் பயணம் செய்து மலேசியா வந்து சேர்ந்தார் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்."ஒரு துளி ரத்தத்தை எனக்குத் தாருங்கள். நான் உங்களுக்கு  சுதந்திரத்தைத் தருகிறேன்"என்று வீரவுரை ஆற்றினார்.வைத்தியநாதனும், மருதவாணனும் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான வீரர்கள் அவரைத் தலைவராக ஏற்றனர். பர்மா, மலேசியா நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் அவர்களுடன் இணைந்து   கொண்டனர். தமிழகத்தில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 600 பேரை பர்மாவிற்கு அனுப்பி வைத்தார். ஜப்பானும்,ஜெர்மனியும் நேதாஜிக்கு ஆதரவு தந்தார்கள்.
              ஆஸாத் ஹிந்த் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.அதில் நேதாஜி உரையாற்றினார்.டில்லி சலோ என்ற அவரின் கட்டளையைத் தாரக மந்திரமாக வீரர்கள் ஏற்றனர்.நேதாஜி அவர்களுக்கு  சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினார். மாபெரும் வீரனின் தலைமையில் போருக்குத் தயார் ஆனார்கள்.                  
               தொடரும்.

Sunday, December 20, 2020

ஒரு இந்திய தேசிய ராணுவவீரனின் கதை 4 ,5.

 வைத்திய நாதன்  மதராஸ் பட்டினத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தான். பயணம் செய்தவர்கள்  ஒருவருக்கு ஒருவர் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். சிலர் வறுமை காரணமாகவும் சிலர் சாகசங்கள் புரிய விரும்பியும்  சேர்ந்திருந்தனர். 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக் காலத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மதராஸ் மாகாணத்தைக் கைப்பற்றி இருந்தது. அப்பொழுது ஒருவன் பேச ஆரம்பித்தான். " "இப்போது நமது முதல்வர் ராஜாஜி தானே.நாம்  அவரைப் பார்க்க வேண்டும் அல்லவா?"  வைத்தியநாதன் "காங்கிரஸ் பெயரளவில் தான் ஆண்டு கொண்டு இருக்கிறது.ஆங்கிலேயர்கள் கையில் தான் உண்மையான அதிகாரம் உள்ளது.அவரைப் பார்க்க விடமாட்டார்கள்." என்றான்."இப்போது மதராஸ் கவர்னர் யார்?" என்று ஒரு இளைஞன் கேட்டான்." எர்ஸ்கின் பிரபு" என்று வைத்தியநாதன் பதில் கூறினான்.ராணுவ ட்ரக்கில் சென்ற வீரர்களுக்கு  ஆங்காங்கே ஆங்கிலேய முகாம்களில் உணவு வழங்கப்பட்டது. இரவு நேரங்களில் கூடாரம் அமைத்துத் தங்கினர். காலையில் அருகில் உள்ள ஏரி, குளங்களில் குளித்தபின் மீண்டும் பயணம் தொடர்ந்தது. சில தினங்களில் மதராஸ் பட்டினத்திற்கு வந்து சேர்ந்தனர். "ஆங்கிலேயர் கட்டிய இந்தக் கோட்டையைப் பாருங்கள். அழகாக உள்ளது." என்று ஒருவன் கூறினான்.வீரர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கண்டு வியப்பு அடைந்தனர். கவர்னரின் அனுமதி பெற்ற பின் மதராஸ் ராணுவ வீரர்களுடன் இணைக்கப் பட்டனர். வேறு ஊர்களில் இருந்தும் புதிய வீரர்கள் வந்திருந்தனர்.அனைவருக்கும் பயிற்சி தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு கடுமையான உடற்பயிற்சியும் தொடர்ந்து ஓட்டப்பயிற்சியும் செய்தனர். சில மாதங்களுக்குப் பின் துப்பாக்கி  சுடும் பயிற்சி அளிக்கப் பட்டது.காக்கி அரைக்கால்  டிரௌசரும்,சட்டையும், தலையில் தொப்பியும்,கையில் துப்பாக்கியுமாக நின்ற வைத்திய நாதன் கம்பீரமாகக் காட்சி அளித்தான்.        
                           தொடரும்.

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை    5
  
        மறுநாள் உயரமான கட்டிடத்தில் உச்சியில் இருந்து தொங்க விடப்பட்ட கயிற்றின் மேல் சரசரவென ஏறிப் பயிற்சி செய்ய கைகளால் பற்றினான்.பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது."ஏய்!ஏறாதேப்பா.கயிறு அறுந்து விழுந்து விடும்". நிமிர்ந்து பார்த்தால் ஓரிடத்தில் கயிறு நைந்து போயிருந்தது. வைத்தியநாதன் நன்றி சொல்ல திரும்பிப் பார்த்தான். கருப்பு நிறமும்,நல்ல உயரமும், திடகாத்திரமான உருவமும் கொண்ட
ஒரு வீரன் நின்று கொண்டு இருந்தான்.நன்றி என்று கூறி அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கினான். கயிறை மாற்றி விட்டு பயிற்சியைத் தொடர்ந்தான். வைத்திய நாதனுக்கு உதவியவன் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மருதவாணன் என்பதைத் தெரிந்து கொண்டான்.
         மறுநாள் அணிவகுப்புப் பயிற்சியின் போது புதிய வீரர்களில் சிலருக்கு Ieft,right என்னும் போது எந்தக் காலை தூக்கி வைப்பது என்பது தெரியவில்லை. ஒரே குழப்பமாகி விட்டது.வைத்தியநாதன் ஆங்கிலேய அதிகாரியிடம் வந்தான். ஸார்,ஐடியா ஸார்,ஹெல்ப் யூ ஸார்.அவன் ஏதோ செய்யப் போகிறான் என உணர்ந்து தலையை அசைத்தார். ஓடிப்போய் கீழே கிடந்த தென்னை ஓலைகளை எடுத்து அவர்களின் இடது கால்களில் கட்டினான். இது ஓலைக்கால்,அது சீலைக்கால் எனக்கூறி ஓலைக்கால், சீலைக்கால் என்று மாற்றி மாற்றிக் குரல் கொடுத்தான்.சில நிமிடங்கள் கழித்து left,right எனக் கூற சரியாகச் செய்தனர்.அதிகாரி "குட் "என்றார்.
                              ஓராண்டுப்  பயிற்சி நிறைவடைந்தது.காய்ந்த ரொட்டி, கூழ்,கஞ்சி, சோறு எனஎதுவானாலும்  சாப்பிட்டுக் கொண்டான். எல்லாப் பயிற்சிகளையும் ஒழுங்காகச் செய்தான். ராணுவத்தினருக்கு சில நாட்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும்,சில நாட்கள் துறைமுகத்திலும் பணிகள் தரப்பட்டன. ஒரு நாள் ராணுவ உயர் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக வரும்படி ராணுவத் தளபதி அழைப்பு விடுத்தார். கூட்டத்தில் போர்க்காலச் சூழல் நிலவுவதாகவும் உத்தரவு வந்தவுடன் 
ராணுவத்தினர் கிளம்பத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டார். அதன்படி அனைவரும் தயாராய் இருந்தனர். ஜெர்மனி,இத்தாலி,  ஜப்பான் ஆகிய நாடுகள் போரினை ஆரம்பிக்கப் போவதாக உளவுத் துறை தகவல் தெரிவித்தது. சில நாட்களில் ஜெர்மன் படைகள் போலந்து நாட்டை முற்றுகை இட்டது. 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. மதராஸ் ராணுவத்தினர்  கிளம்பத் தொடங்கினர். வைத்தியநாதன் தபால் கார்டு ஒன்றில்  மாமாவிற்குத் தகவல் தெரிவித்தான். மதராஸில் இருந்து கிளம்புகிறோம். இறைவனின் அருள் இருந்தால் மீண்டும் சந்திக்கிறேன் என எழுதி இருந்தான்.அதைப் பார்த்த மாமா கண் கலங்கினார்.
                  தொடரும்.