Monday, October 19, 2026

கிராமத்து நினைவுகள் பாகம் -2

 கீழ்நாட்டுக் குறிச்சி வைப்பாற்றங்கரையில் தான் இருந்தது ஆனால் பெரிய மணல் மேட்டைத் தாண்டி அமைந்திருந்தால் ஆற்று நீரை கண்மாய்க்குக் கொண்டு வர இயவில்லை.எனவே வானம் பார்த்த பூமியாக இருந்தது. பனை மரங்களை வைத்திருந்தவர்களுக்கு அதில் இருந்து கோடை காலத்தில் வருமானம் வந்தது.மீதமுள்ளவர்கள் கருவேல  மரங்களை வெட்டி காயவைத்து கரிமூட்டம் போடுவார்கள்.கரி மூட்டைகளை விற்று வாழ்ந்து வந்தார்கள். கிணறு வைத்திருந்தவர்கள் ஏதோ பெயருக்கு விவசாயம் செய்து குறைவான வருமானமே பெற்றார்கள்.                    டவுனில் இருந்து பிள்ளைகள் வந்திருக்கிறார்கள் என்று அங்குள்ள
ஆச்சிகள் அனைவரும் பார்க்க வருவார்கள்.அவர்கள் வீட்டிற்கு  விருந்திற்கு அழைப்பார்கள்.தவிர்க்க முடியாமல் ஆச்சி அவர்கள் வீட்டில் ஒருநேரம் உணவு உண்ண அனுப்புவார்கள்.எங்களைப் பார்த்ததும்  பாயை விரித்து அமர வைப்பார்கள். தரையில் உட்கார விட மாட்டார்கள். ராமலெட்சுமி என்று ஒரு சிறுமி இருந்தாள்.அவர்கள் வீட்டில் சாப்பிட்டபோது பச்சடிக் குழம்பு பறிமாறினார்கள்.வெண்டைக்காயில் புளி   சேர்த்து சரியான அளவு உப்பு காரத்துடன்  அருமையாக இருந்தது. தொடுகறி வைக்கும் பழக்கம் இல்லை.அதற்கு வசதி வாய்ப்பு இல்லை. பச்சை மொச்சைப் பயிற்றுக் குழம்புடன் இன்னொரு வீட்டில் சாதம் சாப்பிட்டோம்.மற்றோர் வீட்டில் பதநீரில்  செய்த சாதம் தந்தார்கள்.சர்க்கரைப் பொங்கல் போல் இனித்தது.எதிர் வீட்டில் வைக்கும் கம்மங்கூழுக்கும், புளிமிளகாய்க்கும் அடிமையாகிப் போனோம்.அவர்களுடன்  அமர்ந்து உண்ட காலத்தை மறக்க இயலாது.
   எங்கள் புளியமரம் அந்த ஊரின் தொடக்கப் பள்ளியின் எதிரில் இருந்தது.குழந்தைகள்  கல்லால் அடித்து புளியம் பழங்களை எடுத்துச் சாப்பிடுவார்கள்.மீதமுள்ள பழங்களை ஆச்சி ஆள் வைத்துப்  பறிப்பார்கள்.பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியோடு தோட்டை உடைத்து கொட்டையை நீக்குவோம். மதுரைக்கு கொண்டுவர தயாராக்கி விடுவோம்.
                  ஒரு வருடம் புளியம் பழங்களை வீட்டிற்குள் போட்டுவிட்டு ஆச்சி அதன் மேல் கயிற்றுக்கட்டிலை போட்டு படுத்து விட்டார்கள்.  நாங்கள் மூன்று பேர் கீழே படுத்திருந்தோம் நாங்கள் காலையில் கண்விழித்தபோது எதிர் வீட்டில் இருந்தோம்.ஆச்சி ஓடி வந்தார்கள். எந்த சாமி புண்ணியமோ உங்களுக்கு ஆபத்து நேரவில்லை என்று கூறி கண் கலங்கினார்கள்.இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது கட்டிலுக்கு அடியில் சரசர என சத்தம் கேட்டிருக்கிறது.மின்சார வசதி இல்லாததால் லாந்தர் விளக்கை  இலேசான தீபத்துடன் வைத்திருந்தார்கள்.அதை உயர்த்தி கட்டிலுக்கு அடியில் பார்க்க நாகம் ஒன்று ஊர்ந்து சென்றது.கால்களின் சத்தம் கேட்ட அது அருகில் இருந்த சாக்குகளுக்கு அடியில் பதுங்கிக் கொண்டது.கதவைத் திறந்து குழந்தைவேல் என ஒரு குரல் கொடுத்ததுமே அவர் ஓடி வந்து விட்டார்.அவரை நிற்க வைத்து விட்டு ஆச்சி எங்கள் மூவரையும் தூக்கிச் சென்று எதிர் வீட்டில் படுக்க வைத்து விட்டு அதை அடித்து விட்டார்கள்.  அதை அண்ணன் புதைத்துவிட்டு இடத்தை அடையாளப்படுத்த  கல் ஒன்றை வைத்து விட்டு வந்தாராம்.அடுத்த நாள் ஆச்சி அங்கு போய் பாலூற்றி வந்தார்கள்.   மற்றோர் நிகழ்வை அடுத்த பகுதியில்  பார்க்கலாம்.
                   நினைவுகள் தொட.ரும்.


Sunday, October 18, 2026

கிராமத்து நினைவுகள் பாகம் 1

என்னுடைய அப்பாவின் தாயார் லெட்சுமி அம்மாள்.அவர்களது பூர்வீக கிராமம் கீழ்நாட்டுக்குறிச்சி.அது வைப்பாற்றங்கரையில் அமைந்துள்ள
குக்கிராமம் ஆகும்.ஆற்றங்கரையில் அவர்களுக்கு சொந்தமான நிறைய பனைமரங்களும், ஒரு புளிய மரமும் இருந்தன.எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து நானும்,என் தங்கைகளும் கோடை விடுமுறையில் அங்கு சென்று விடுவோம்.ஆச்சிக்கு சொந்தமான ஓட்டு வீடும் அங்கிருந்தது.  
         சமையல் செய்யத் தேவையான சில பாத்திரங்களும் இருந்தன. கீழ்நாட்டுக்குறிச்சிக்குச் செல்ல அருப்புக்கோட்டையில் இருந்து கோவில் பட்டி செல்லும் வழியில் தாப்பாத்தி என்ற ஊரில் இறங்கி அரைமணி நேரம் வயல் வெளிகளுக்கு நடுவில் நடந்து
செல்ல வேண்டும்.அல்லது முத்துலாபுரம் செல்லும் பேருந்தில் ஏறி முத்துலாபுரத்தில் இறங்கி  வைப்பாற்றுக்குள் நடந்து சென்று மறுகரையில் உள்ள கீழ்நாட்டுக்குறிச்சிக்கு சென்று விடலாம்.
                 பனை மரங்களை குத்தகைக்கு விட்டிருந்தார்கள்.ஓராண்டுக்கு இத்தனை படி பதநீர், இத்தனை வட்டுக் கருப்பட்டிகள்  எனப் பேசி இருப்பார்கள்.நாங்கள் கோடை விடுமுறைக்கு செல்லும்போது அவை கிடைத்து விடும்.காலை எழுந்த உடன் ஆற்றுக்குச் சென்றுவிடுவோம்.குடி நீருக்கும் பிறதேவைகளுக்கும் ஊற்று நீரை முகர்ந்து வரவேண்டும். எனவே ஆச்சி பெரிய குடத்துடனும்.நாங்கள் சிறிய குடங்களுடனும் செல்வோம்.கோடையிலும் ஆற்றில் குளிக்க துவைக்க போதுமான நீர் ஓடிக் கொண்டிருக்கும். குளித்து துவைத்து.ஊற்றில் நீரை எடுத்துக் கொண்டு கரையில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபட்டு விட்டு பனந்தோப்புக்குச் சென்றுவிடுவோம்.
பனைமரங்களின் சலசலப்பைக்கேட்டுக் கொண்டே அங்கு அமர்ந்துவிடுவோம்.குத்தகைக்கு எடுத்தவர் பனை ஓலையால் செய்யப் பட்ட கோப்பையில் பதநீரை ஊற்றித் தருவார்.பனை மட்டையில் குடித்த அந்தப் பதநீரின்  ருசி இன்றும் என் நினைவில் நிற்கிறது. பதநீரைக் காய்ச்சி  கருப்பட்டி செய்வதையும் சில நேரங்களில் பார்த்திருக்கிறேன்.  
              எங்களுடைய வீட்டுக்கு நேரே இருந்த வீட்டை கரையாளப் பிள்ளை வீடு என்று சொல்வார்கள்.அவர்கள் வீட்டில் என்னை விட வயதில் மூத்த குழந்தைவேல் அண்ணனும்,அவரது இரு சகோதரிகளும் இருந்தனர்.லெட்சுமி,சங்கரி என்பது அவர்கள் பெயர்கள். எங்கள் தெருவில் அனைவருமே சைவர்கள்   தான்.எங்களது அடுத்த வீட்டில் ஜோதிடம் கூறும் ஐயர் தாத்தா இருந்தார்.அவரைத் தேடி பல ஊர்களில் 
இருந்தும் வருவார்கள்.அவரது மகள் பேபி அத்தை உடற்குறைபாடு உடையவர்கள்.எனவே தாத்தாவின் மகன் வழிப்பேரன் ரமேஷ் அத்தைக்குத் துணையாக  இருந்தான்.என்னை விடச்சிறியவன். காளியம்மாள் என்ற என் வயதை ஒத்த சிநேகிதியும் கிடைத்தாள்.மாலை இருள்
கவியத் தொடங்கியவுடன் தெருவில்  கூடி விடுவோம். நொண்டி ஆட்டம்,கல்லா  மண்ணா? ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூத்ததாம் என பல விளையாட்டுக்கள்  விளையாடுவோம்.சிறுவர்கள் சடுகுடு விளையாட்டைப் பாடிக்கொண்டே விளையாடுவார்கள்."நான் தான் வர்ரேன்டா.நல்லமுத்து பேரன்டா.தங்கப் பிரம்பெடுத்து தாவி ஓடி வர்ரேண்டா.வைரப் பிரம்பெடுத்து விளையாட வர்ரேண்டா"என்னும் பாடலை இன்றும் நினைக்கிறேன்.சொட்டாங்கல் விளையாடும் போதும் பாட்டுப் பாடுவார்கள்.அந்தப் பாடல் நினைவில் இல்லை.
                   தொடரும்.
 




Wednesday, September 2, 2026

பூமராங்

80 வயதைக் கடந்த ஓய்வு பெற்ற ஆசிரியை பாரிஜாதம் படுத்த படுக்கையாய்க் கிடந்தார்.பகலில் ஒரு வேலைக்காரி இருந்தார்.சமையல் செய்து ஊட்டி விட்டு இரவு துணைக்கு நர்ஸ் வரும் வரை இருப்பார்.காலை நேரத்தில் இருவரும் சேர்ந்து குளிப்பாட்டி ஆடைமாற்றி விடுவார்கள். மகன்  பார்த்திபன் சற்று தொலைவில் தான் தன் மனைவி மகனுடன் இருந்தான். பாரிஜாதம் நடமாடிக் கொண்டிருந்த காலத்திலேயே மாமியாருக்கும் மறுமகளுக்கும் ஆகாமல் போய்விட்டது. தன் கணவனை அம்மாவைப் பார்க்க விடாமல் செய்து விட்டாள்.ஆனாலும்  பார்த்திபன் வேலைக்குப் போகும் வழியில் ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் போவான்.மகள் லாரா திருமணமாகி மும்பையில் இருந்தாள்.பல வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை.அவளும்,அவளது கணவனும் இரு மாதங்களுக்கு ஒருமுறை வந்து பார்த்து விட்டுப் போவார்கள்.  
          பாரிஜாதம் அழுது கொண்டிருந்தாள்.வேலைக்காரி மரகதம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டதும் நான் இளமையில் செய்த பாவங்களால் தான் 
இப்போது இப்படி கஷ்டப் படுகிறேன் என்றாள்.அப்படி என்ன செய்தீர்கள் என்று கேட்டாள் மரகதம். இந்துவான நீங்கள் கிறிஸ்தவராகிய லாரன்ஸ் சாரைக் காதல் திருமணம் செய்தது பெரிய பாவம் ஒன்றுமில்லை  என்றும் கூறினாள். அதற்கு பாரிஜாதம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அது தெரிந்தும் நான் திருமணம் செய்து கொண்டேன்.அது மட்டுமல்லால் அவர்களை பார்க்க போகக் கூடாது தடை போட்டு விட்டேன்.அவர் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் செலவிற்குப் பணம் கொடுத்தே தீருவேன் எனப் பிடிவாதமாக தன் நண்பர் மூலமாக தான் இறக்கும் வரை கொடுத்துக் கொண்டேதான் இருந்தார். அந்த நேரத்தில் அவர் மகனும் வேலைக்குப் போய் விட்டான்.எனவே என்னிடம்  பணம் கேட்டு வரவில்லை.திருமணம் ஆகும்போது நான் தனியார் பள்ளியில் குறைந்த ஊதியத்தில்தான் வேலை பார்த்தேன்.ஏதோ நல்ல வேளையாக அரசுப் பள்ளியில் வேலை கிடைத்தது.இன்று ஓய்வுஊதியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.நான் செய்த பாவத்தால் தான் இன்று இப்படி  பார்க்க ஆளில்லாமல் நடமாட முடியாமல் கிடக்கிறேன்  என்று அழுது தவித்தார். மரகதம்,  டீச்சர் நீங்கள் அந்தப் பையனை வரச் சொல்லிப் பேசுங்களேன் என்றாள்.அவன் பெயர் கூட எனக்குத் தெரியாது.எந்த ஊரில்  இருக்கிறார்கள் என்றும் தெரியாது.அவரது மனைவி மறைந்து விட்ட தகவல் மட்டும் எனக்குத் தெரியும்.நான் முன்னரே சந்தித்து மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.நான் பெரிய தவறு செய்து விட்டேன்.இன்னும் எத்தனை நாட்களுக்கு  இந்த அவஸ்தைப்படப் போகிறேனோ என்றாள் பாரிஜாதம்.வினையை விதைத்தவன் வினையை அறுத்துத் தானே ஆகவேண்டும். 


Monday, March 16, 2026

நீளாயுள்.

நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை.இறையருளால் அருமையான மகன் ,மருமகள்,இரு பேத்திகள்.மேலும் அன்பான மகள்,மருமகன்,இரு பேரன்கள் உள்ளனர்.என்னால் இயன்ற வரை அவர்களுக்கு உதவியாக இருக்கிறேன்.எப்போது கோவிலுக்குப் போனாலும் என் பேரன்கள், பேத்திகள் நன்றாகப் படிக்க வேண்டும்.அவர்கள் கல்லூரியில் எதில் சேரப் போகிறார்கள் என்பதை அறியும் வரை நீளாயுள் கொடு என வேண்டுவேன்.தற்போது வேண்டுதல் மாறி விட்டது.இந்த உடலும் 
மூளையும் இயல்பாக வேலை செய்யும் போதே என்னை எடுத்துக் கொள் என வேண்டுகிறேன்.ஏன் தெரியுமா? என் ஒன்று விட்ட அத்தையைப் பார்த்தேன்.எண்பது வயதைத் தாண்டியவர்கள்.அல்ஸீமர் என்ற மறதி நோய் வந்துவிட்டது. ஒரு பேரன் பொறியியல் பட்டதாரி.வங்கிப் பணி.மற்றும் பேத்தியும் பொறியியல் பட்டதாரி.ஒரு பேரன் மருத்துவ மேல்நிலைப் பட்டதாரி.கடைசிப் பேரனும் மருத்துவராகி விட்டான்.என் அத்தைக்கு
இவை எல்லாம் தெரியுமா என்பதை நான் அறியேன்.அவர்களுக்கு எல்லா நேரமும் ஒரு உதவியாள் தேவை.அவர்களுக்கு இரு மகன்கள்  மட்டுமே உள்ளனர்.மகள் கிடையாது.ஆனால் மருமகள்கள் இருவரும் மகள்களை  விட மேலாகப் பார்த்துக் கொள்கிறார்கள். உதவி செய்ய நர்ஸ்  ஒருவரும் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.பேரனின் கல்யாணத்திற்கு அவர்களை  நாற்காலியில் அமர்த்தித் தூக்கி வந்து உட்கார வைத்திருந்தார்கள்.வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தார்கள். அருகில் சென்று பேசினேன். அவர்களுக்கு  என்னைத் தெரியவில்லை. இரு வருடங்களுக்கு முன்னால் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அத்தை எனக் குரல் கொடுத்தவுடன் வாசலில்  கண்ணம்மா சத்தம் கேட்கிறது என்று கூறிவிட்டார்கள்
 கண்ணம்மா  எப்படி இருக்கிறாய்? மகன்,  மகள் நன்றாக இருக்கிறார்களா என விசாரிக்கவும் செய்தார்கள்.அத்தைக்கு  மறதி நோய் 
என்றீர்கள்.என்னைத் தெரிகிறதே என்றேன்.அவர்களுக்கு பழைய நினைவுகள் உள்ளன.நோய் வந்தபின் 
நடக்கும் நிகழ்ச்சிகள்  மறந்துபோய் விடுகின்றன என்றும்,தற்போதைய நினைவுகள்  இல்லை என்றும் கூறினார்கள்.என்னுடைய அத்தை என் நினைவில் ஒரு கம்பீரமான ஆசிரியை.எனக்கு ஆசிரியப் பயிற்சிக்கு விண்ணப்பம் வாங்கி வந்து படிக்கச் செய்தவர்.என் வாழ்க்கைத் துணைவரைத் தேடி எங்கள் வீட்டில் அறிமுகம் செய்தவர்.அவர் அறிவுரைகளை இன்றும் நடைமுறைப்  படுத்துகிறேன்.உதாரணமாக. ஒன்று. பள்ளிக்கு  விடுமுறை என்றாலும் அதிகாலையில் எழுந்து விடவேண்டும். பணி ஓய்வு பெற்றபின்னும் அது தொடர்கிறது.அனைவருக்கும் விடுமுறை என்றாலும் எனக்குத்  தூக்கம்
வராது. அதிகாலை 4.45 அல்லது 5 மணிக்கு எனக்கு விழிப்பு வந்துவிடும்.   
         அத்தையைக் கண்ட பின்புதான்  என்னுடைய கை ,கால்களும், மூளையும்  நன்றாக இருக்கும்போதே இறையடி  சேர வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்கிறேன்.அண்மையில் சகோதரர் ஒருவர் முகநூலில் பதிவு செய்திருந்தார். "இரவில் தூங்கும் போது நாம்அறியாமல்   உயிர் பிரிந்தால் அது சிலருக்கு மட்டும் இறைவன் தரும் பம்பர் பரிசு"  அப்படி ஒரு பம்பர் பரிசு கிடைத்தால் நன்றாக இருக்கும். 

 

.