Saturday, February 20, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 15

இந்திய தேசிய ராணுவ வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆடலும்,பாடலும் களை கட்டியது. அனைவருக்கும் சிறையில் இருந்து 
விடுவிக்கப் பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவர்கள் பார்த்த வேலைக்கான சம்பளமாக சிறிதளவு பணமும் கொடுக்கப் பட்டது. சிறை அதிகாரிகளிடம் நன்றி கூறி விடை
பெற்றனர்.பர்மாவின் காடுகள் வழியாக நடந்தனர்.ஆங்கிலேயப் படை வீரர்களாய் அங்கு வந்ததையும், ஓராண்டுக்குப் பிறகு நேதாஜியின் தலைமையில் போரிட்டதையும் நினைவு கூர்ந்தனர். ஆங்காங்கே  கட்டிட இடிபாடுகளையும் கண்டனர். குண்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரைகுறையாய் எரிந்த மரங்கள் போருக்குச் சாட்சியாய் நின்றன.மாட்டு வண்டிகள்,குதிரை வண்டிகளில் சென்றவர்கள் தங்களுடன் வருமாறு அழைத்தபோது பிரிய மனமின்றி மறுத்து விட்டனர்.சிறு கிராமங்களின் வழியே சென்றபோது தேவையான உணவுப் பொருட்களை விலைக்கு  வாங்கி சமைத்து உண்டனர். மணிப்பூரின் எல்லையில் காலை வைத்ததும் ஆனந்தக் கூத்தாடினர்.மண்ணில் விழுந்து புரண்டனர்.பாரத் மாதா கி ஜய் ,ஜய்ஹிந்த் என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.தங்களுடைய ராணுவச் சீருடையில் கம்பீரமாக வந்த அவர்களைப் பார்த்த கிராமத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.வைத்திய நாதன் ஒரு பெரியவரிடம்,"எங்களைப்
பற்றித் தெரியுமா?எனக் கேட்டான். அவர்,"எங்கள் ஊரில் ஒரு ரேடியோப் பெட்டி உள்ளது.அதில் நேதாஜி பேசியதைக் கேட்டிருக்கிறோம்.அது
மட்டுமல்ல BBC யில் உங்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள ஒரு  தொடர் நிகழ்ச்சி நடத்தினர் இங்கிலீஷ் தெரிந்த இந்தப் பையன் தான் எங்களுக்குச் சொல்வான்." என்றார்.அவர் காட்டிய பையனுடன் கை குலுக்கினான் மருதவாணன். "அந்த நிகழ்ச்சியை ஆங்கில அரசு தடை செய்து விட்டது.எனவே கொஞ்சம் தான் கேட்டோம்."என்றான்
அந்தப் பையன்.பிறகு அங்கிருந்து கிளம்பினார்கள்.முஸ்லிம் வீரர்கள் நிறைய இருந்தனர்.மேற்கு பாகிஸ்தான் வழியாகத் தான் நடந்து வந்தனர்.எல்லோரும் மத வேறுபாடின்றி அவர்களை விடுதலை வீரர்கள் என நன்றாக நடத்தினர். கல்கத்தா நகரம் வந்து விட்டது. ட்ராம் வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. இனி  அவரவர் ஊர்களை நோக்கிச் செல்ல வேண்டும்.கைகுலுக்கிப் பிரியாவிடை  பெற்றனர். அவர்கள்  குழுவில் தமிழர்கள் பத்து பேர் இருந்தனர்.அதிலும் 6 பேர் மதுரை   மற்றும் மதுரையை ஒட்டியுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள்.தேநீர் அருந்த ஒரு கடையில் அமர்ந்தனர். அதை ஒரு மலையாளி நடத்தி வந்தார்.எவ்வாறு மதுரைக்குச் செல்வது எனப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார். "பாண்டி  நாட்டுக்கா? சேச்சா!ஞான் ஒன்னு  பறையும். பறையட்டா?" என்றார்."பறையும்". என்றான் மருதவாணன். கல்கத்தாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் கனரக வாகனங்களுக்கான  எஞ்ஜின் தயாரிப்பதாகவும் வசதி படைத்தவர்கள் அதை வாங்கி மதராஸ் நகரில் புதிதாகத் துவங்கப் பட்டுள்ள அசோக் மோட்டார்ஸ் கம்பெனிக்கு கொண்டு சென்று வாகனங்களாக மாற்றுவார்கள் என்றும் அவர் கூறினார்.டிரைவர் இருக்கை மட்டுமே இருக்கும். சக்கரங்கள் பொருத்தப்பட்ட  நீள் சதுர இரும்பு எஃகு சட்டங்கள்  இருக்கும் என்றும் அவை மதராஸ் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். அவருக்கு நன்றி கூறி சில நாட்கள் தங்கினர்.எதிர்பார்த்த அந்த மோட்டார் வாகனம் வந்தது.
அதன் ஓட்டுநரிடம் மருதவாணன் "ஐயா,நாங்கள் INA வீரர்கள்.மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை அழைத்துச் செல்ல முடியுமா?"எனப் பணிவுடன் கேட்டான்.அவரும் ஒத்துக் கொண்டார். தபால்,தந்தி முறை ஏற்கனவே வந்து விட்டது.குறிப்பிட்ட சில இடங்களில்  மட்டும் பேருந்து வசதியும்,  ரயில் போக்குவரத்து வசதியும் இருந்தன.பர்மாவில் இருந்த போது தங்கள் குடும்பங்களோடு தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்தனர். இப்போது ஒரு போஸ்ட் கார்டில் தாங்கள் வருவதாக எழுதி அனுப்பினர்.மொட்டை வண்டியின் ஃபிரேம் பகுதி  உட்கார மிகச் சிறியதாகத் தான் இருந்தது.  சாய்மானம்,பிடிமானம் ஏதும் இல்லை. ஒரு கயிறால் கால்களை ஃபிரேமில் கட்டிக் கொண்டனர்.பல  நாட்கள் கழித்து மதராஸ் வந்து சேர்ந்தனர். மாட்டு வண்டி,குதிரை வண்டி என கிடைத்த வாகனங்களில் பயணம் செய்தனர். நீண்ட தூரம் செல்லக் கூடிய பேருந்துகள் இல்லை.ஒரு வழியாக மதுரை வந்து  விட்டனர். மருதவாணன் தன்னுடைய முகவரியைக் கொடுத்து கடிதம் எழுதச் சொன்னான்.பிரிய மனமின்றிப் பிரிந்தனர்.         மாமாவின் பழைய வீட்டிற்குச் செல்ல அங்கு யாரோ இருந்தனர்.ஆனால் அவர்கள்,"வாங்க! மிலிட்டரித் தம்பி." என வரவேற்றனர்.மாமா வீட்டிற்குக் கூட்டிச் சென்றனர்.38/39, சைவாள் காம்பௌண்ட் ,மணிநகரம் என்று  பெயரிடப்பட்ட  கட்டிடத்திற்குள்  நுழைந்தனர். இரு புறமுமாக 25 வீடுகள் இருந்தன. ஒரு பையன்,"பட்டாளத்து மாமா வந்து விட்டார்".என்று குரல் கொடுக்க அத்தனை வீடுகளிலும் இருந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்   ஓடி வந்துவிட்டனர். அத்தையும், பக்கத்து வீட்டு அம்மாவும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அனைவரும் அன்புடன் விசாரித்தனர்.மாமா,"வைத்தியநாதா!  வந்து விட்டாயா?உன்னைப் பற்றி எவ்வளவு கவலைப்பட்டோம் தெரியுமா?  உன் கடிதத்தைப் படித்த பின்தான் நிம்மதியாய் இருந்தது."என்றார். மறுநாளே அக்கா,கணவர் மற்றும் குழந்தைகளுடன் பார்க்க வந்து விட்டாள்.மாமா கடிதம் எழுதியதாகவும்,நெல்பேட்டைக்கு வந்த வண்டியிலே அத்தானுடன் வந்து விட்டதாகவும் கூறினாள். மதுரையில் ஸதர்ன் ரோட்வேஸ் என்ற பெயரில்  இயங்கிக் கொண்டிருந்த T.V.S பேருந்து நிறுவனத்திற்கு  ஓட்டுநர்கள் தேவை என விளம்பரம்
வந்தது.மருதவாணன் தற்செயலாக வைத்தியநாதனைப் பார்க்க மதுரைக்கு வந்தான். நண்பர்கள் இருவரும்  பணிக்கு விண்ணப்பித்தனர். இருவருக்குமே 
ஓட்டுநர் பணி கிடைத்து விட்டது. 
மாமாவின் மகள் லெட்சுமியைக் கரம் பிடித்தான். ஓய்வு நேரத்தில்அவர்கள் குடியிருப்பில் இருந்த சிறுவர், சிறுமியர்களுக்கு நேதாஜியின் வீரதீரச் செயல்கள் பற்றி கதைகதையாய்க் கூறுவான்.  "மிலிட்டிரி மாமா! ஆங்கிலேயருடன் எப்படி சண்டை போட்டீர்கள்?உங்களுக்கு நிஜமாகவே துப்பாக்கியால் சுடத் தெரியுமா?நேதாஜியை நேரில் பார்த்திருக்கிறீர்களா?" என்று அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க பதில் கூறினான். சின்னஞ்சிறு குழந்தைகளின் மனதில் நேதாஜியை பதியச் செய்தான். தேசபக்தியையும் வளர்த்தான்.மருதவாணனுக்கும்  திருமணம் முடிந்தது.நண்பர்கள் இருவரும் தங்கள் மனைவி,  குழந்தைகளோடு சுதந்திர இந்தியாவில் மக்களோடு மக்களாய்  மக்களாட்சி   மலர்ந்த பாரதத்தில் வாழத் தொடங்கினர். 
                        முற்றும்.

Monday, February 15, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 14

இந்திய தேசிய ராணுவ வீரர்கள்
தங்களுக்குக்  கொடுக்கப்பட்ட பணியை திறம்படச் செய்தனர்.ஒரு சில நாட்களுக்குப் பின்னர் அடுத்த தகவல் கிடைத்தது. இந்திய தேசிய ராணுவ வீரர்களைப் பாதுகாக்க குழு  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அதில் ஜவஹர்லால் நேரு மற்றும் வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.  வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதே அது.

            (பிரேம் செகல். பின்னாளில் பெண்களின் படைத்தளபதி லெட்சுமியை மணந்தவர்.)
i
             (ஷா நவாஸ்கான்)
(குரு பக்ஷ் தில்லான்)
. டில்லி செங்கோட்டைக்கு மூன்று தளபதிகளையும்  கொண்டுவந்து  நிறுத்தினர்.  விசாரணை தொடங்கியது. அவர்கள்  மூவரும் இந்து, இஸ்லாம், சீீீீீக்கியம் என்ற மூன்று மதங்களைச் சார்ந்தவர்கள். பற்றாக்குறைக்கு இந்திய மக்களின் உணர்வுபூர்வ இடமான செங்கோட்டையில் வழக்கு நடந்தது.  அங்கு வைத்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கினால் இந்தியர்கள் பொங்கி எழுவார்கள் என்ற பயம் ஆங்கில அரசாங்கத்திற்கு வந்து விட்டது.                         ஒரு நாள் வைத்திய நாதன், "வீரர்களே!ஒரு மகிழ்ச்சியான செய்தி.நமக்காக இந்தியா முழுவதும்  INA தினம் கொண்டாடினார்களாம். ஊர்வலம் நடத்தினார்களாம்.கல்கத்தா,பம்பாய்,சென்னை,விசாகப்பட்டினம்  ஆகிய இடங்களில் உள்ள கப்பல் படை வீரர்கள் இனிமேல் ஆங்கில அதிகாரிகளின் ஆணைப்படி நடக்கமாட்டோம் எனக் கூறிவிட்டார்களாம்."என்றான்.மருதவாணன்,"ஒரு  துக்ககரமான செய்தியும் உள்ளது.ஆங்கிலேயர் INA தினத்தன்று ஊர்வலம் சென்றவர்கள்  மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.அதில் 35 பேர்  இறந்து விட்டனராம்." என்றான். "கடவுளே! எங்களுக்காக முன்பின் தெரியாதவர்கள் உயிர் நீத்திருக்கிறார்களே.அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்." என்றான் ஒருவன்.  திறமையான வாதத்தால்  வழக்கின் முடிவில் தளபதிகள் மூவரும் விடுவிக்கப் பட்டனர். சில நகரங்களில் சிறை வைக்கப்பட்டிருந்த  வீீரர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். செய்தியை அறிந்த வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  பாரதம் இந்தியா,பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு விடுதலை பெறுகிறது என்பதைக் கேட்டதும்  வருத்தம் அடைந்தனர். "இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் தானே  நாம் போராடினோம். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்த நம்மைப் பிரித்து விட்டார்களே. " என்று மருத வாணன் புலம்பினான். "இந்த ஆங்கிலேயர்கள் நம்மை பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிக்க. ஆரம்பித்து விட்டனர்".என்றான் வைத்திய நாதன். எல்லைப் பகுதிகளில் நடந்த மதக் கலவரங்களைப் பற்றிய செய்திகள் வந்ததும் கண்ணீர் விட்டனர்.  1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. சுதந்திர இநதியாவைக் காண்பதற்கு நேதாஜி இல்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது.தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால்  வெளிநாடுகளில் சிறையில் வைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தினரை விடுதலை செய்யும் முயற்சியில் இறங்கினார். ஆங்கில அரசாங்கம்  பர்மா சிறை அதிகாரிகளுக்கு  இந்திய தேசிய ராணுவ வீரர்களை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தது.சிறை அதிகாரிகள் ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு விடுதலைச் சான்றிதழ்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அத்துடன் அவர்கள் செய்த வேலைகளுக்கு ஏற்ப ஊதியத்தையும்  கணக்கிட்டனர். பல குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவாக விடுதலை செய்தனர்.நாடு விடுதலை அடைந்து பல மாதங்களுக்குப் பிறகு அவர்களது குழுவை விடுதலை செய்ய உத்தரவு  வந்தது.பாரத் மாதா கி ஜய்  என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.
                                   தொடரும்.                 

Wednesday, February 10, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 13.

போர்க் கைதிகள் அனைவரையும்    பர்மாவில் இருந்த விமான நிலையத்தின் விரிவாக்கப் பணியில்  அமர்த்த ஆங்கில அரசு உத்தரவிட்டது.இரண்டாம் உலகப் போருக்காக அந்த விமான நிலையத்தில் சிறிய அளவில் எல்லா வசதிகளும் ஏற்படுத்தப் பட்டிருந்தன. காலை உணவு சாப்பிட்டவுடன் மதிய உணவை ஈயத்தூக்கு வாளியில் வாங்கிக் கொண்டு கிளம்ப வேண்டும்.  இருட்டாகும்  வரை வேலை பார்க்க வேண்டும். கடுமையாக  வேலை வாங்கினார்கள்.ஒரு நாள் வைத்தியநாதன் சமையல் செய்து கொண்டிருந்த இடத்திற்கு தற்செயலாக வந்தான்.பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது.அரிசியில் புழுக்களும்,வண்டுகளும் இருந்தன. பெயருக்கு ஒரு தடவை தண்ணீரில் கழுவி சமையல்காரர் உலையில் போட அவை மிதந்தன. கொதித்து எழுந்தான் வைத்தியநாதன். "அரிசியை  நன்றாக சுத்தம் செய்து போடு.நாங்கள் சாப்பிடுவதா?வேண்டாமா?"என்று கேட்டான். சமையல்காரனோ,"உங்களுக்கு புண்ணியத்துக்கு சமைத்துப் போடுகிறோம். வாயை மூடிக் கொண்டு போ" என்றான். அதற்குள் மருதவாணனும் வந்து விட்டான். "என்ன?புண்ணியத்துக்கு சமைக்கிறாயா? நாங்கள் சும்மா உட்கார்ந்து சாப்பிடவில்லை. காலையில் இருந்து இருட்டும் வரை 
வேலை பார்க்கிறோம்.அரசாங்கம் உனக்கு  எங்களுக்கு சமைத்துப் போட சம்பளம் கொடுக்கிறது."என்று மருதவாணன் சத்தம் போட்டான்
அதற்குள் வீரர்கள் சேர்ந்து விட்டனர்.ஒருவர், "சமையலுக்கு ஆள் வேண்டாம்.நாங்களே சமைத்துக் கொள்கிறோம் என்று வார்டனிடம்
சொல்லி விடுவோம்". என்றார். அவ்வளவுதான் சமையல்காரன் "அய்யா! நான் பிள்ளைகுட்டிக்காரன் என்னை வேலையில் இருந்து தூக்கச் செய்து விடாதீர்கள்."என்று கை கூப்பினான்."சரி.நாங்கள் சமையல் செய்கிறோம்.நீ  சும்மா இருந்தால் போதும்." என்று வைத்தியநாதன் கூறினான்.மறுநாள் 
 அதிகாலையிலேயே  4,5 வீரர்களோடு  வந்து  விட்டான் வைத்தியநாதன்.ஒரு நாளுக்கு பத்துபடி அரிசி அவர்கள் முகாமுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. பெரிய தட்டுகளில் அதைப் பிரித்து புழுக்களையும் வண்டுகளையும்  நீக்கி கழுவிக் கொடுக்க 2 பேர் சமைத்தனர்.வெறும் சோறே ருசியாய்
இருந்தது. 
 வீரர்கள் தாங்களாகவே 
முன்வந்து சமைக்க விரும்பினர். குழுக்களாகப் பிரிந்து தினம் ஒரு குழு சமைத்தனர். எத்தனை நாட்கள் இங்கு இருக்கப் போகிறோம் எனத் 
தெரியாமல் தவித்தனர். கூழானாலும், கஞ்சியானாலும் பகிர்ந்து உண்டார்கள். செய்தித் தாளில்  வெளியாகும் செய்திகளைக் கேட்டு அறிந்தனர்.
            இந்திய தேசிய ராணுவத்தினர் நடத்திய போரைப் பற்றிஇந்திய மக்கள் ஏதும் அறியவில்லை. வங்காள மக்கள் மட்டுமே ஓரளவு அறிந்திருந்தனர். ஆனால் உலகப்போர் முடிந்தபின் அவர்களைத்  தேசத்துரோகிகள் எனச் சித்தரிக்க போரினைப் பற்றிய தகவல்களை ஆங்கில அரசு வெளியிட்டது.                                             ஒரு நாள் இரவு வைத்தியநாதன், "தோழர்களே! நம் சிறைக்காவலர்கள் தூங்கிய பிறகு முக்கியமான  தகவல்களை உங்ளுக்கு சொல்லப் போகிறேன்". என்றான்.அனைவரும் காத்திருந்தனர். நள்ளிரவில் பேச ஆரம்பித்தான். " நம்முடைய வீரர்களை ஏற்றிச் சென்ற ரயிலை மறித்து மக்கள் கல்கத்தாவில் கலகம் செய்தார்களாம்.தடியடி நடத்தியும், வானை நோக்கி சுட்டும் தான் முன்னே  சென்றிருக்கிறார்கள். பர்மாவிற்கு நம் படையை வழிநடத்திய தளபதி ஷா நவாஸ் கான்,  மற்றும் முக்கியத் தளபதிகளான பிரேம் செகல், குர் பக்ஷ் தில்லான் ஆகிய மூவரையும்  டெல்லி  செங்கோட்டையில் குற்றவாளிகளாக நிறுத்தியுள்ளனர்.  அவர்கள் கடமை தவறியவர்கள், ஆங்கிலேய அரசை எதிர்த்த தேசத்துரோகிகள், எதிரிகளுடன் சேர்ந்து சதி  செய்தவர்கள் என்று பல குற்றங்களை அரசு முன்வைத்துள்ளது.
. இப்போதுதான் INAவின்  போராட்டம்  இந்தியாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனி நமக்கு   மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது உறுதி. அவர்களின் எதிர்ப்பால்  துண்டைக் காணோம்.துணியைக் காணோம் என்று ஓடப் போகிறார்கள்." என்று
முடித்தான் வைத்தியநாதன். வீரர்கள்"இன்குலாப் ஜிந்தாபாத்" என்று முழக்கமிட்டனர். ஒரு சீக்கியவீரர், "வைத்தியநாதா!  உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு செய்தி தெரிகிறது?" என்று கேட்டார்."நாம் வேலை பார்க்கும் விமான நிலையத்தில்   ஒரு தமிழ் அதிகாரி  இருக்கிறார்.அவர் சொல்லும் வேலையை தட்டாமல் செய்வேன்.ஒருவணக்கம் சொல்லிவிட்டு அம்மா, பிள்ளைகள் எல்லாம் நலமா என்று விசாரிப்பேன். அவர்தான் நம் நாட்டுச் செய்திகளைக் கூறுகிறார்"என்று இந்தியில் விவரித்தான். அவருக்கு 
தங்களது நன்றியைத் தெரிவிக்கும்படி  அனைவரும் கேட்டுக் கொண்டனர்.
                   தொடரும்.