Saturday, October 15, 2022

சாய் தரிசனம்.6.விஜய தசமி.

சாய்பாபாவைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தோம். பாபா மறைந்த திதியாகிய விஜயதசமி நாளில் கூட்டம்கூட்டமாக மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.கடை வாசல்களிலும்,வீட்டு வாசல்களிலும் கோலங்கள் போடப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. நடுவே தாம்பாளங்களில் கோதுமை வைக்கப்பட்டிருந்தது. சிலர் கவர்களில் கோதுமை வைத்திருந்தார்கள்.பேன்ட் வாத்தியம் முழங்க சிறு வேன் ஒன்று வந்தது.மக்கள் வைத்திருந்த கோதுமையை சேகரித்து வேனில் ஏற்றினார்கள்.பிரசாதமாக சிறிதளவு கோதுமையைத் தர மக்கள் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியின்  பெயர் பிக்ஷா
ஜோலி எனக் கூறினார்கள்.
          கோதுமை முழுவதும் சாய்பாபா கோவிலின் அன்னதானக் கூடத்திற்கு வழங்கப் படுகிறது. பிரசாதமாகப்  பெற்ற கோதுமையை உணவுடன் சேர்த்து உண்டால் நலம் பெறுவோம் என்ற நம்பிக்கை நிலவுகிறது.இதைக் காணும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் செல்ல சுற்றித் தான் செல்ல வேண்டிதாயிற்று.
மதிய உணவை முடித்துவிட்டு 2 மணிக்குக் கிளம்பினோம். ஷீரடி சாய் பாபா கோவிலில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் விமானநிலையம் இருந்தது.
3.40 மணிக்குக் கிளம்பும் விமானத்தில் ஏறி மாலை ஆறு   மணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.விமான நிலையத்திலும் கூட்டமாகத் தான் இருந்தது.பெங்களூர் , தில்லி ஆகிய ஊர்களுக்கும் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் ஷீரடியில்  ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளன. புதிய விமான நிலையம் ,நகர்சோலில் ரயில்நிலையம்,Devotional theme park,water theme park என புதிய திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.இருமுறை ஷீரடியில் சாய் பாபாவைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்று விட்டேன்.குடும்பத்தினர் அனைவருடனும் மேற்கொண்ட பயணம் பாபாவின் அருளால் இனிதே நடந்தேறியது.
       முற்றும்.

Wednesday, October 12, 2022

சாய் தரிசனம் 5. இரண்டாவது தரிசனம்.

அக்டோபர் 5 ஆம் நாள்,புதன் கிழமை, விஜயதசமி நன்னாள். அந்த நாளின்  மகத்துவம் அறியாமல் காலை 5.50 மணிக்கே பாபாவின் கோவிலுக்குள் நுழைந்தோம். உள்ளே  யாரையும் அனுமதிக்கவில்லை. பாபாவின் படத்துடன் ஊர்வலம் வந்து நாங்கள் இருந்த இடத்தின் அருகில் தடுப்புக் கம்பிகளுக்கு உட்புறமாகச் சென்றது. அரைமணி நேரம் 4 ஆம் எண் வாசலில் நின்றோம்.கூட்டம் மிக அதிகமாகி விட்டது.அங்கிருந்த காவலரை விசாரிக்க 2ஆம் எண்
வாசலுக்குப் போகச் சொன்னார்.அப்படியே செய்தோம். வரிசையாக நிற்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிக்குள் நின்றோம்.ஒரு மணி நேரம் வரிசை துளி கூட நகரவில்லை.7.30 மணியும் ஆகிவிட்டது.குழந்தைகள் பசிக்கிறது எனக் கூற ஆரம்பித்து விட்டார்கள். நான் கண் மூடி, "பாபா இது என்ன சோதனை?4 குழந்தைகளுடன் வந்திருக்கிறேன்.சீக்கிரம் வழி விடுங்கள்."என மனதார வேண்டினேன்.வரிசை நகர ஆரம்பித்தது.முன்னால் சென்ற பக்தர்கள் சாய் நாத் மகராஜ் கீ ஜய் எனக்கூற முதல் மூன்று குழந்தைகளும் ஜய்  ஜய் எனக் கூறிக்கொண்டே  நடந்தனர்.பசி பறந்து போய்விட்டது. சாய் ஸ்ரீ ராம் , "ஓம்சாய் நமோ நமஹ!" என முன்னால் பாடிக்  சென்றவரைத்  தொடர்ந்து பாடிக் கொண்டே வந்தான்.கடைக் குட்டிகள் இருவரையும் பெற்றோர் தூக்கிக் கொண்டனர்.ஆங்காங்கு  அரை மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது.பத்து மணிக்குத் தான் தரிசனம் கிடைக்கும் என நினைத்தோம். ஆனால் இரு இடங்களில்  எங்களைக்  குறுக்கு வழியில் உள்ளே அனுமதித்து விட்டார்கள்.சரியாக எங்கள் குடும்பம் வரும்போது தான் அக்கதவுகள் திறக்கப் பட்டன.பாபாவின் அருளை எண்ணி வியந்தேன். சாய்பாபாவின் முகதரிசனம் கிடைத்தது. நன்கு வணங்கினேன். வார்த்தைகள் ஏதும் மனதில் தோன்றவில்லை.சில நொடிகளில் சலோ, சலோ என்று வெளியே அனுப்பி விட்டார்கள். 8.50 க்கு வெளியே வந்து விட்டோம்.மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. துவாரகாமாயி,சாவடி, அருங்காட்சியகம்  என எதற்கும் செல்ல முடியவில்லை. இத்தனை கூட்டத்திற்குக் காரணம் என்ன என்பது பின்னர் தான் தெரிந்தது.அன்று சாய் பாபா மஹாசமாதி அடைந்த திதி ஆகும்.சிறப்பு பூஜைகள், ஊர்வலம் நடந்த பின்தான் பக்தர்கள்  உள்ளே அனுதிக்கப் படுவார்களாம்.இரவு முழுவதும் பாபாவைத் தரிசிக்கலாம். கோவில் கதவுகள் மூடப்படுவதில்லை என்றும் தெரிந்து  கொண்டோம்.மிகச் சிறப்பான நாளில் பாபாவை வணங்க வாய்ப்புக் கிடைத்தது நாங்கள் பெற்ற பாக்கியமாகும்.அடுத்து பிக்ஷா ஜோலி என்ற நிகழ்ச்சி நடந்தது.
            தொடரும்.

Tuesday, October 11, 2022

சாய் தரிசனம்.5.துவாரகாமாயி

துவாரகாமாயி  காட்டப்படும் அரங்கத்தில் நுழைந்தோம். துவாரகாமாயி என்ற பாபா வசித்த மசூதியின் வடிவம் நிர்மாணிக்கப் பட்டிருந்தது. அதன் உள்ளும்,புறமும் தீபங்கள் 
ஜொலித்தன.  பகவான் சாய்பாபாவின்   திருவுருவம் தோன்றியது. சீடர்கள் இருவர்
தோன்றினர்.   பார்ப்பதற்கு  உண்மையான மனிதர்கள்  போலவே இருந்தனர். இந்த அமைப்பை Humanoid form என்கிறார்கள்.பாபா நம் கண் முன்னே தோன்றி உரையாற்றினார்.கைகளை அசைத்து,வாய் திறந்து பேசினார்.அறிவுரைகள் வழங்கினார்.நாங்கள் மெய்சிலிர்த்து நின்றோம்.அரை
மணிநேரம் சென்றதே தெரியவில்லை.
                 அடுத்து தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினோம். ஆறு பேர் அமரக் கூடிய சிறு ரயில் பெட்டிகள் வந்தன.அதில்
அமர்ந்தோம்.
மும்பைக்குச் சென்றோம்.மும்பையின் நவநாகரீக மக்களும், டப்பாவாலாவும் வரவேற்றனர். சித்தி விநாயகர் கோவிலின்  நுழைவு வாயிலில் நுழைந்தோம்.விநாயகரை வழிபட்டோம்.பகவான் ஸ்ரீீகிருஷ்ணனின் நகரமான துவாரகாபுரிக்குள் சென்றோம்.துவாரகாதீஷ் தரிசனம் கிடைத்தது.கேதார நாத் தலத்தில் பண்டிதர்கள் அமர்ந்து யாகம் செய்து கொண்டிருந்தனர். நந்திக்கு எதிரில் சிவபெருமான் காட்சி தந்தார்.அடுத்த திருத்தலம் பத்ரிநாத்.இரு மலைகளுக்கு இடையே பாலத்தில் மக்கள் நடந்து செல்லும் காட்சி அமைக்கப் பட்டிருந்தது. பத்ரிநாதரைக் கண்டு கை தொழுதோம்.இமயமலை அடிவாரத்தில் உள்ள இத்தலங்களை நேரில் காணும் பாக்கியம் கிடைக்குமா ?எனத் தெரியவில்லை. 
அமிர்தசரஸ் நகரம் வந்து விட்டது.சீக்கியப் பெருமக்கள்  தங்கள்  வேலைளைச் செய்து கொண்டிருந்தார்கள். பொற்கோவிலுக்குள்  குருகிரந்த சாகிப்    புத்தகம் முன் அமர்ந்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். பூரீ மாநகரில்   ஜகன்னாதர்,பலராமர், சுபத்திரையுடன்  காட்சி தந்தார்.மணல்  சிற்பங்களும் இருந்தன.  பண்டரிபுரத்தில்     பாண்டுரங்கனைச் சேவித்தோம். நம் கண் முன்  அன்னை மீனாட்சியின் கோபுரம்  காட்சி தந்தது.உண்மையாகவே உள்ளே வந்தது போல் இருந்தது.யாளிகளுடன் தூண்கள் இருந்தன.நடன மங்கைகள் காட்சி தந்தனர். அன்னை மீனாட்சி கரத்தில் தங்கக் கிளியுடன் அருள் பாலித்தாள்.அடுத்ததாக திருப்பதி ஏழுமலையான்  தரிசனம் தந்தார்.தெய்வ தரிசனம் நிறைவுபெற்றது. பழைய ஷீரடியின் தோற்றத்தைக் காட்சி படுத்தியிருந்தனர். அதைக் கண்டு விட்டு அந்த அரங்கை விட்டு வெளியே வந்தோம்.                  டாட்டூ போடும் இடம்,பிரசாதம் விற்கும் கடை,ஆடைகள் விற்பனையகம்,அணிகலன்கள் கடை, ஃபோட்டோ ஸ்டுடியோ என சில கடைகள் இருந்தன.கரும்புச் சக்கையிலிருந்து பெறப்பட்ட இழையால் ஆன புடைவை ஒன்று வாங்கினோம்.ஒரு சிறு உணவகம் இருந்தது. பெரியவர்கள் தேநீீர் அருந்தினோம். குழந்தைகள் பாவ் பாஜி சாப்பிட்டார்கள். சாய் பாபாவின் முன்னால் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.அங்கு வேலை பார்க்கும்  நபரே  ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்தார்.
மறுநாள் மீண்டும் பாபாவைத் தரிசித்து விட்டு ஊர் திரும்ப வேண்டும்.
தொடரும்.
           

Saturday, October 8, 2022

சாய் தரிசனம். 4.Sai theerth devotional theme park.

Mm2017 ல் பள்ளி ஆசிரியைகளுடன்
ஷீரடி  வந்த போது இந்த இடம் அமைக்கப் படவில்லை.2018ஆம்
தான் உருவாக்கப் பட்டுள்ளது. 
அனைவருக்கும் கையில் ஒரு பேப்பர் பெல்ட் கட்டி விட்டார்கள். முதலில் திரைஅரங்கத்திற்குள் அனுமதித்தார்கள்."ஸப் கா மாலிக் ஏக் ஹை" என்ற தலைப்பில் படம் காட்டப்பட்டது. சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு  ஒரு மணி நேரம் திரையிடப் பட்டது.நேரம் போனதே தெரியவில்லை. அடுத்ததுதான் நிகழ்ச்சிகளில் மிக அருமையான ஒன்று.5 D தியேட்டரில் 5 D படம் "லங்கா தஹன்" என்ற தலைப்பில் ஓடியது. உள்ளே நுழையும் போதே 5 D பார்க்கத் தேவையான கண்ணாடிகளைத்
தந்தார்கள்.மாட்டிக் கொண்டு 
அமர்ந்தோம்.
ஆங்கிலத்திலும்,இந்தியிலும் முன்னெச்சரிக்கை செய்தார்கள். கர்ப்பிணிப் பெண்கள்,கழுத்துத் தேய்மானம் உள்ளவர்கள்  சாதாரண நாற்காலிகளில் அமர
வேண்டும்.பிறர்  அதிர்வு அடையக் கூடிய நாற்காலிகளில்
அமரலாம்.குழந்தைகள் பயப்பட்டால் கண்ணாடியை கழற்றி விடவேண்டும்  என்று அறிவித்தார்கள்.
                 திரைப்படம் கன ஜோராகத் தொடங்கியது. அலைகடலுக்குள் நாங்களே புகுந்து விட்டோம்.அலை எங்கள்
முகத்திலேயே அடித்தது. ஆஞ்சனேயர் "ஜெய்ஸ்ரீராம்" என்று கூறி பறக்க ஆரம்பிக்க நாங்களும் பறந்தோம். நாற்காலிகளின் அதிர்வும், அசைவும் மிகப் பொருத்தமாக இருந்தன.மைநாகமலையில் கால் பதித்தோம். நாகதேவர்களின் தாயாகிய ஜிரஜா பெரிய நாகவடிவில் வந்து ஆவென வாயைத் திறக்க பார்வையாளர்களையே விழுங்கி விடுவாளோ எனத் தோன்றியது.அனுமானுடன் நாங்களும் நாகத்தின் வாய் வழியே சென்று வால் வழியாக
வெளிவந்தோம்.அடுத்து ஓர் அரக்கியின் வாய்க்குள்  நுழைந்து மார்பைக் கிழித்து வெளியே வந்தோம். லங்கா  தேவியுடன் நடந்த சண்டை, சீதாதேவியைக் கண்டு கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப்  பெற்றது என அனைத்து நிகழ்வுகளிலும் நாங்களும்  கூடவே இருந்தது போல் இருந்தது. பிரம்மாஸ்திரத்தில் கட்டுண்டு 
இராவணனின் சபையை  அடைந்தது,வாலில் தீ வைத்தது எனக் காட்சிகள் விரிந்தன. நிறைவுக் காட்சியில் இலங்கை பற்றி எரிந்தது.மக்கள் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள்.யானை பிளிறிக் கொண்டு  எங்களைத் தாக்க வந்தது.ஆஞ்சநேயர் கடல் நீரில் வாலை நனைத்து  நெருப்பை அணைக்க காட்சி
நிறைவு அடைந்தது. மிக அருமையான புதிய தொழில் நுட்பங்களுடன்,மிகச் சிறப்பான
ஒலி,ஒளிக் காட்சிகளுடன் அற்புதமாக இருந்தது. அடுத்து துவரகா மந்திர் என்ற திரைப்படத்தைப் பார்க்கவும், தீர்த்த யாத்திரை செல்லவும் வேண்டும்.
            தொடரும்.

சாய்தரிசனம் 3.சிங்கணாப்பூர்

ஷீரடிக்கு அருகில் உள்ள திருத்தலம்  சனிசிங்கணாப்பூர். முற்காலத்தில் ஒரு கருமையான கல்லை இடையர் ஒருவர் தன் கூர்மையான முனை கொண்ட கம்பால் தொட ரத்தம் வழியத் தொடங்கியது.  அவர் பயந்து போய் ஊராரிடம் கூறினார். அனைவரும் அங்கு கூடி அதனை வழிபட்டனர்.அன்று இரவே பக்தர் ஒருவர் கனவில் சனீஸ்வரர் தோன்றி தான் சுயம்புவாக அந்தக்  கல்லில்  தோன்றியிருப்பதாகவும், கூரையில்லாமல் வீற்றிருக்க விரும்புவதாகவும் கூறினார். மேலும்  சனிக்கிழமைகளில் எண்ணெயால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம்.இது செவிவழிச் செய்தியாகும். அவ்வாறே இன்று வரை திறந்த வெளியில் குடி கொண்டுள்ளார். கோவிலைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வீடுகள்,கடைகள் எதிலும் கதவுகள் கிடையாது.

   4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு ஷீரடியில் இருந்து கிளம்பினோம்.வழியில் காலை உணவை முடித்துக் கொண்டோம்.  10 மணிக்கு  சிங்கணாப்பூரை அடைந்து விட்டோம்.இரண்டு பூஜைத் தட்டுக்களை வாங்கினோம். கடைக்காரரே சனீஸ்வர ஸ்லோகங்களைக் கூறி எங்களையும் கூறச் செய்தார்.உள்ளே பூஜை கிடையாது எனவும் கூறினார். 
                    சனீஸ்வரரைத் தரிசிக்க செல்லும் வழியில் இருந்த திரிசூலத்தில் இலையால் ஆன மாலையைப் போட்டோம்.இலையின் பெயர் தெரியவில்லை. தேங்காயை அதற்கென வைக்கப்பட்ட கூடையிலும்,பூக்களை ஒரு கூடையிலும் வைத்தோம். கருப்பு நிற பொம்மையையும், லாட வடிவில் இருந்த இரும்புத் தகடையும் கூடைகளில் போட்டோம்.விரும்பினால்  தகடை வீட்டிற்கு எடுத்துச் சென்று தினந்தோறும் பூஜிக்கலாம் என்றார்கள். பகவானின் எதிரில் இருந்த பெரிய தட்டுக்களில் எண்ணெயை ஊற்றினோம். அந்த எண்ணெய் குழாய் மூலம்
எடுத்துச் செல்லப்பட்டு  பகவானின் சிரசில் விழுகிறது.சனீஸ்வரரை அருகில் நின்று நன்கு  தரிசித்தோம். ஃபோட்டோ எடுக்க 
அனுமதி இல்லை.அருகில் அனுமானுக்கு சன்னதி  உள்ளது. அவரையும் வழிபட்டோம். பிரசாதமாக விற்கப்பட்ட தேங்காய் பர்பியை வாங்கி உண்டோம்.மரங்களுடன் பரந்த காலி இடம் இருந்தது. இருக்கைகளும் போடப்பட்டிருந்தன.அதில் சிறிது நேரம் நாங்கள் அமர்ந்தோம். குழந்தைகள்  விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பின்னர் கிளம்பினோம்.சாலையின் இருபுறமும்  கரும்புத் தோட்டங்கள் இருந்தன. மாட்டுச் செக்கில் ஆட்டப்படும் கரும்புச்சாறு கடைகள் நிறைய இருந்தன. அமர நாற்காலிகளும், குழந்தைகள் விளைையாட ஊஞ்சல்களும்  இருந்தன.பல வண்ண பலூன்கள் தொங்க விடப்பட்டிருந்தன.ஒரு கடையில்  அமர்ந்து  அன்று வெட்டப்பட்ட கரும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றைக் குடித்தோம்.மிக அருமையாக இருந்தது.அந்தக் கடைகள் அமைந்திருந்த கிராமத்தின் பெயர் சோனாய்.மதியம் ஒரு மணிக்கு ஷீீீரடிக்கு  வந்து சேர்ந்தோம். அடுத்து சென்ற இடம் Sai theerth devotional theme park. இதுவே பெரியவர்,சிறுவர் அனைவரைையும் கவர்ந்த இடம்.
                       தொடரும்.

Friday, October 7, 2022

சாய் தரிசனம் 2.ஷீரடியில் நாங்கள்.

நகர்சோல் ரயில் நிலையம் பாபாவின் பக்தர்களுக்காகவே 
நிறுவப் பட்டது.இன்னும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.ஏகப்பட்ட கார்கள்,ஆட்டோக்கள் நின்று கொண்டிருந்தன.நாங்கள் அனைவரும் சேர்ந்து செல்வதற்காக எர்டிகா காரை அமர்த்திக் கொண்டோம்.அங்கிருந்து பயண நேரம் ஒன்றரை மணி நேரம் தான்.ஆனால் நடுவில் ரயில்வே லெவல் கிராஸிங்கில் அரை மணி நேரம் காத்திருந்தோம் எனவே மதியம் 2. மணிக்கு ஷீரடி வந்து சேர்ந்தோம். நாங்கள் Hotel golden view வில் தங்கினோம்.சரியாக பாபா கோவிலின் தங்கக்கோபுரத்திற்கு நேர்  எதிரில் இருந்தது.ரூமில் இருந்து வெளியே வந்தால் கோபுர தரிசனம் கிடைத்தது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்  அல்லவா?

(என் வாழ்க்கைத்  துணைவரின் தலைக்குப் பின்புறம் மஞ்சள் நிறத்தில் கோபுரம் தெரிகிறது.) அருகிலேயே  உணவகமும் இருந்தது. மதிய உணவை முடித்து விட்டு ஒரு மணி நேரம் களைப்பாறினோம்.பின்னர் குளித்து விட்டு கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களைச் சுற்றி வந்தோம்.வெளியே வைக்கப் பட்டிருந்த பெரிய திரையில் பாபாவைக் கண்டோம்.
ஆன் லைனில் பாபாவின் தரிசனத்துக்கு இரவு 8 மணிக்குப் பதிவு  செய்திருந்தோம்.எனவே 7.30 மணிக்கு முதல் வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றோம்.அரை மணி நேரத்தில் சாய் பாபாவின் எதிரில் நின்றோம். அருமையான குழந்தைகள் பிறந்ததற்காக நன்றி கூறினேன். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டினேன்.பாபாவையும் இந்தத்  திருத்தலத்தையும்  எனக்கு அறிமுகம் செய்த எங்கள் பள்ளித் தலைமைஅன்னை, தலைமை ஆசிரியை,  அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், மங்கையர்க்கரசி நிறுவனத்தின்  ஆசிரியப்பெருமக்களும்  நன்றாக இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தேன்.சில நொடிகளில்  சலோ,சலோ என்று கூறி வெளியேற்றி விட்டார்கள்.   ஆயினும் மனம் நிறைவாக இருந்தது. கோவிலுடைய வெளிச்சுற்று .முற்றிலும் மாறிவிட்டது.நிறைய இரும்புத் தடுப்புகள் அமைக்கப் பட்டி.ருந்தன. கசப்பில்லா இலைகள் கொண்ட வேப்பமரத்தைச் சுற்றி இரண்டாவது தடுப்பு  வேலியும் அமைக்கப் பட்டிருந்தது.பழைய இயற்கையான அமைப்பு மாறிவிட்டது.  சன்னதியில் இருந்து வெளியே வரும்  வழியில் உதி வழங்கப்பட்டது. பிரசாத ஸ்டாலில்  லட்டுகளை வாங்கினோம்.நவராத்திரி விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டமும் மிக அதிகம்.மறு நாள் காலை 7 .30 மணிக்கு சனிசிங்கணாப்பூர் செல்லவும் மதியம் 3 மணிக்கு Devotional theme park செல்லவும் முடிவு செய்தோம்.
                    தொடரும்.
             

Thursday, October 6, 2022

சாய் தரிசனம் 1. ரயில் பயணம்

வாழ்க வளமுடன். சாய் பாபாவைத் தரிசித்து வேண்டிய 
பின்பே என் மகன் வழிப் பேத்தி
பிறந்தாள்.மகளுக்கும் இரண்டாவது மகன் பிறந்தான்.
எனவே சாய்பாபாவைத் தரிசிக்க சீரடிக்குப் பயணம் செய்தோம்.
   என் மகன் சங்கர் காளிதாஸும் ,South carnivals என்ற Travels நடத்தும் என் தம்பி மகன் சங்கர நாராயணனும்  இணைந்து அருமையாக முன்னேற்பாடுகள் செய்திருந்தனர். அக்டோபர் 2ஆம் தேதி காலை 9.மணி 10 நிமிடத்தில் சென்னை-நகர்சோல் எக்ஸ்பிரஸில் பயணம் தொடங்க வேண்டும்.சென்னை -ஷீரடி ரயிலில் இடம் கிடைக்கவில்லை.நகர்சோல் 
ரயிலில் சமையலறை ,pantry car கிடையாது. எனவே அதிகாலை 3மணிக்கே நான்,என் மருமகள்,மகள்,மருமகன் என அனைவரும் சேர்ந்து சமையல் 
களத்தில் இறங்கினோம்.இட்லி,வறுத்து அரைத்த துவையல், சப்பாத்தி,தக்காளித் தொக்கு, எலுமிச்சை சாதம்,தயிர்
சாதம் என அனைத்தும்  தயாரானது.எல்லாவற்றையும்  அலுமினிய ஃபாயில் டப்பாக்களிலும், பேப்பரிலும் வைக்கும் பொறுப்பை என் கணவர்ஏற்றுக்கொண்டார்.
நான்கு குழந்தைகளையும் சமாளிக்கும்
பொறுப்பை என் மகன் பார்த்துக்
கொண்டான்.ஆறு மணிக்கு எல்லா வேலைகளையும்  முடித்து விட்டோம். 9.10 ரயிலுக்கு 7.15 க்கே சென்ட்ரல் நிலையத்திற்கு வந்து விட்டோம்.
                    ரயில் வரும் முன்னரே
ஒருவர் பசிக்கிறது எனக் கூற மற்ற மூன்று பேரும் சேர்ந்து கொண்டார்கள்.அவர்களைச் சாப்பிட வைத்தோம்.சரியாக 9.10க்கு ரயில் கிளம்பியது. நாங்கள் ரயில் கிளம்பிய பின் காலை உணவை முடித்தோம்.27 மணி நேரப் பயணம். சாய் ஸ்ரீராம்,சாய்ஸ்ரீகாந்த்,ரஷிதா,ஸ்ரீநிதி  என்ற நான்கு பேரக்குழந்தைகளும் உற்சாகமாக இருந்தனர்.இரண்டாம் வகுப்பு  குளிர்சாதனப் பெட்டி என்பதால் வசதியாக இருந்தது.அரக்கோணம் வந்தவுடன்  முழுமையாக அனைைத்து இடங்களும் நிரம்பின.நால்வரும் சிறிது நேரம் தூங்கினார்கள்.வழியில் தால் வடா என விற்றுக் கொண்டு வந்தார்.நான் ஆசையுடன் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம்  என்றவுடன் மறுமகன் வாங்கித்
தந்தார்.அதில் முட்டைக்கோஸ் 
மட்டுமே  இருந்தது.வெங்காய துண்டு கூட சிறிதுதான் இருந்தன.இரவு வரை வைத்திருந்து காலி செய்தோம்.மதிய உணவிற்குப்பின் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.குழந்தைகள் பார்க்க Mr.Beans சீரியலை என் மகன் பதிவிறக்கம் செய்து மடிக்கணினியைக் கொண்டு வந்திருந்தான். அதை   ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.இரவு  குழந்தைகள் நன்கு தூங்கி விட்டனர்.நானும் தூங்கிவிட்டேன்.11மணியளவில் ஹைதராபாத்தைக் கடந்ததாக மகன் கூறினான்.காலை 5 மணிக்கு நான் கண் விழித்த போது மகாராஷ்ட்ரா BSNL வரவேற்பதாக செல்ஃபோன் காட்டியது. வழியில் சிறுஊர்கள் தான் இருந்தன.காலை உணவாக சப்பாத்தியும் ,தக்காளித் தொக்கும் எடுத்துக் கொண்டோம்.காலை 10 மணியளவில்  பெரிய ஊராகிய ஔரங்காபாத் நகரம் வந்தது.பிள்ளைகள் சற்று சோர்வடைந்ததால் டான் படம் ஓடியது.முழுமையாகப் பார்க்க முடியவில்லை. மீதம் இருந்த சப்பாத்திகளை பிள்ளைகளுக்குக் கொடுத்தோம்.11.45 க்கு நகர்சோல் வந்து சேர்ந்தோம்.
           தொடரும்.