திருமண அழைப்பிதழ் ஒன்று மதுரையில் இருந்து கூரியர் அஞ்சலில் வந்தது.ஆவலுடன் பிரித்துப் பார்த்தாள் லெட்சுமி.அவளும், அவளது கணவனும் எழுபது வயதைக் கடந்தவர்கள்.மகன் குடும்பத்தோடு தில்லியில் வசித்து வந்தனர்.மிக நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம்." ஏங்க! நம் சதாசிவம் மகள் திருமணத்திற்கு மதுரைக்கு போகலாமா?" என லெட்சுமி கேட்க அவர் " மாலையில் பிரவீன் வந்த உடன் பேசுவோம்". என்றார்.
மகன் உள்ளே நுழைந்தவுடன் லெட்சுமி தன் விருப்பத்தைத் தெரிவித்தாள்.பிறந்து,
வளர்ந்து, வாழ்ந்த ஊருக்குச் சென்று வர அம்மா விரும்பியதை பிரவீன் புரிந்து கொண்டான்." சரி அம்மா! திருமண நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ஃபிளைட் டிக்கெட் எடுத்துவிடலாம்.திரும்புவதற்கு என்றைக்குப் போடலாம்? "என்றான். "உன் அம்மாவிற்கு அவள் வீட்டு ஆட்களைப் பார்த்தால் திரும்ப மனம்
வராது.எனவே பிறகு பார்க்கலாம்". என்று கூறினார் அப்பா.அதுபோலவே
மகன் போவதற்கு மட்டும் டிக்கெட் புக் செய்து தந்தான்.
தம்பதியர் இருவரும் மதுரைக்கு வந்து சேர்ந்தனர். ஏர் போர்ட்
வாசலில் லெட்சுமியின் தம்பியும் அவன் மகன் சுபாஷும் காருடன் வந்து
வரவேற்றனர். திருமணத்திற்கு அனைவரும் சென்றனர்.பல ஆண்டுகள் கழித்து உறவினர்களை சந்தித்ததால்
மகிழ்ச்சியாக இருந்தது.கதைகள் பேசி
இன்பமாக பொழுது கழிந்தது.மீண்டும் தம்பியின்வீட்டிற்குவந்தனர். திருமங்கலம் சென்று தங்கை
சுமதியின் பிள்ளைகளைப் பார்க்க லெட்சுமி விரும்பினாள்." நாளை என் மகன் ஷசாங்க் வந்து விடுவான்.அவன் உங்களை கூட்டிக் கொண்டு போவான்" என்று கூறினான் சுபாஷ்." ஏன்? உனக்கு
வேறு வேலை இருக்கிறதா?" என்று கேட்க "இல்லை.உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது". என்றான் தம்பி.
மறுநாள் காலையில் ஷசாங்க்
வந்து விட்டான்.முப்பாட்டனார்கள் கந்தசாமி, சண்முகம்,சங்கர் என நினைவில் வைத்திருக்க உதவியாக
இப்படி ஒரு பெயரை வைத்து இருந்தான் சுபாஷ். ஷ, சண்முகம்,சாங், சங்கர்,க்(k), கந்தசாமி என்பதைக் குறிக்கும்.அவனைப் பார்த்ததும் அப்படியே இளவயது சுபாஷ் போன்று இருந்தது." வாங்க ஆச்சி, வாங்க தாத்தா" என வரவேற்றான்.
குனிந்து இருவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். இந்தியன் ஏர்லைன்ஸில் பைலட் பணியில் இருந்தான்.அந்த சீருடையில் பார்க்க பிரமிப்பாய் இருந்தது." சற்று நேரத்தில் உடை மாற்றிவிட்டு வருகிறேன்.
ஹெலிகாப்டரில் திருமங்கலம் செல்லலாம்" என்று கூற லெட்சுமி திகைத்து நின்றாள்.சுபாஷ்," சில நாட்களுக்கு முன் வாங்கினோம்.
ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்கப் போகிறோம்". என்றான்." அப்படியா ? நாம்போகஹெலிபேட்உள்ளனவா?" என்று கேட்டதும் " ஆமாம், இங்கு நாவலர் நகரில் உள்ளது.திருமங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகே எல்லா வசதிகளும் உள்ள ஹெலிபேட் இருக்கிறது." என்றான் ஷசாங்க்.சிறிது நேரத்தில் ஹெலிபேட் செல்ல புதிய ஹெலிகாப்டரைக் காட்டினான். லெட்சுமியும் அவள் கணவரும் ஏற ஹெலிகாப்டரின் புரபெல்லர் சுழலத்
தொடங்கியது.வட்டமிட்டு மேல் ஏறத் தொடங்கியது.மாமாவின் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றது, கணவருடன் பைக்கில் சென்றது, சுபாஷ் காரில் சென்றது என ஒவ்வொன்றாக நினைவில் வந்தது. "உன் அப்பா காரை ஓட்ட கற்றுக்
கொண்ட பின் அவனுடன் காரில் அடிக்கடி பயணம் செய்திருக்கிறோம்.
இன்று நீ ஹெலிகாப்டரில் கூட்டிச் செல்கிறாய்.மிக சந்தோஷமாக உள்ளது." என்றாள் லெட்சுமி. பயணம் தொடர்ந்தது.