Sunday, January 24, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 12

பர்மாவின் தலைநகரான ரங்கூனில் கைதிகள் முகாம் அமைக்கப்பட்டு அங்கு ஆயிரக் கணக்கான வீரர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். சிட்டகாங் முகாமுக்கும் , கல்கத்தா முகாமுக்கும் பலர் அனுப்பப் பட்டனர். கிட்டத்தட்ட 12,000 பேர் சிறைபிடிக்கப் பட்டதாக ஆங்கில அதிகாரிகள் பேசிக் கொண்டது கைதிகளுக்கும் தெரிந்தது.
முக்கிய உயர் ராணுவஅதிகாரிகளை டில்லிக்கு கொண்டு போய் சிறையில் இட்டார்கள்.ஒரு சில நாட்கள் கழித்து ஆங்கிலேயே அதிகாரிகள் அதிக மகிழ்ச்சியுடன்காணப் பட்டனர். கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் கொண்டாடினர்.ஒரு அதிகாரி வந்து, "உங்கள் நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டார்."எனத் தெரிவித்தார். அனைவரும்  அதிர்ந்து போனார்கள். கண்ணீர் விட்டுக் கதறினார்கள். "நேதாஜி உங்ளை மீண்டும் பார்ப்போம்.சுதந்திர இந்தியாவில் நாம் சந்திப்போம் என்று நினைத்தோம்.இப்படி ஆகிவிட்டதே." என்று புலம்பினர். வைத்தியநாதன்,"நம் நேதாஜியை பிரிட்டிஷார் ஏதோ செய்து விட்டனர். விமான விபத்து தற்செயலாக நடந்திருக்காது.திட்டம் தீட்டி செய்திருப்பார்கள்."என்றான்.மருதவாணன்,"எங்கேயோ கண்காணாத 
இடத்தில் சிறையில் வைத்துவிட்டு நாடகம் ஆடுகிறார்கள்."என்று கூறினான். "அப்படித் தான் இருக்க வேண்டும்"என்றான் ஒரு வீரன். "அவன் கூறுவது சரிதான்" என்றான் மற்ற ஒரு வீரன்."சிறையில் வேலை பார்க்கும் பர்மியர் யாரிடமாவது சொல்லி செய்தித்தாளில் என்ன. செய்தி வந்துள்ளது எனக்கேட்கலாம்"  என்றான் வைத்தியநாதன்.  அவர்களுடன் சிறையில் இருந்த பர்மியத் தமிழர்  ஒருவர் எப்படியோ செய்தித்தாளைப் பெற்று  விட்டார்.அதைப் படித்து விட்டு கண்ணீருடன் செய்தியை விவரித்தார். 
      சிங்கப்பூர் ஆங்கிலேயர் வசமாகி விட்டதால் நண்பர்களின் அறிவுரைகளை ஏற்று அங்கிருந்து நேதாஜி  மிட்சுபிட்சி என்ற ராணுவ விமானத்தில் கிளம்பினார்.
 (கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படம்)                                             1945 ஆகஸ்ட் 18 ஆம் நாள் தைவான் நாட்டில் தெய்பே (அப்போதைய பெயர் பார்மோசா) என்ற இடத்தில் நடந்த விமான விபத்தில் இறந்து விட்டார்.தீப்பற்றி எரிந்த நிலையில்  அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை தந்திருக்கிறார்கள். ஆனால் பலனில்லாமல் இறந்து விட்டார். ஆகஸ்ட் 20 ஆம் நாள் தைவான் நாட்டில்  தகனம் செய்யப் பட்டார்.அவருடன் சென்ற ஜப்பானிய 
படைத் தலைவரும் இறந்து விட்டார்.இச்செய்தி  ஜப்பான் நாளிதழில்  தெரிவிக்கப் பட்டது.அதன் பின்பு தான் அனைவருக்கும் செய்தி தெரிந்தது.
(ஜப்பான் செய்தித்தாள்)             அதற்குப் பின்னர் ஆங்கில செய்தித்தாளில் வெளியானது.இந்தியத் தாயின் வீீீரப் புதல்வன் ,வங்கம் தந்த தங்க மகன் மறைந்து விட்டார்.அவர் மரணம் அடைந்தாரா?மறைந்தாரா?அல்லது மறைக்கப்  பட்டாரா? மர்மம்  வெளியாகவே இல்லை.                                                 (பின் குறிப்பு)     நேதாஜியின் மறைவைக் குறித்து ஆராய நேருவின் காலத்தில் ஷாநவாஸ் கான் ஆணையமும் ,இந்திரா காந்தி காலத்தில் கோஸ்வாமி ஆணையமும் அமைக்கப் பட்டன.அவை இரண்டும் மரணத்தை  உறுதி செய்தன. ஆனால் 1999ல் அமைக்கப்பட்ட  M K முகர்ஜி ஆணையம் விசாரணை செய்தபோது நேதாஜி மரணமடைந்ததாகக் கூறப்பட்ட காலகட்டத்தில் 1945 பிப்ரவரி முதல்  டிசம்பர் வரை தைவான் நாட்டில் எந்த விமான விபத்தும் நடக்கவில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிக்கை அளித்தது.மத்திய அரசில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் முகர்ஜி அறிக்கை  கிடப்பில் போடப் பட்டது.எனவே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
                      தொடரும்.                 

Tuesday, January 19, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 11.

முன் தினம் மேஜர் குறிப்பிட்ட டாங்கர்கள் வந்து சேர்ந்தன. தரையில் தொலைதூரம் குண்டுகளை வீசக் கூடியது. இதை வைத்து வானில் பறக்கும் விமானத்தைத் தாக்க முடியாதே என நினைத்தனர்.மேஜர்,"குண்டு வீசும் பீரங்கிக் குழல்களை மேல் நோக்கி உயர்த்துவோம்.விமானத்தைத் தாக்க முயற்சிப்போம்". என்றார்.அவ்வாறே செய்தனர்.
வருவது வரட்டும் என்ற மனஉறுதியுடன் செயல்பட்டனர். வைத்தியநாதன் குண்டு வீீசுவதற்காக தாழ்ந்து பறந்த விமானத்தைக் குறிவைத்து குழலை  நகர்த்தினான். அன்று காற்று வீசிய திசையை அறிந்து அதன் போக்கிலேயே பீரங்கியை இயக்கினான்.குண்டு சரியாக இலக்கை அடைந்தது.விமானம் சுட்டு வீீழ்த்தப் பட்டது.மகிழ்ச்சி அடைந்த வீரர்கள் மற்ற பீரங்கிகளையும் அதைப் போலவே இயக்கினர். தாக்குதலைத் தீவிரப் படுத்தினர். வானில் பறந்த இரண்டு விமானங்கள் திரும்பி விட்டன. வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கிக் கொண்டனர். கை தட்டி மகிழ்ந்தனர்.மேஜர், " சாதித்து விட்டாய் வைத்தியநாதா! நல்ல முன் மாதிரியாய் செயல்பட்டாய்". என்று கூறி கை குலுக்கினார்."அடிபட்ட அவர்கள் நம்மை சும்மா விட மாட்டார்கள்.நாளை மிக அதிகமான விமானங்களை எதிர்பார்க்கலாம்." என்றார். மேஜர்கள் அனைவரும்  தங்களது படைகளைப்  பிரித்து வெவ்வேறு பகுதிகளுக்கு  வழிநடத்தும்படி  நமது தளபதி தில்லான்  கட்டளை இட்டுள்ளார். நாளை  நாம் ஆயிரக்கணக்கில் ஒன்றாகச் செல்லப் போவதில்லை." என்று கூறிச் சென்றார்.மறுநாள் பிரேம் ஷாகல், ஷா நவாஸ் கான்,குரு பக்ஷ் தில்லான் மூவரும் ஆங்காங்கே வீரர்களிடம் வீரவுரை  ஆற்றி ஊக்கப் படுத்தினர் .பின்னர் பிரிந்து வேறுவேறு பகுதிகளுக்குச் சென்றனர்.  "நம் போன்ற வீரர்களை   குண்டு வீசித் தாக்கினால்  பரவாயில்லை. ஜப்பானில் அணுகுண்டை வீசி ஒன்றும் அறியாத மக்களைக் கொன்ற அமெரிக்காவை நினைத்தால் எனக்கு வயிறு பற்றி எரிகிறது."  என்றான் வைத்திய நாதன். "இப்பொழுது மட்டும் ஆங்கில வீரர்கள் வரட்டும்.சுட்டுக் கொன்று விடுவோம்". என்றான் மருத வாணன்."ஆமாம். அவர்களை  விடக்கூடாது."என்று ஒரு வீரன் கூறினான்.விமானம் வீழ்த்தப் பட்டதை அறிந்த ஆங்கிலப் படை ஆக்ரோஷமாக பதிலடிகள் கொடுக்க ஆரம்பித்தது.உதவிய ஜப்பானும் ஜெர்மனும் ஏற்கனவே சரணடைந்து விட்டது. எனவே இந்திய தேசிய ராணுவம் கையறுநிலையை அடைந்தது. போர் ஆரம்பித்ததில்  இருந்து கிட்டத்தட்ட 130 கி.மீ.தூரம் நடந்தே வந்திருந்த படையினர் சோர்வு அடைந்து விட்டனர். மருதவாணனிடம் வைத்தியநாதன், "மருதா !இன்னும் இரண்டு,மூன்று நாட்களுக்குத் தான் உணவுப் பொருட்கள் உள்ளது". என்றான். விவரம் அறிந்த மற்றவர்கள், "பயப்படவேண்டாம்.காட்டில் கிடைக்கும் காய்கறிகள்,பழங்களைப் பறித்து உண்போம் "என்றார்கள். ஒருவன்,"ஒரு நேரம் மட்டும் சமைக்கலாம்".என்றான்.அனைவரும்ஒத்துக் கொண்டனர். கையெறி குண்டுகள்,துப்பாக்கி குண்டுகள் அனைத்தும் காலி ஆகிவிட்டன. தற்காத்துக் கொள்ள துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த கத்திகள் மட்டுமே இருந்தன. நேசப்படையின் விமானங்கள் விடாமல் துரத்தித் துரத்தி குண்டுகளை வீசின.கண் எதிரே கொத்துக் கொத்தாக வீரர்கள் மடிந்தனர்.காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் விழுந்து கிடந்தனர். கை,கால்களை இழந்தவர்கள் மன உறுதியை இழக்கவில்லை. "ஜய்ஹிந்த்" எனக் கூறி கையசைத்து பிறரை வழியனுப்பினர். செஞ்சிலுவைச் சங்கம் உதவ  வரும் போது எத்தனை பேர் பிழைத்திருப்பார்கள் எனத் தெரியவில்லையே என்று கனத்த மனதுடன் வைத்தியநாதனும், மருதவாணனும் நடந்தனர். நம்மிடம் பயிற்சி பெற்று நம்மையே எதிர்த்துப் போராடுகிறார்களே என்று ஆங்கிலேயர்கள்கோபமடைந்தனர்.தாக்குதல் மென்மேலும் தீவிரமானது.நேசப்படை அவர்களைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தது.நான்கு புறமும் அவர்களின் படையைச் சுற்றி வளைத்தது.வேறு வழியில்லாமல் மீதி இருந்த வீரர்கள் சரண் அடைந்தனர்.ஆங்கிலேயர்கள் அவர்களை பர்மாவிற்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். இந்திய விடுதலைக்காகப் போரிட்ட அந்த மாவீரர்கள் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்தனர்.
                      தொடரும். 

Tuesday, January 12, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 10.

இரண்டாம் உலகப் போர் தீவிரம் அடைந்தது.நேசநாடுகள் அணியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இருந்தன.அத்துடன் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. தாங்கள் இழந்த இடங்களை எல்லாம் ஆங்கிலேயர்கள் அவர்களின் கூட்டணிப் படைகளுடன் இணைந்து மீண்டும் கைப்பற்றினர். ஆங்கிலேயரின் கை ஓங்கியது.1945 ஏப்ரல் மாதம் ஜெர்மன் சரண் அடைந்தது.ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். 1945 ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியும் 9 ஆம் தேதியும் ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டை வீசியது.ஒரு லட்சத்திற்கு மேலாக சாமானிய மக்கள் இறந்தனர்.உயிர் பிழைத்தவர்களும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து  ஜப்பான் சரண் அடைந்து விட்டது.இந்திய தேசிய ராணுவத்திற்கு    கிடைத்த  உதவிகள் நின்று போயிற்று.போரை மேற்கொண்டு நடத்த முடியாத     சூழ்நிலை ஏற்பட்டது.                          நேதாஜி வானொலியில்   உரையாற்றத் தொடங்கினார். "வீரர்களே, நீங்கள் அனைவரும் என்றாவது ஒரு நாள் வீடு திரும்புவீர்கள். அப்போது, நாம் பட்ட வேதனைகளையும் வலிகளையும்   உங்கள் குழந்தைகளுக்குக் கதைகளாக எடுத்துச் சொல்லுங்கள். எதிர்காலத்தில்  நம் தேசத்தில் இருள் சூழ்கிறபோது, இந்தக் கதைகள் அவர்களுக்கு நம்பிக்கையையும் வீரத்தையும் கற்றுத் தரும்." என்றார்.ஆஸாத் ஹிந்த் பத்திரிக்கையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
"நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றைக் கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!".வீறு கொண்டு எழுந்த   வீரர்கள்   இருந்த தளவாடங்களைக் கொண்டு  ஆவேசமாகக் களத்தில் மோதினர். ஆனால் வான்வழித் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறினர். எதிரி விமானத்தைக் கண்டதும் சைரன் ஒலி எழுப்புவார்கள். உடனடியாக பதுங்கு குழிக்குள் இறங்கிவிட வேண்டும். மேலே இருந்து பார்த்தால் வீரர்களைப் பார்க்க முடியாது.ஒரு நாள் வைத்தியநாதனும்  மருதவாணனும் தங்கள் குழுவோடு சென்று கொண்டிருந்தனர்.சைரன் ஒலித்ததும் அனைவரும் ஆங்காங்கே    பதுங்குகுழிக்குள் இறங்கினார்கள்.ஒரு குழிக்குள் குண்டு  விழுந்தது. உள்ளே இருந்தவரின் அலறல் அங்கிருந்தவர்களின் காதில் ஒலித்தது. குழுவுக்கு ஒரு மருத்துவரும் கூடவே வருவார். விமானம் கடந்து சென்றதும்  சிலர் காயம் பட்டவரைத் தூக்க ஓடினர்.மருதவாணன் டாக்டரைத் தேடிப்பார்த்து கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று கூறி ஓடினான்.உள்ளே இருந்தவனை வெளியே தூக்கி வந்தனர். முகத்தைப் பார்த்த பின்புதான் அது டாக்டர் எனத் தெரிந்தது.டாக்டரைத் தேடியவன்  அவரைக் காணவில்லை என்று திரும்பி வந்தான்." அடிபட்டு உயிரிழந்தவர் டாக்டர்தான்"என்று வைத்தியநாதன் கூறினான். நம்மைக் காப்பாற்ற வந்தவருக்கு இப்படி ஆகி விட்டதே என்று அனைவரும் வருந்தினர். 
       கூடாரத்தில்  அன்று இரவு டாக்டரின் நினைவாகவே இருந்தது."நாம் ஆங்கிலேயருக்காகப் போராடிய போது என் காலில் பாய்ந்த குண்டைத்  தோண்டி எடுத்து மருத்துவம் பார்த்தார்.நான் கத்தினேன். கதறினேன்.உன் கால் உனக்கு  வேண்டுமென்றால் சற்று அமைதியாக இரு என்று சமாதானம் செய்தார்.அவர் இல்லை என்றால் என் கால் செப்டிக் ஆகியிருக்கும். இன்று நான் நடப்பதற்கு அவர்தான் காரணம்" என்று ஒரு வீரன் கண்ணீர் விட்டான்.அப்பொழுது உள்ளே வந்த மேஜர் " வீரர்களே! இது அழவேண்டிய
நேரம் இல்லை. பழிக்குப்பழி.வானில் பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்த பீரங்கிகளைப் பயன்படுத்தப் போகிறோம்.வெற்றி நமதே.ஜய் ஹிந்த்." என முழங்கினார்."ஜய் ஹிந்த்" என அனைவரும் குரல் கொடுத்தனர்.நாளை நாம் ஒரு கை பார்த்து விடுவோம் என்ற உறுதியுடன் சற்றே ஓய்வெடுத்தனர். காலையில் பொழுதுவிடிந்ததும் தயாராகி விட்டனர்.   வைத்தியநாதனும்,மருத வாணனும் சப்பாத்திகளைச் சுட்டு இலைகளில் வைத்து அடுக்கிக் கொண்டிருந்தனர். வீரர்கள் தமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டனர். மேஜர் உள்ளே வந்தார். வைத்தியநாதனைப்  பார்த்ததும், "அச்சா! இன்று நானும்  சப்பாத்தி எடுத்துக் கொள்கிறேன்." என்றார்."மேஜர் சார்!  சப்பாத்தி சுட்டு விட்டேன்.அடுத்து ஆங்கிலேயரின் விமானத்தை சுடப் போகிறேன்." என்றான் வைத்தியநாதன். தோளில் தட்டிக் கொடுத்து, "உன்னைப் போன்ற இளைஞர்கள் நீடுழி வாழ வேண்டும்." என வாழ்த்தினார். கூடாரத்தை சுருட்டி மடக்கி ஜீப்பில் ஏற்றினர். எதிரிகளின் தாக்குதலை  முறிடிக்கத் தயார் நிலையில் நகரத் தொடங்கினர். 
                     தொடரும். 

Tuesday, January 5, 2021

இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 9

நேதாஜியின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கியது. சிங்கப்பூரைத் தலைமை இடமாகக் கொண்டு சுதந்திர இந்தியாவை அறிவித்தார்.தானே பிரதமராகவும்,
ராணுவத் தளபதியாகவும் பொறுப்பேற்றார்.அமைச்சரவை அமைக்கப் பட்டது.மகிழ்ச்சியில் வெளி நாட்டு இந்தியமக்கள் தங்களால் இயன்றவரை பொருளுதவி செய்தனர்.ஒரு வங்கியையே தொடங்கும் அளவிற்கு நிதி திரண்டது. Bank of Independence என்ற புதிய வங்கியைத் தொடங்கினார்.  நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. (இது நேதாஜியின் 113ஆவது பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டின் படம்.இந்திய தேசிய ராணுவம் பயன்படுத்த தனது இடத்தைக் கொடுத்த பிராகிலால் என்ற வீீீரருக்குத் தரப்பட்டது. ராமாயணப் புத்தகத்தில்  பத்திரமாக வைத்திருந்த அந்த ரூபாய்த்தாள்
அவரது மகனால் பல ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப் பட்டது.)  தன் வீரர்களுக்குக்  கடுமையான பயிற்சி அளித்தார்.படை வீரர்களின் முகாம்களுக்குச் சென்று வீர உரையாற்றினார்.ஒரே ஒரு முறை வைத்தியநாதன் இருந்த படைப் பிரிவிற்கு வந்தார்.அவரது கம்பீரமும், சிங்கம் போன்ற முழக்கமும்  அனைவரையும் கவர்ந்தது.தங்களது தலைவனை நேரில் கண்டது பெரும் உற்சாகத்தைத் தந்தது.ஆஸாத் ரேடியோவில் அடிக்கடி பேசி தேசிய உணர்வை ஊட்டினார்.பர்மா ,மலேசியா நாடுகளில் இருந்த வீரர்கள் அதைக் கேட்டு எழுச்சி பெற்றனர்."டெல்லி சலோ"என்ற முழக்கம் கேட்டதும் ராணுவம் இந்தியாவை நோக்கி முன்னேறியது.    
தரைப்படைக்கு தில்லான் தலைமைப் பொறுப்பேற்றார்.பெண்கள்
படையை லெட்சுமி சுவாமிநாதன் வழிநடத்தினார்.பெண்களின் படையைக் கண்டு அனைவரும்  வியந்து போனார்கள். மருதவாணன்,"பார்த்தாயா வைத்தியநாதா! நம் பெண்கள் ஆங்கிலேயரை விரட்ட களம் இறங்கி விட்டனர்." என்றான். " வீரமங்கை வேலு நாச்சியாரும்,ஜான்சி ராணியும் பிறந்த மண் நம் பாரதம். வீரமும்,தீரமும் பெண்களிடம்  உள்ளது." என்றான் வைத்தியநாதன். அடிக்கடி  வானொலியில் வீரர்களிடம் பேசினார். "சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல. எடுக்கப்படுவது".என்று முழங்கினார்."குழந்தை அழுது புரட்சி செய்துதான் தனக்குத் தேவையானதைப் பெறுகிறது." என்றார். ராணுவத்தினர் அவரது உரையாடலால் எழுச்சி பெற்றனர். "கதம் கதம் படாயே "
என்ற  அணிவகுப்புப் பாடல் இந்தியர்களின் தேசபக்திப் பாடல் ஆகியது.இந்திய தேசிய ராணுவம்  படிப்படியாய் நகர்ந்தது. "மருதவாணா! உனக்குத் தெரியுமா?பெண்கள் அணியில் தற்கொலைப் படை உருவாக்கப் பட்டுள்ளது". என்று வைத்தியநாதன் கூறியதும் "அப்படியா? " என்றான் மருதவாணன். "ஆங்கிலேயரின் பீரங்கிகள் வரும் போது வெடி குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வழியில்  படுத்துக் கொள்ளப் போகிறார்களாம்." என்று வைத்தியநாதன் கூறினான்.. இந்திய தேசிய ராணுவம்,ஆங்கில ராணுவத்தைப் படிப்படியாக வென்று 
மணிப்பூர், இம்பால்,கொஹிமா வரை முன்னேறிச் சென்று விட்டது. இது ஆங்கிலேயருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்திய தேசிய ராணுவத்தை அடக்க திட்டம் இட்டனர்.  
                        தொடரும்.