Tuesday, December 31, 2019

கங்காரு தேசம் 19

புத்தாண்டுக் கொண்டாட்டம் 2020 பிரிஸ்பேன் நகரத்தில் புத்தாண்டை முன்னிட்டு இரு  நேரங்களில் பட்டாசுகள் பொருத்தப்பட்டு வானவேடிக்கை நடைபெறுகிறது. டிசம்பர் 31ஆம் நாள் இரவு 8.30 மணிக்கு  முதல்  வானவேடிக்கை நடைபெறுகிறது.இதைக் காண பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகிறார்கள். இரவு 12 மணிக்கு இளவயது ஆண்கள்,பெண்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் வந்து வானவேடிக்கையைக் கண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து புத்தாண்டை வரவேற்கிறார்கள்.
                  நாங்கள்  மாலை 6.30 மணிக்கு  வீட்டில் இருந்து கிளம்பினோம்.நகர்ப் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஆட்கள் ஏறினார்கள்.நிற்கும் பயணிகளை இன்றுதான் கண்டேன். சிறுவர், சிறுமியர் நிறைய இருந்தனர். கலகல எனப் பேசிக் கொண்டிருந்தனர். கல்ச்சுரல் சென்டர் நிறுத்தத்தில் இறங்கினோம். பிரிஸ்பேன் ஆற்றங்கரையில் திருவிழாக் கூட்டம் இருந்தது. சித்திரா பௌணர்மியன்று
ஆற்றங்கரையில்  நாம் கூடுவது போல் மக்கள் குழுமி இருந்தனர். குடும்பம்குடும்பமாக விரிப்பை விரித்து அமர்ந்திருந்தனர். சிலர் படுத்துக் கொண்டிருந்தனர்.இடம் பிடிப்பதற்காக காலை முதலே வரத் தொடங்கி விடுவார்களாம். ஆற்றங்கரை ஓரமாக சற்று நேரம்  நடந்தோம். கூட்டமான இடங்களைத் தவிர்த்து விட்டு ஒரு பாலத்தில் நிற்க முடிவு செய்தோம். கல்ச்சுரல் சென்டர் அமைந்திருந்த ரோட்டைக் கடக்க பாலம் இருந்தது. அதில்  கைபிடிச் சுவரை  ஒட்டி நின்று கொண்டோம்.
ஆற்றின் நடுவில் ஐந்து இடங்களில் barge எனப்படும் மேடைகளை அமைத்து  பட்டாசுகளை வைத்திருந்தார்கள். சரியாக 8.30 மணிக்கு அனைத்தையும் வெடிக்க ஆரம்பித்தனர்.
 


சுமார் 10 நிமிடங்கள் பட்டாசுகள் பூப்பூவாய் வெடித்துச் சிதறின. இந்நிகழ்ச்சி காண்போர் உள்ளத்தைக்   கவர்ந்தது.இது அரசாங்கத்தால்    நடத்தப்படுகிறது.தனி மனிதர்கள் பட்டாசு வெடிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.  கிளப் நடத்துபவர்கள் உரிய அனுமதி பெற்று பட்டாசு  விற்கும் நிறுவனம் மூலம் வெடிக்கலாம். நிகழ்வை ரசித்துவிட்டு வீீடு திரும்பும் போது பேருந்துப் பயணத்திற்குக் கட்டணம் செலுத்தவில்லை. ஏனெனில் 31 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 1ஆம் தேதி மாலை5.30 வரை பேருந்துப் பயணம் இலவசம்.இரவு 9.30 மணிக்கு வீீடு வந்து சேர்ந்தோம்.
                   தொடரும்.





Monday, December 30, 2019

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 6

மதராஸ் நகரில் இருந்து 2 ட்ரக்குகளில்  வீரர்கள் ஏறினர். நாயக், ஹவில்தார், மேஜர் என்ற தகுதிகளில்  இருந்தவர்களும் இருந்தனர்.ஒரு ட்ரக்கில் தளவாடங்கள் ஏற்றப்பட்டன. முன்புறமும்,பின் புறமும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவலுக்கு அமர்த்தப் பட்டனர்.ரயில் பாதை ஏதும் இவர்கள் சென்ற பாதையில் இல்லை. காடு மேடுகளிலும்,மலைப் பாதைகளிலும் செல்லும் வகையில் ட்ரக் வடிமைக்கப் பட்டிருந்தது. உணவும்,உறக்கமும் சரியாக இருந்தால் தான் போரிட முடியும் என்பதால் ஆங்காங்குள்ள ஊர்களில்  உணவு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரவுகளில் 5 மணி நேரம் உறங்க அனுமதிக்கப் பட்டனர்.
      நெல்லூர்,ஓங்கோல்,விஜயவாடா ஆகிய ஊர்களுக்குச் சென்ற போது அங்கிருந்த ராணுவமும் சேர்ந்து கொண்டது. தந்தி அனுப்பும் வசதி இருந்ததால் உயர் அதிகாரிகளின் கட்டளைகளை வழியில் இருந்த ஊர்களில் அறிய முடிந்தது. பதில் அனுப்பவும் செய்தனர். பர்மாவை நோக்கி ஜப்பான் படைகள் முன்னேறிக் கொண்டிருப்பதால் தமது ராணுவம் அங்கே செல்வதாக அறிவித்தனர். கல்கத்தா நகரில் டாங்கர்களும் இணைந்தன. மிகப் பெரிய படை உருவானது. ஹூக்ளி ஆற்றங்கரையில் பாசறைகள் உருவாகின.மதராஸில் இருந்து அடுத்த பிரிவு ராணுவம் வந்து விட்டது. அதில் மருதவாணன் இருந்தான். மொத்த ராணுவத்தினரும்  பெரிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.  48ஆவது இந்தியன் இன்ஃபேன்டரி பிரிவில் வைத்தியநாதனும், மருதவாணனும் இருந்தனர்.
           போதுமான அளவு தளவாடங்கள் வந்து சேர்ந்தது.Lee Enfield துப்பாக்கி,ஷாட் கன்,மிஷன் கன், கையெறி குண்டு என்று அனைத்தையும் கையாள்வதற்கு பயிற்சிகள் தரப்பட்டன. போர் ஒத்திகை நடைபெற்றது. துப்பாக்கியால் சுட்டால் மட்டும் போதாது. சப்பாத்தி சுடவும் தெரிய வேண்டும். எனவே குழுவாகப் பிரிந்து சமைக்கவும் செய்தனர். வைத்திய நாதன் அனைத்திலும் விற்பன்னன் ஆனான். சிப்பாய்கள் மட்டுமே சமைத்துச் சாப்பிடுவார்கள். உயர் நிலையில் உள்ளவர்களுக்கு வேறு ஓர் இடத்தில் உணவு சமைத்துப் பரிமாறுவார்கள்.ஒரு நாள் வைத்திய நாதன் சப்ஜி சமைத்துக் கொண்டிருந்தான்.அவ்வழியே சென்ற ஹவில்தாரை  சப்ஜியின் மணம் மயங்க வைத்தது.இந்தியில் "எனக்கு சாப்பாடு கிடைக்குமா"? எனக் கேட்க சந்தோஷமாக உட்கார வைத்துப் பரிமாறினான். அதன் பிறகு சில ஹவில்தார்கள்  சப்ஜி சாப்பிடுவதற்காகவே கூடாரத்திற்கு வந்து போனார்கள். மருதவாணன் எப்போதும் வைத்தியநாதனுடன் இருந்தான். போர்முனையில் காயம் பட்டவர்களை அழைத்துச் செல்ல ஜீப் ஓட்டத் தெரிய வேண்டும். எனவே சிலருக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்தார்கள்.நண்பர்கள் இருவரும் அதிலும் பயிற்சி பெற்றனர்.
                   1941ல் ஜப்பான் பிரிட்டிஷாரின் காலனி நாடுகளைத் தாக்கத் தொடங்கியது. ஜெர்மன் நாட்டின் ஹிட்லரும்,இத்தாலி நாட்டின் முஸோலினியும் ஜப்பானுடன் சேர்ந்தனர். 48 ஆவது இந்தியன் இன்ஃபேன்ட்ரி உடனடியாகக் கிளம்ப வேண்டுமென உத்தரவிடப் பட்டது. ராணுவ வீரர்கள் மணிப்பூர் வழியாக பர்மாவிற்குள் நுழைந்தனர். ஆங்கிலேயரிடம் கட்டுப்பாட்டில் தான் பர்மா இருந்தது.
               தொடரும்

Friday, December 27, 2019

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 2

தொடர் 2
 குழந்தை வைத்திய நாதன் எல்லோருக்கும் செல்லப் பையன் ஆனான்.துறுதுறு என சேட்டை செய்து கொண்டே இருப்பான். ஆவுடை ஆச்சி முழு நேரமும் பேரன் பின்னால் சுற்றுவாள்.நடக்க,ஓட ஆரம்பித்ததும் அவனைப் பிடிக்க முடியவில்லை.5 வயதான போது பேரனைக் காணோமென்று  ஊர் பூராவும் சுற்றித் திரிந்தாள். "வைத்தியா! எங்கேடா இருக்கிறாய்?" எனக் கேட்டுக் கொண்டே நடக்க மாமரத்தின் மேல் இருந்து "ஆச்சி",எனக் குரல் கேட்டது. மரக்கிளைகளை நன்கு பிடித்துக் கொண்டு அவன் இறங்கிய வேகத்தைப் பார்த்து மலைத்துப் போனாள்.ஒரு நாள் கையில் ஏதோ கீறல் விழுந்து ரத்தம் வந்து கொண்டு இருந்தது.கூட்டி வந்த பையன்கள் பதறினார்கள்."குரங்கு நகங்களால் கீறி விட்டது."என்றார்கள்.அம்மா அவனை வைத்தியரிடம் இழுத்துக் கொண்டு போனாள்.பச்சிலையைக் கசக்கி அந்த இடத்தில் வைத்தார்.பயப்பட வேண்டாம் என அனுப்பி விட்டார். வீட்டிற்கு வந்த உடன் விஷயத்தைச் சொன்னான்."ஆச்சி! நீ  பஞ்சு கொடுத்தாய் இல்லையா.அதைக்கொண்டு போய் கடையில் கொடுத்து விட்டு வாழைப்பழம் வாங்கினேன். அதைக் குரங்கு என்னிடம் இருந்து
பறித்தது.நான் சண்டை போட்டேன். ஆனால் அது பிடுங்கி விட்டது" என்றான்.அந்த வடு மாறவேயில்லை.
            5 வயது  ஆனதும் திண்ணைப் பள்ளிக்கு அனுப்பினார்கள்.ஐந்து வருடங்கள் ஓடின.அதற்குப் பின் வெளியூர் தான் செல்ல வேண்டும். அண்ணன்  குமரனை திருமங்கலத்தில்  இருந்த தாய்வழித் தாத்தா வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். ராசாத்திக்குத் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்று விட்டாள்.வைத்தியநாதனை வெளியூர் அனுப்ப அம்மாவிற்கு மனமில்லை. வயல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்.அவன் உழைப்பால் நல்ல விளைச்சல் கிடைத்தது.ஓரிரு வருடத்தில் விதி விளையாடத் தொடங்கியது .வைத்தியநாதனின் தந்தை அண்ணாமலை திடீரென்று நெஞ்சுவலியால் காலமானார். அடுத்தடுத்து ஆச்சியும்,அம்மாவும் இறைவனடி சேர்ந்தனர்.அக்கா தன்னுடன் வருமாறு அழைத்தாள்.ராசாத்திக்கு  மூன்று குழந்தைகள் இருந்தனர்.கணவரின் 
குறைந்த வருமானத்தில் எப்படியோ சமாளித்து  வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருந்தாள்.எனவே  அங்கு செல்ல வைத்திய நாதனுக்கு மனமில்லை.அண்ணன் குமரன் திருமங்கலத்தில் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு செயலாற்றிக் கொண்டிருந்தான். ஊரில் மழை, தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போனது.15 வயதான வைத்திய நாதன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தான். தாய்மாமன் முத்துச் சாமி மதுரையில்  குடியேறி இருந்தார். ஏதேனும் வேலை கிடைக்கும்.  மதுரைக்கு வந்து விடு என்று கடிதம் எழுதியிருந்தார்.வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது என்பதை அறியாமல் வைத்திய நாதன் டிரங்குப் பெட்டியுடன் மதுரையில் காலடி வைத்தான்.
                  தொடரும்.

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை.1

 தொடர் 1
பசு மாட்டின் "ம்மா" என்ற குரல் கேட்டு  தங்கம் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.மூத்த பெண் ராசாத்தியும், இரண்டாவது பையன் குமரனும் தூங்கிக் கொண்டு இருந்தனர். பொழுது புலர்ந்து விட்டது.கணவர் உழுவதற்கு கலப்பையோடு கிளம்பிப் போயிருப்பாரே.நீராகாரம்  குடித்து விட்டுப் போனாரா?  என நினைத்துக் கொண்டே வெளியே வந்தாள். மாமியார் ஆவுடையம்மாள் வாசலில் சாணி தெளித்து மாக்கோலம் போட்டிருந்தார்.பின்கட்டுக்குப் போனாள்.விறகு அடுப்பில் தண்ணீர்
காய்ந்து கொண்டிருந்தது."அத்தை!என்னை ஏன் எழுப்பவில்லை?ஒரு சத்தம் கொடுத்து இருந்தால்  எழுந்திருப்பேனே".என்றாள் தங்கம்."நீ நிறை மாதக் கர்ப்பிணி.குழந்தை  பிறந்து விட்டால் தூங்க முடியாது  தாயீ.அண்ணாமலைை நீராகாரம் குடித்து விட்டுதான் போனான். உனக்கு வெந்நீர் போட்டிருக்கிறேன். பல் தேய்க்க,வாய் கொப்பளிக்க, முகம் கழுவ அதை எடுத்துக் கொள்.நான் போய் ஆற்றில்  போய் துவைத்துக் குளித்து விட்டு வருகிறேன்".என்று கூறிக் கிளம்பினாள் ஆவுடையம்மாள்.
             வைப்பாற்றில் தண்ணீர் சலசல என ஓடிக் கொண்டிருந்தது. அங்கே தோண்டப் பட்டிருந்த ஊற்றுத் தண்ணீர் தேனாய் இனிக்கும். குளித்து விட்டு ஒரு குடம்  தண்ணீரோடு துவைத்த துணிகளைத் தோளில் போட்டுக் கொண்டு ஆவுடையம்மாள் நடந்தாள்.அடுத்த வீட்டுச் சிறுமி "ஆச்சி! தங்கம் அத்தைக்கு இடுப்பு வலிக்குதாம்   சீக்கிரம் வாங்க" என்றாள்.பின்னால் வந்த பெண் குடத்தை வாங்கிக் கொள்ள ஆவுடையம்மாள் ஓட்டமும்    நடையுமாய் வீடு போய்ச் சேர்ந்தாள்.வயதில் மூத்த பெண்கள்  வந்து தங்கத்தை ஓரத்தில் பிள்ளைப் பேற்றுக்கு என ஒதுக்கி இருந்த அறைக்குள் அழைத்துச் சென்றனர்.மருத்துவச்சி வந்து விட்டார்.அரை மணி நேரத்தில் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. கத்திய கத்தே ஆண் குழந்தை என்பதை உணர்த்தியது. சற்று நேரத்தில் அண்ணாமலையும் வந்து சேர்ந்தார்.பக்கத்து  வீட்டு ஜோசியர் " உன் பிள்ளை பிறந்த நேரம்,அருமையான நேரம்.அயல் நாட்டுக்குப் போவான்.வீரதீரமாய் வருவான்."என்றார்.1920ல் பிறந்த அந்தக் குழந்தைக்கு வைத்திய நாதன் எனப் பெயரிட்டனர். 
                தொடரும்.

Monday, December 23, 2019

அறியாப் பருவம்

சீதா எட்டாம் வகுப்பு ஆசிரியை.பள்ளிநேரம் முடிந்து மாணவ, மாணவிகள்
சிட்டுக்குருவிகள் போல் பறந்து விட்டனர். இனி ஆசிரிய, ஆசிரியைகள் கிளம்பலாம்.தன் கைப்பையை எடுத்துக் கொண்டு சீதா கிளம்பினாள்.அலுவலக ஊழியர் ஒருவர் வேகமாக வந்து,"டீச்சர், ஹெச்.எம் உங்களை வரச்சொன்னார்கள்"என்றார்.ஹெச்.எம். ரூமிற்குள் சென்றாள்.அங்கே அவளது வகுப்பில் படிக்கும் மாணவனின்  அப்பா கவலையோடு நின்று கொண்டு இருந்தார். அம்மா கண்களில்  கண்ணீரோடு  நின்றார். "சீதா, இவர்களின் பையன் பாபு எப்பொழுது கிளம்பினான்?"என்று ஹெச்.எம் கேட்க," பெல் அடித்த பின்னர் தான் கிளம்பினான்.ஐந்து நிமிடங்கள் ஆகி இருக்கும்." என்று பதில் கூறினாள்."இவர்களுக்கு அரைமணி நேரத்திற்கு முன் யாரோ ஃபோன் செய்து பையன் விபத்தில் மாட்டி ஆஸ்பத்திரியில் இருப்பதாகக்  கூறி உள்ளனர்.என்ன  எனக் கேட்கத் தான் கூப்பிட்டேன்". என்றார் தலைமை ஆசிரியை."அம்மா, அதற்கு வாய்ப்பே இல்லை.வகுப்பில் இருந்து கடைசி ஆளாகக் கிளம்பினான். போய்விட்டு வருகிறேன்.தாங்க் யூ டீச்சர் என்று சொல்லி விட்டுப் போனான்."என்றாள் சீதா. "நிச்சயமாகத் தெரியுமா?"என ஹெச்.எம் கேட்க "ஆம்"என்றாள்.
பள்ளி நிர்வாகியாக இருந்த பெரியவர்  உடனே ஒரு  ஆசிரியரை அழைத்து ," சார் , நீங்கள் உடனடியாக டூவீலரில் சென்று பையன் வீட்டில் 
இருக்கிறானா?என்று பார்த்து விட்டு வாருங்கள்.சீதா,அவர்கள் அட்ரஸை
எழுதிக் கொடுங்கள்". என்றார்கள். ரிஜிஸ்டரைப் பார்த்து எழுதிக் கொடுத்தாள். " அம்மா, உங்கள் பையன் நன்றாக இருப்பான்.யாரோ
தவறுதலாக  ஃபோன் செய்து இருக்கிறார்கள்."என்று அனைவரும் ஆறுதல் கூறினார்கள். பையனின் தாய் அழுது புலம்பிக் கொண்டு இருந்தாள்.நிமிடங்கள் யுகமாய் நகர்ந்தன.
                  பத்து நிமிடத்தில்  அந்த ஆசிரியர், பையன் வீட்டில் இருப்பதாகத் தகவல் கொடுத்தார். பையன் ஷேர் ஆட்டோவில் வீட்டிற்குப் போனதாகவும் டி.வி பார்த்துக் கொண்டு இருந்தான் என்றும்  அலைபேசியில் தெரிவித்தார். அப்பாடா என்று இருந்தது.ஏதேனும் நடந்தால் ஆசிரியர்  தானே பொறுப்பு. மகிழ்ச்சியாக பெற்றோர் விடை பெற்றனர். "ஃபோனில் பையன் பெயரைச்  சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.அப்பாவின் ஃபோன்  நம்பரும் தெரிந்து இருக்கிறது.  யார் இப்படிச் செய்திருக்கக் கூடும் ".என தலைமை ஆசிரியையும் சீதாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.  சீதாவிற்குத் திடீரென நினைவு வந்தது."அம்மா! அந்தப் பையன் பாத்ரூம் அவசரமாகப் போக வேண்டும் எனக் கேட்டான்.நான் அனுமதி தந்தேன்."என்றாள்.உடனே ஒரு ஆசிரியரை அருகில் இருந்த டெலிபோன் பூத்தில் விசாரிக்கச் 
சொல்லி பெரியவர் அனுப்பி வைத்தார். பூத் நடத்தியவர் கூறிய
தகவல்களை வைத்துப் பார்க்கும்போது பையனே தான் செய்திருக்கிறான் எனத் தெரிந்தது.வாட்ச் மேனை விசாரிக்க, அவர்  பாத்ரூம் சென்றபோது அவன் ஓடி விட்டதாகவும்,திரும்பி உள்ளே வரும்போது திட்டி அனுப்பியதாகவும் கூறினார். 
                மறுநாள் அவன்  வகுப்பிற்கு வந்த உடன்  அலுவலகத்திற்கு அழைத்து வருவதாக சீதா சொன்னாள். மறுநாள் பாபுவின் வருகைக்குக்  காத்திருந்தாள். பிரேயர் முடிந்து வகுப்பும் ஆரம்பித்து விட்டது. சற்று நேரத்தில் அலுவகத்தில்  இருந்து அவளை வரச்சொல்லி அழைப்பு வந்தது.உள்ளே நுழைந்த போது பாபுவும், பெற்றோரும் நின்று கொண்டு இருந்தார்கள்." டீச்சர்! என் பையனை மன்னித்து விடுங்கள்." என்று வேண்டினார்கள்."பாபு! நீ வகுப்பிற்குப் போ." என்று   தலைமை ஆசிரியை அனுப்பி வைத்தார். அதற்குப் பிறகு பையனின் அப்பா ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியை விவரித்தார். பாபு மற்றும் சிலர் காலி இடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து அருகில் இருந்த ஒரு பெரிய வீட்டின் கண்ணாடி ஜன்னல் மீது பட்டு கண்ணாடி தெறித்து விழுந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் சத்தம் போட்டிருக்கிறார். பையன்கள் பதிலுக்கு பதில் கூறியுள்ளனர். கோபமடைந்த  அவர்  காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஏதோ பெரிய சண்டை நடப்பதாக நினைத்து உடனே அங்கு  போலீஸார் வந்து விட்டனர். இனி இங்கு விளையாடக்
கூடாது என அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.இதைப் பார்த்த ஒருவர் பாபுவின் அப்பாவிடம் வந்து போலீஸார் அவனை விசாரணை செய்து கொண்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.பதறிப் போன அப்பா பாபு உள்ளே நுழைந்ததும் அடித்து நொறுக்கி விட்டார். பாபு அழுது கொண்டே இருந்திருக்கிறான். மறு நாள் அப்பா, அம்மா இருவரையும் அழ வைக்க வேண்டும் என்று எண்ணி எல்லா வேலையையும் செய்திருக்கிறான் எனக் கூறினார். "ஸாரி. எங்களை  மன்னித்து விடுங்கள்" என்று கூறிச் சென்று விட்டார். இதைக் கேட்ட சுமதிக்கு தலை சுற்றியது.நாம் சின்னப்  பையன் என நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.அவன் புத்தி இப்படி இருக்கிறதே என்று வருத்தமாக இருந்தது. தலைமை ஆசிரியையிடம் "நான் வகுப்பிற்குப் போய் அவனை அனுப்புகிறேன் .நன்றாகத் திட்டி அனுப்புங்கள், அம்மா"என்றாள் சுமதி. பள்ளியில் ஆயிரக் கணக்கான மாணவர்களைப் பார்த்த,  அனுபவத்தில்  முதிர்ந்த, பெரியவர்  சிரித்துக்கொண்டே, "அதெல்லாம்  ஒன்றும் வேண்டாம். நீங்களும் ஒன்றும் கேட்காதீர்கள். இது இரண்டும் கெட்டான் வயது.பாம்பென்று அடிக்கவும் முடியாது.பழுதென்று  ஒதுக்கவும் முடியாது.அறியாப் பருவம்.எனவே பெரிது படுத்த வேண்டாம்." என்று கூறினார்.சரி என்று கூறி வகுப்பிற்குச் சென்றாள். ஒன்றுமே நடக்காதது போல பாபு அமர்ந்திருந்தான்.
              ஐந்து,ஆறு ஆண்டுகள் கடந்தன.பெரியவர்  இறைவனடி சேர்ந்து விட்டார். ஒருநாள் காலையில் இளைஞன் ஒருவன் வகுப்பில் வந்து நின்றான். "வணக்கம்.நன்றாக இருக்கிறீர்களா? டீச்சர்". என்றான்.  சீதா யாரிவன்  என யோசித்த போது அவன்" நான்  பாபு" என்றான்.அடடா!பாபுவா இது?"எப்படி இருக்கிறாய்?என்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?"என்றாள். "நன்றாக இருக்கிறேன். பாலிடெக்னிக்கில்  எலக்ட்ரானிக்ஸ்  படித்துக் கொண்டு இருக்கிறேன். அடுத்த ஆண்டு B.E ல் சேரப் போகிறேன்."என்றான். "நான் உங்களை  மிகவும் கஷ்டபடுத்தி  இருக்கிறேன்.இப்பொழுது உங்களைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.அதனால் வந்தேன். நான் மாறி விட்டேன். என் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்கிறேன்.நேரமாகி விட்டது.கிளம்புகிறேன்."எனக் கூறி நகர்ந்தான்."ஒரு நிமிடம் . ஹெச்.எம்
உன்னைப் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள் "என அழைத்துச் சென்றாள்.அவர்களும்  மகிழ்ச்சி அடைந்தார்கள். பெரியவர் கூறிய வாசகம் நினைவு வந்தது."அறியாப்பருவம்.பெரிது படுத்தாதீர்கள்." மறைந்த பெரியவரின் உருவப் படத்தைப் பார்த்தாள். நான் சொன்னது சரிதானே என சிரித்த முகத்துடன் சீதாவைப் பார்ப்பது  போல் தோன்றியது.










கங்காரு தேசம் 18

கண்டேன் கங்காருவை
LONEPINE KOALA SANCTUARY
இந்த சரணாலயம் Fig tree pocket என்ற பகுதியில் உள்ளது.1927ஆம் 
கோலாக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு
கங்காருகளுக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது.ஓம்பாட் (wombat), ஈமு,
காஸவரி,டாஸ்மேனியன் டெவில்,டிங்கோ, ஊர்வன, பறப்பன போன்ற அனைத்தும் இடம் பெற்றன. 
ஆஸ்திரேலியாவிற்கு வந்து ஒரு மாதம் ஆன பின்னரே கங்காருவைக்
காண வாய்ப்புக் கிடைத்தது. இயற்கையான சூழலில் பெரிய மைதானத்தில் அவைகளைக் கண்டோம்.
பின்னங்கால்களை ஊன்றி அவை  நிற்பதே ஒரு அழகுதான்.அதிக வேகத்தில் குதித்துக் குதித்து ஓடுகின்றன.
சரணாலயத்தில் விற்கப்படும் கங்காருக்களின் உணவை வாங்கி நாமே கங்காருக்களுக்கு ஊட்டலாம்.
Raptor show
இந்த நிகழ்ச்சியைக் காண ஒரு அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது. அமர்வதற்கு இருக்கைகள் உள்ளன.காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.ஒரு பெண்மணி மரக்கிளையைத்  தன் விரலால் தட்டினார்.ஆந்தை பறந்து வந்து கையில் வந்து உட்கார்ந்தது. பார்வையாளர்களின் தலைக்கு மேல் அங்கும் இங்கும் பறந்தது.தரப்பட்ட இரையை உண்டது.தன் முட்டைக்கண்களால் பார்த்து விட்டுச் சென்றது.மற்றோர்  பெண்மணி பெரிய கழுகை செய்கையால் அழைக்க அது கையில்  வந்து உட்கார்ந்தது.பார்வையாளர்கள் நன்கு பார்க்குமாறு சுற்றி வந்தார்.பின் இறக்கைகளைை விரித்துப் பறந்தது.                                     LORIKEET FEEDING
பஞ்சவர்ணக் கிளிகள் பலவற்றை ஒரே இடத்தில் காண வாய்ப்புக் கிடைத்தது.
அதன் உணவுத் தட்டை நாம் கையால் உயர்த்திப் பிடிக்க வந்து அமர்ந்து உண்கிறது.முதலில் 30க்கும் அதிகமானோர் நின்று கொண்டு இருந்தார்கள்.பறவைகள் கீழே வரவில்லை. அரைமணி நேரம் கழித்து மீண்டும் வந்தோம்.கூட்டம் குறைந்து ஓரிருவர் நின்றுகொண்டு இருந்தனர்.பஞ்சவர்ணக் கிளிகள் வந்து  நாங்கள் வைத்திருந்த ,அங்கு தயாரிக்கப்பட்ட உணவை  அருமையாக உண்டன.மகிழ்ச்சி அடைந்தோம்.
கோலா
நூற்றுக்கணக்கான கோலாக்களை இங்கு காணலாம்.

கங்காருவைப் போல கோலாவிற்கும் குட்டியைப்  பாதுகாக்க வயிற்றுப் பகுதியில் பை உள்ளது.ஒரு நாளில் 20 மணி நேரம் தூங்குமாம். இவை யூகலிப்டஸ் இலைகளை உண்கின்றன. பார்வையாளர்கள் கோலாவைத் தொட்டுப் பார்க்கலாம். அதற்கு நீண்ட வரிசை இருந்தது. கோலாவை கையில் வைத்ததுக் கொண்டு ஃபோட்டோ எடுக்க தனியாகக் கட்டணம் கட்ட வேண்டும்.
SHEEP DOG SHOW
நம் நாட்டில் துள்ளிக் குதித்தோடும் ஆடுகள் இந்த சரணாலயத்தில் ஒரு பகுதியில் மட்டுமே சுற்றிக் கொண்டு இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் ஆடுகள் வளர்க்கப் படுகின்றன. அவற்றைக் கண்காணிக்க நாய்கள் பணியில் உள்ளன.இந்த ஷோவில் நாய் ஒன்று ஆடுகளை வழி நடத்திச் சென்றது. ஒரு சுற்றை முடித்துக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.பணியை முடித்த சந்தோஷத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த நீரில் மூழ்கிக் குளித்து விளையாடியது.
பல வகையான பாம்புகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.ஓரிடத்தில் நீளமான பாம்பு ஒன்றை மாலை போல கழுத்தில் மாட்டி  ஃபோட்டோ எடுத்துக் கொண்டு இருந்தார்கள். கட்டணம் கட்டி வரிசையில் நின்று படம் எடுத்துக் கொள்ளலாம்.
பறவைகளில் குக்குபெராவைக் கண்டோம்."kookaburra sits on old gum tree" என்ற நர்சரி பாடல்  நினைவுக்கு வந்தது.அதன் குரல் சிரிப்பதைப் போல இருந்தது.laugh kookaburra laughஎன்பதன் பொருள் இப்போதுதான் புரிந்தது.
 

Cockatoo என்ற பறவையின் அலகு கிளியைப் போல உள்ளது.ஹலோ என்றதும் பதில் குரல் எழுப்புகிறது. சிவப்பு நிற இறக்கையைக் கொண்ட  காக்கட்டூ ஒன்றையும் பார்த்தோம்.

 ஈமு  என்ற பறவையைப் பார்த்தோம்.
கழுத்தில் நீலநிறம் உடைய ஒரு காஸவரியைப் பார்த்தோம்.  உலகில் அருகி வரும் உயிரினங்களில் இதுவும் ஒன்று.

பிளாடிபஸ்
நன்னீரில் வசிக்கும் இவை மின் அதிர்வை ஏற்படுத்தி இரை இருக்கும்  இடத்தை அறிகின்றன. ஆண் பிளாடிபஸின் குதிகால் போன்ற பாதத்தில் நச்சுச் சுரப்பிகள் உள்ளன.
நன்னீர் ஆமை,முதலை ,டிங்கோ என்னும் நாய் ஆகியவையும் இருந்தன.அடுத்து டாஸ்மேனியன் டெவில் என்ற விலங்கைப் பார்த்தோம்.அது நம் ஊர்ப் பெருச்சாளியின் பெரிய அண்ணன் போல இருந்தது.
இது சிறுவிலங்குகளை உண்ணக் கூடியது.டாஸ்மேனியாவில் மட்டுமே
வசிக்கிறது.பெயரில் டெவில் இருந்தாலும்  உண்மையில் அமைதியான விலங்கு.
       காலை 9.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சுற்றிப் பார்த்தோம்.உணவு உண்ண பெரிய இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவு, அங்கு  வாங்கிய உணவு என எதுவாக இருந்தாலும் அங்கு உட்கார்ந்து உணவு  அருந்தலாம். சரணாலயத்தின் உள்ளே Wifi வசதி செய்யப் பட்டுள்ளது.Bloggers lounge என ஆங்காங்கே இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.அங்கு அமர்ந்து blog எழுதி வெளியிடலாம்.பிரிஸ்பேன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோலா சரணாலயம், உலகத்தில் கோலாக்களுக்கான முதலாவது மற்றும் பெரிய சரணாலயம் என்னும் பெருமை பெற்றுள்ளது.
             தொடரும்.

Thursday, December 19, 2019

ஒட்டுதல்

சிம்மக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்த சுமதி தான் ஏறவேண்டிய
பேருந்தைப் பார்த்து மலைத்துப் போனாள். அப்படி ஒரு கூட்டம். படிக்கட்டில் கால் வைக்கக் கூட இடமில்லை. அடுத்த பஸ் வர அரை மணி நேரம் ஆகும்.இடித்துப் பிடித்துஏறி உள்ளே சென்றாள் அமர்ந்திருந்த ஒரு பெண், "நான் அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும். நீ உட்காரம்மா." என்று கூறினாள்."தேங்க்யூ"என்றபடி அமர்ந்தாள் சுமதி.
                    அடுத்து சேதுபதி ஸ்கூல் ஸ்டாப்பில் ஒரு இளம்பெண் தன் குழந்தையுடன் ஏறினாள்.சுமதியின் அருகில் வந்து நின்றதும் சுமதி நிமிர்ந்து பார்த்தாள்."குட்டிப் பாப்பாவை என்னிடம் தருகிறாயா?" எனக் கேட்டாள்." அவள் வந்தால் வைத்துக் கொள்ளுங்கள்" என்றாள் தாய். "குழந்தை  அவளிடம்  வராவிட்டால்  எழுந்து இடம் கொடுக்கலாம் என நினைத்துக் கொண்டாள்."பாப்பா,அத்தையிடம்  வா!" என்றதும் குழந்தை அவளிடம் தாவியது.முகத்தைப் பார்த்துச் சிரித்தது.சுமதி பேசப்பேச அந்தக் குட்டிப்  பெண் கவனித்து பதில் சொல்வது போல் குறுகுறு எனப் பார்த்தது.கை, கால்களை ஆட்டி சந்தோஷமாக விளையாடியது. "பாப்பா!என்னை உனக்குத் தெரியுமா? இப்படி சிரிக்கிறாயே." என்றாள் சுமதி." யாரிடமும் போக மாட்டாள்.உங்களிடம் வந்து விட்டாள்." என்றாள் தாய். "குழந்தையின் பெயர் என்ன?"எனக் கேட்டதும்  "கோமதி'"என்றாள் அதனுடைய தாய்.
                   "ஓ!அப்படியா? இந்தப் பெயரைக் கேட்டதும் எனக்கு ஒரு அத்தையின்  நினைவு வருகிறது நான் இவளைப் போல் இருந்த போது  என்னைத் தூக்கிக்  கொண்டு போய்  விடுவார்களாம். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான்.என்னை விட ஒரு வயது பெரியவன்.பெண் குழந்தை 
என்றால் அவ்வளவு பிரியம்.5,6 வருடம் கழித்து இரண்டாவதாகவும்
பையன் தான் பிறந்தான். எனவே அவர்களுக்கு செல்லப் பெண்  நான் தான்".என்றாள் சுமதி." நீங்கள் மணிநகரம்,25 வீடுகள் இருந்த
காம்பௌண்டில்  குடியிருந்தீர்களா?" என அப்பெண் கேட்டாள்." ஆமாம்" என்றவுடன் " உங்கள் கோமதி அத்தையின் பேத்திதான் இது". என்றாள் குழந்தையின் தாய். "இவளுடைய  அப்பா பின்னால் நின்றுகொண்டு இருக்கிறார். அவரைப் பார்த்தால் கண்டு பிடித்திருப்பீர்கள்."என்றும் சொன்னாள். " நான் உன்னை உன் கல்யாணத்தில் தான் பார்த்தேன். அதற்குப் பின் பார்க்கவில்லை." என்று சுமதி கூறினாள்.அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. "அத்தையைக் கேட்டதாகச்  சொல்" என்றாள் சுமதி.
           கோமதி அத்தை தூரத்து உறவினர் . ஆனால் ஒரே  இடத்தில் வசித்ததால் நெருங்கிய அத்தை ஆகி விட்டார்.காலப் போக்கில் வேறுவேறு  பகுதிகளில் குடியேறி விட்டோம். அவர் குரல்  இன்னும் மனதில் நிற்கிறது." ஏட்டி! எப்பிடி இருக்கே? மாப்பிள்ளை நல்லா இருக்காகளா? கல்யாணம் ஆனதும் என்னைய மறந்துட்டியே. அப்பப்ப வந்து பாத்துட்டு போ." என்பார். உண்மைதான்.திருமணம்,  குழந்தை,, வேலை என்று வந்ததும் சில உறவுகளைப் பார்க்க முடியாமல் போகிறது.ஆனாலும் மறக்க முடியாது.குழந்தையும்,தானும் ஒட்டிக் கொண்டது இந்த உறவால் தான் என்று சுமதிக்குத் தோன்றியது. கண்டிப்பாக  ஓர் நாள் அவர்களைப்  பார்த்து விட்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

Tuesday, December 17, 2019

நானும்,எஸ்கலேட்டரும்

 
ஒரு புதிய ஜவுளிக் கடை மதுரையில் பல அடுக்கு மாடிகளுடன் உதயமானது. எந்த செய்தித்தாளைப் பார்த்தாலும் விளம்பரம்  பெரியதாய் முதல் பக்கத்திலேயே இருந்தது.
             ஒரு நாள் காலை வகுப்புக்குள் நுழைந்தேன்.வணக்கம் டீச்சர் என மாணவர்கள் கூற வணக்கம் எனச் சொல்லி விட்டு முகங்களைப் பார்த்தேன்.அழுத முகமும்,சிந்திய
கண்ணீருமாக பிரேயர் முடிந்த பின்
வரும் மாணவன் சீக்கிரமாக சிரித்த 
முகத்தோடு வந்திருந்தான். "என்னடா இது?இன்று மாலை மழை கொட்டப் போகிறது."என்றதும் "உண்மை தான் டீச்சர்" என்றான் ஒரு மாணவன். எல்லோரும் சிரித்தனர்.
அந்த  மாணவன் "டீச்சர்"என்று அருகில் வந்தான்."ஒரு நிமிடம் இரு.நான் கையெழுத்து போட்டு விட்டு வருகிறேன்" என்றேன்."சரிங்க டீச்சர்"என்றவன் "அந்தப் பேனாவை என்னிடம்  கொடுங்கள்.நான் கொண்டு வந்து தருகிறேன்." என்றான்."ஒன்றும் வேண்டாம். இடத்திலே போய் உட்கார்" என்று கூறிச் சென்றேன். திரும்பி வரும்போது மேசையின் அருகில் 2,3 பேரோடு நின்று கொண்டு இருந்தான்.  "டீச்சர், இப்பொழுது பேசலாமா?" என்றான். "சரி"என்றதும் பேச ஆரம்பித்தான்.
                        "நேற்று  நாங்கள் புதுக்கடைக்குப் போய் டிரஸ் எடுத்தோம்."என்றதும் நான் "ஏன்டா? ரஃப்  நோட்டு வாங்க காசில்லை என்றாயே. இப்போது எங்கிருந்து வந்தது?"என்றேன்.அவன் முகம் சுருங்கியது."சரி.மேலே சொல்"என்றேன்."அந்தக் கடையில் நிறைய மாடி இருக்கிறது.ஒரு இடத்தில் கரண்ட் படிக்கட்டு.நாம் ஏறி
நின்றால் போதும்.அது கொண்டு போய் விட்டு விடும்".என்றான்."டேய்!அதன் பெயர்  எஸ்கலேட்டர்." என்றான் இன்னோர் மாணவன். அவன் ,"டீச்சர், நீங்கள் அதில் போயிருக்கிறீர்களா?" என்றான். நான்,"அதைப் பார்த்ததே இல்லை." என்றேன்."நான் இரண்டு,மூன்று தடவை ஏறி,இறங்கினேன்."என்றான் அங்கு சென்று வந்த மாணவன். மதிய இடைவேளையில் சக மாணவர்களிடம் கதையளந்து கொண்டிருந்தான்.
                            ஓரிரு நாட்கள் சென்றது.கல்லூரியில் இருந்து வந்த 
மகள்,"அம்மா,அந்தப் புதிய ஜவுளிக் கடைக்கு போகலாமா? காலேஜ் முழுவதும் அதைப் பற்றித்தான் பேச்சு.விலையும் குறைவாகத் தான் உள்ளதாம்".என்றாள்."சரி,போகலாம்."என்றேன். ஒரு நாள் மாலையில் அங்கு சென்றோம்.மாடிகளுக்கும் சென்றோம்.ஒரு தளத்தில் ஏற, இறங்க எஸ்கலேட்டர் மட்டுமே இருந்தது.ஏற பயமாக இருந்தது. மாட்டேன் என்று மறுத்து விட்டேன். பிறகு அங்கு போகவேயில்லை. 
                    நாட்கள் ஓடின.மதுரை ரயில் நிலையத்திலும் எஸ்கலேட்டர்
வந்து விட்டது.படிகளும் இருக்கிறது. கையில் கனத்த பைகளுடன் சென்ற போது கணவர் எஸ்கலேட்டரில் ஏற நான் படிக்கட்டில் ஏறிச் சென்றேன். தஸ்புஸ் என்று மூச்சு வாங்க மேலே வந்து நின்றேன்.என் கூட வந்திருக்கலாமே என்று கணவர்  கூற படிக்கட்டுகளில் ஏறுவது நல்ல உடற்பயிற்சி என்று சமாளித்தேன். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான்.
சென்னையில் ஷாப்பிங் செல்லும் போதும் எஸ்கலேட்டரில் ஏறவே இல்லை.
                     அடுத்த சோதனை வந்தது. பள்ளியில் இருந்து ஆசிரிய, ஆசிரியைகள் மும்பைக்கு சுற்றுலா சென்றோம்.விமானத்தில் அங்கு இறங்கி தரைத் தளத்திற்கு செல்ல எஸ்கலேட்டர் மட்டுமே இருந்தது. படிக்கட்டைத் தேடினேன். கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தால் தானே கண்டு பிடிக்கலாம்.இள வயதுத் தோழிகள்  "இரண்டு கைகளையும்  பிடித்து உங்களை பத்திரமாகக் கூட்டிக் கொண்டு போகிறோம்""வாங்க,வாங்க."என்று 
அழைக்க," இல்லை.நான் வரவில்லை."என்றேன். ஆபாத்பாந்தவா, அனாதரக்ஷ்கா என மனதிற்குள் புலம்பினேன்.அப்போது ஒரு குரல் வந்தது.எங்கள் குழுவில் பெரியவரான கரஸ்பான்டன்ட் அம்மா "லிஃப்ட் இருக்கிறதா? பாருங்கள்." என்றார்கள்.வேகமாக அவர்கள் அருகே சென்று "நான் அம்மாவிற்குத் துணைக்குப் போகிறேன்".என்று கையைப் பிடித்துக் கொண்டேன். பின்னர் சென்ற இடமெல்லாம் அவர்களுடன் ஒட்டிக் கொண்டேன். யாருக்கு யார் துணை?உங்களுக்கே புரியும். வெற்றிகரமாக எஸ்கலேட்டரைத் தவிர்த்து மும்பை சென்று திரும்பி விட்டேன்.
                        ஆண்டுகள் சில கடந்தன.
வெளிநாட்டுப் பயணம் செய்ய மனம் ஆசைப்பட்டது.பாஸ்போர்ட்,விசா எல்லாம் ரெடி. ஃபிளைட் டிக்கெட்டும்
எடுத்தாயிற்று.மகன், "அம்மா! இன்டர்
நேஷனல் ஏர்போர்ட் எல்லாவற்றிலும்
எஸ்கலேட்டர் தான் இருக்கும்.லிஃப்ட்
எங்கோ ஓர் ஓரத்தில் இருக்கும். அதைத் தேட முடியாது. எஸ்கலேட்டரில்   ஏறிப் பழகுங்கள்". என்று கூறினான்.இதென்ன வம்பாய் போயிற்று என எண்ணினேன்.
                   ட்ரையினிங் ஆரம்பித்தது. மகள் குடும்பம், மகன் குடும்பம் என
யார் ஷாப்பிங் போனாலும் என்னைக் கூட்டிக் கொண்டு போனார்கள். ஆளுக்கொரு அறிவுரை.மஞ்சள் கோட்டில் கால் வைக்காதே.வலது கையால் கைப்பிடியைப் பிடித்துக் கொள்.முதலில் ஒரு காலை வை. ஆனாலும் பயம் போகவில்லை. கடைசியில் வலுக்கட்டாயமாக ஏற்றி 
விட்டார்கள்.பயந்து பயந்து ஏற ஆரம்பித்தேன்.ஒரு நாள் மருமகள் என்னிடம்,"அத்தை, இன்று நாம் இருவர் மட்டும் ஷாப்பிங் போகிறோம்.கிளம்புங்கள்."என்றாள்.பின் தொடர்ந்தேன்.பயணத்திற்குத்
தேவையான சில பொருள்களை வாங்க வேண்டியிருந்தது.முதலில் ஓரிரு தளங்களுக்குச் செல்ல எஸ்கலேட்டரில் கையைப்  பிடித்துக் கொண்டாள்.பிறகு குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து ஏமாற்றுவதைப்
போல ஃபாரின் போக வேண்டும் என்று சொல்லிச் சொல்லி ஏற வைத்து விட்டாள். பின்பு அவளது கையைப் பிடிக்காமல் ஏறத்  தயார் ஆனேன்.மஞ்சள் கோடு போகட்டும் எனக் காத்திருந்து பின் காலை வைக்கும் நேரத்தில் அடுத்த
மஞ்சள் கோடு வந்து பயமுறுத்தியது. ஒரு வழியாக ஏறி விட்டேன்.2,3 முறை
ஏறி, இறங்கி விட்டேன். ஏதோ நிலாவில் கால் வைத்ததைப் போல சந்தோஷமாய்  இருந்தது. வீட்டுக்கு  
வந்ததும் முரசு அறையாத குறையாக
எல்லோருக்கும் தெரிவித்து விட்டேன்.
நேரிலும், ஃபோனிலும் ஒரே செய்திதான்.
"நான் எஸ்கலேட்டரில் ஏறி விட்டேன்."

Monday, December 16, 2019

கங்காரு தேசம் 1

சென்னை
   
                          
  எங்களது ஆஸ்திரேலிய பயணக் கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.22.11.2019, வெள்ளிக்கிழமை அன்று இரவு 8மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டோம். மகன் மற்றும் மகள் தங்கள் குடும்பத்தோடு வழியனுப்ப  வந்திருந்தனர்.அவர்களிடம் விடை பெற்று உள்ளே சென்றோம்.மகன் நாங்கள் உள்ளே சென்றவுடன்
செய்ய வேண்டியவற்றை நன்கு கற்றுக் கொடுத்திருந்தான்.
               நுழைவு வாயிலில் பாஸ்போர்ட், டிக்கெட் இரண்டையும்
காட்டி உள்ளே சென்றோம்.அடுத்து எங்களது லக்கேஜ் சோதனை செய்யப்பட்டது.பின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கவுண்டருக்குச் சென்றோம். பாஸ்போர்ட்,விசா, டிக்கெட் ஆகியவற்றைப் பார்த்து விட்டு முகத்தை காமிராவில் பதிவு செய்த பின் போர்டிங் பாஸ் தந்தார்கள்.எங்களுடைய இரு  செக் இன் பேக் எடுத்துச் செல்லப்பட்டது. இனி பிரிஸ்பேனில் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.அடுத்த கட்டமாக இம்மிகிரேஷன் நடந்தது. பாஸ்போர்ட் , டிக்கெட் இரண்டையும்  காட்டினோம்.ஸீல் வைத்த  பின் உள்ளே சென்றோம்.செக்யூரிட் செக் செய்ய நீண்ட வரிசையில் நின்றோம்.பெண்களுக்குத் தனி கவுண்டர் . எனவே  எங்கு மீண்டும்  
சந்திக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டோம்.கொடுக்கப்பட்ட ட்ரேயில் செல்ஃபோன், சார்ஜர் மற்றும் சாவிகளை  வைத்தோம். ஹேன்ட் பேக்,செக் இன் பேக் ஆகியவை தனியே ஸ்கேன் செய்யப்பட்டன. பெண் அதிகாரி பெண்களை சோதனை செய்தார். பின்  இருவரும் விமானம் ஏற வேண்டிய பகுதியில் வந்து அமர்ந்தோம்.சென்னை சர்வதேச விமான நிலையம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி,சுகாதாரமான ஓய்வறைகள் இருந்தன.ஆங்காங்கே கடைகள் இருந்தன.சிற்றுண்டி ஸ்டால் ஒன்றும் இருந்தது.அங்கு ஒரு வெளிநாட்டுத் தம்பதி காஃபி வாங்கி அருந்திக் கொண்டிருந்தினர்.கை நழுவி காஃபி தரையில் சிந்தி விட்டது. உடனே டிஸ்யூ பேப்பரை எடுத்து அந்தப் பெண்மணி சிறிதும் தயங்காமல் குனிந்து அதைச் சுத்தம் செய்தார். மனதிற்குள் அவரைப் பாராட்டினேன். ஒரு விமான நிலையப் பணியாளர் வந்து விமானம் ஏற வேண்டிய இடம் மாற்றப்பட்டு உள்ளதாகக்  கூறிச் சென்றார். எனவே அங்கே சென்றோம். ஒலிபெருக்கியிலும் அதை அறிவித்தார்கள்.சிறிது நேரம் 
காத்திருந்தோம்.  சிங்கப்பூர் செல்லும் விமானம் வந்து விட்டது.
              விமானத்திற்குள் செல்லும் வழியில் இயர் ஃபோன், நியூஸ் பேப்பர் வழங்கப்பட்டன. இயர் ஃபோனை மட்டும் பெற்றுக் கொண்டோம். பணிப்பெண்கள் சிரித்த முகத்துடன் வரவேற்றனர். இரவு 11.15க்கு குட் ஈவினிங் என்றதும் எனக்கு குட் நைட் என சொல்லத் தோன்றியது‌.உரிய நேரத்தில் விமானம் கிளம்பியது. எனக்கு ஜன்னல் ஓரம் இருக்கை  கிடைத்தது.விமானத்தில் இருந்து பார்க்கும் போது நம் சிங்காரச் சென்னை ஒளி விளக்குகளால் ஜொலித்துக் கொண்டு இருந்தது. குட் பை சென்னை என மனத்திற்கும் நினைத்துக் கொண்டேன்.
                                           தொடரும்

Sunday, December 15, 2019

கங்காரு தேசம் 17

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்
கிறிஸ்துமஸ் டிசம்பர் 25அன்று தான் கொண்டாடப்படுகிறது. என்றாலும் இப்போதே விழா களை கட்டி விட்டது. பிரிஸ்பேன் நகர நிர்வாகம் ஒரு போட்டியை நடத்துகிறது.சிறப்பான முறையில் நிறைய விளக்குகளால் 
அலங்கரிக்கப்பட்ட வீடுகளுக்குப் பரிசுகள்  வழங்கப்படுகின்றன.
போட்டியில் கலந்து கொள்பவர்கள் இன்டர்நெட்டில்  தங்களது முகவரியைத் தெரிவிக்கிறார்கள். எங்களது பகுதியில் உள்ள இரு முகவரிகளை தெரிந்து கொண்டு அங்கு சென்றோம்.அவர்களின் அனுமதியைப் பெற்று படங்கள் எடுத்தோம்.
பள்ளி, கல்லூரிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை  ஆரம்பித்து விட்டது. ஷாப்பிங் சென்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.கார்களை நிறுத்த இடம் கிடைப்பது கடினமாக உள்ளது.எனவே இனிமேல் கிறிஸ்துமஸ் விழாவிற்குப் பின்னரே ஷாப்பிங் செல்ல வேண்டும்.
                  பிரிஸ்பேன் நகரத்தின் மையப்பகுதியில் Queen Street mall உள்ளது.அங்கு Christmas parade இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கி விட்டது.அதைப் பார்க்க முடிவு செய்தோம். City council எனப்படும் மாநகராட்சி அலுவலகம் விளக்குகளால்  அலங்கரிக்கப்படும். மாலை 7.30க்கு அக்காட்சியைக் காணலாம். மாலை 5 மணிக்கே நாங்கள் இருவர், தங்கை, மைத்துனர் மற்றும் மகள்கள் இருவர் என அனைவரும் கிளம்பினோம். ஒரே 
பேருந்தில் செல்லலாம். நாங்கள் இன்னும்  மின்சார ரயிலில் பயணம் செல்லவில்லை.எனவே பாதி தூரம் பேருந்திலும்,பாதி தூரம் ரயிலிலும் 
பயணம் செய்தோம்.எதில் பயணம் செய்தாலும் go card தான் பயன்படுகிறது.ரயில்வே நிலையத்திற்குள் செல்லும் போதே அதை ஸ்கேனரில் காட்ட வேண்டும். இறங்கி வெளியே வரும்போதும் அதைக் காட்டினால் தான் ரயில்  நிலையத்தின் வெளியே வர கதவு திறக்கும். இன்னும் எவ்வளவு டாலர் மீதம் உள்ளது என்பதையும் ஸ்கேனரில் அறிந்து கொள்ளலாம்.
ஆறு மணிக்கு  சிட்டி கவுன்சில் பகுதிக்கு வந்து விட்டோம்.மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றும்,அமர்ந்து கொண்டும்  இருந்தனர்.


Queen Street mallஐச் சுற்றிப் பார்த்தோம்.அலங்காரம் செய்யப்பட்ட இடங்களைக் கண்டு களித்தோம்.
j
6.30க்கு கிறிஸ்துமஸ் ஊர்வலம் வரும் சாலையில் ஒரு இடத்தில் நின்று கொண்டோம்.சரியாக 7 மணிக்கு ஊர்வலம்  தொடங்கியது.
அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள், ஆடல்,பாடலுடன் உலா வந்தன.


ஒரு வண்டியில் மேரிமாதா, யோசேப்  போல வேடமணிந்த இருவர் குழந்தையுடன் வந்தனர்.குழந்தை இயேசுவைப் பார்க்க Melchior, Caspar,
Balthazar என்ற மூன்று அரசர்கள் ஒட்டகங்களில் பயணித்து வந்தனராம்.அதை நினைவுறுத்த மூன்று  ஒட்டக பொம்மைகளை அலங்கரித்து சுமந்து வந்தனர்.கிறிஸ்மஸ் தாத்தா ஒரு வண்டியில் வந்து வாழ்த்து தெரிவித்தார். சுமார்  பதினைந்து  நிமிடங்கள் ஊர்வலம் நடந்தது.  கூட்டம் சிறிது குறைந்ததும் சிட்டி கவுன்சிலை நோக்கி நடந்தோம்.
                ஒளிவிளக்குகளால் அழகுபடுத்தி இருப்பார்கள் என நினைத்தேன்.ஆனால் அங்கு ஒரு கார்ட்டூன் ஷோவே நடந்து கொண்டிருந்தது.
 ஒரு ஷோ பதினைந்து நிமிடங்கள் நடக்கிறது.பின்பு மீண்டும் மீண்டும்
ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சற்றுநேரம் நின்று ரசித்து விட்டு கிளம்பினோம்.அடிலெய்டு வீதியில் Ginger Garlic Indian Cuisine என்ற உணவகம் உள்ளது.அங்கு சென்று  சாதம்,நாண்,குருமா ஆகியவற்றை வயிறார உண்டோம்.நன்றி கூறிவிட்டு வெளியே வந்தோம். பெயர்ப்பலகையில் 10 மணிக்கு மேல் ஏழைகளுக்கு உணவு இலவசம் என்று எழுதப்பட்டு இருந்தது.உணவக உரிமையாளருக்கு மனதார நன்றி கூறினோம்.
                                              தொடரும்.



Saturday, December 14, 2019

கங்காரு தேசம் 16

THE SIR THOMAS  BRISBANE PLANETARIUM
கோளரங்கின் வெளியே மக்களை  வரவேற்க பல மொழிகளிலும் வாசகங்கள்இருந்தன.இந்தியில் ஸ்வாகதம் என எழுதப்பட்டிருந்தது. வானை நோக்கிப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் ஒரு  வானியல் அறிஞரின் சிலை இருந்தது.
அவர் ஒரு மறைந்த  ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர். அவரது பெயர் Konstantin Tsiolkovsky. Father of astronautics and human space flight என்று அறிந்து கொண்டோம்.10 வயதில் காது கேட்கும் திறனை இழந்தவர் என்பதை அறிந்த போது வியப்பு ஏற்பட்டது.மதியம் இரண்டு மணிக்கு கோளரங்கத்திற்குள் நுழைந்தோம்.
நிலவில் கால் பதித்த விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங்கின் சீருடை எங்களை வரவேற்றது.
அதன் அருகில் அமெரிக்காவின் அப்பல்லோ 11 ராக்கெட்டின் மாதிரி வடிவம் வைக்கப் பட்டிருந்தது.
இதுவரை உலகில் இருந்து சீறிப் பாய்ந்த ராக்கெட்டுகள்  மற்றும் செயற்கைக்கோள்களின் மாதிரிகள் இருந்தன.

.நம் சூரியக் குடும்பத்தில்  உள்ள எல்லாக் கோள்களின் படங்களும் அவற்றைப் பற்றிய செய்திகளும் இருந்தன.படங்கள் யாவும் ஹப்பிள் என்ற வானியல் தொலைநோக்கியில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.
                        சனி கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட saturn 5 ராக்கெட்டின்
மாதிரி  இருந்தது.வானில் இருந்து விழுந்த சிறு விண்கற்கள் இரண்டு
வைக்கப்பட்டு இருந்தன.பெரிய வானியல் தொலைநோக்கி இருந்தது.மினி தியேட்டர் ஒன்று இருந்தது.அதில் space telescope ஆல் பதிவு  செய்யப்பட்ட ஃபோட்டோக்களும்,வீடியோக்களும்திரையில் காட்டப்பட்டன.
அவைகளுக்கு விளக்கமும் தரப்பட்டது.
COSMIC SKY DOME
வட்ட வடிவ அரங்கில் ,அரைக்கோள வடிவில் கூரை அமைக்கப்பட்டுள்ளது. கோளத்தின் விட்டம் 12.5மீட்டர்.  130 பேர் அமரலாம்.The time traveller என்ற நிகழ்ச்சியைக் கண்டோம். நாம் ராக்கெட்டில் அமர்ந்து விண்வெளிக்குச் செல்லும் உணர்வு ஏற்பட்டது.முற்காலத்தில் வாழ்ந்த டயானசர்களைக் காட்டினார்கள்.பறக்கும் டயானசர்களைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.நாளடைவில் அந்த இனம் மறைந்தது.  நிழலை வைத்து நேரத்தைக் கணக்கிட்டதைப் பற்றிக் காட்டினார்கள். 
                        Big bang என்ற பெருவெடிப்பால் சூரியனும்,அதைச்சுற்றி வரும் கோள்களும் உருவாகிய விதம் பற்றிக் கூறினார்கள். பிரபஞ்சத்தில் உள்ள Milky Way, Andromeda, spiral galaxy,dwarf galaxy போன்ற பல சூரிய மண்டலங்களைப் பற்றி அறிந்தோம்.  ஓரியன்,உர்சா மேஜர்,உர்சா மைனர் போன்ற நட்சத்திரக் கூட்டங்களின் பெயர்களையும், அவற்றின் அமைப்பையும் அறிந்தோம். அன்றைய இரவில் வானம் இருக்கும் விதம், காணக்கூடிய நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்தோம்   அரை மணி நேரம் விண்வெளியில் 
இருந்த உணர்வு  ஏற்பட்டது.இந்த அரங்கில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். பிற  இடங்களில் கட்டணம் கிடையாது.   
  Sundial court yard
இந்த அமைப்பின் மூலம் நிழலைக் கொண்டு நேரத்தை அறியலாம்.4 மணி வரை தான் கோளரங்கம் திறந்து இருக்கும் என்பதால் முழுமையாகக்  காண முடியவில்லை.
               தொடரும்.

Friday, December 13, 2019

கங்காரு தேசம் 15

BOTANICAL GARDEN,MT.COOT THA
கூத்தா மலையடிவாரத்தில் பசுமையான உயிரியல் பூங்கா உள்ளது.56 ஹெக்டேர் பரப்பளவில், இரண்டு லட்சம் மரம்,செடி, கொடிகள் இங்கு  வளர்க்கப் படுகின்றன.1970ல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1976ல் 
திறந்து வைக்கப்பட்டது.
   
        
        நாங்கள் காலை 11 மணிக்கு  உயிரியல் பூங்காவை அடைந்தோம்.அங்கு எங்களை வழிநடத்திச் செல்ல ஒரு பெண்மணி வந்தார்.கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய  நாடுகளில் இருந்து சுற்றுலா வந்தவர்கள்,இந்தியாவில் இருந்து வந்த நாங்கள் ,ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற என் தங்கையின் குடும்பம் என்று 8 பேர் கொண்ட குழு தனியாகப் பிரிக்கப்பட்டது. நான்கு நாட்டவர்கள் இருப்பதை அறிந்த 
வழிகாட்டிப் பெண் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார்.முதலில்
எங்களை நறுமணம் வீசும் செடிகள்  நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார்.அவற்றின் இலைகளைக் கிள்ளி எங்களை முகர்ந்து பார்க்கச்
சொன்னார்.பூண்டு மற்றும் நார்த்தை இவற்றின் மணத்தை என்னால் உணர முடிந்தது.lavender,lemon myrtle, Plumeria போன்றவற்றைக் கண்டோம்.
           பாலைவனத் தாவரங்களும் இருந்தன.Aloevera, cactus ஆகியவை இருந்தன. பெரிய கற்றாழைச் செடிகள் வளர்க்கப் பட்டிருந்தன.
கள்ளிச் செடிகளும் இருந்தன.Tropical dome அமைக்கப் பட்டுள்ளது. 
அதில் பல வகையான தாவரங்கள் இருந்தன.

அதில் நாங்கள் கண்ட சிலவற்றின் 
படங்களைப் பதிவு இடுகிறேன்.

வாழை மரம் போல் இருந்த மரங்ளும்,அதன் பூக்களும்  என்னைக் கவர்ந்தது.  தாவரவியல் படிக்கவில்லையே எனத் தோன்றியது.அடுத்தது Fern house சென்றோம். பெரணி என்றால் ஒரு வகை மட்டுமே எனக்குத் தெரியும். நிறைய வகைப் பெரணிகளை அங்கு கண்டோம். 
   
Japanese garden என்ற பிரிவையும் பார்த்தோம்.
Kitchen garden பிரிவில் கத்திரிக்காய், வெண்டைக் காய்,சுரைக்காய்,பல நிறங்களில் சிறிய மிளகாய் என பல வகைச் செடிகள் இருந்தன. கத்திரிக்காய்  செடி  மரம் போல இருந்தது.
அருகில் சமையல்  செய்ய மைக்ரோ வேவ் அடுப்பு உள்ளது.பள்ளிக் குழந்தைகள் வந்தால் காய்களைப் பறித்து,சமைத்துக்  காட்டுவார்கள் எனக்கூறினார்கள்.ஆலிவ்செடியைஇங்கு தான் பார்த்தேன்.


முற்காலத்தில் எழுதப் பயன்படுத்தப்பட்ட மரப்பட்டைகள் கொண்ட மரத்தை எங்களுக்குக் காட்டினார்.பட்டையை உரித்து அதைத்    தொட்டுப்  பார்க்கச் செய்தார்.  பேப்பரைத் தொட்டது போல இருந்தது.மரத்தின் பெயர் Paper bark tea tree என்று கூறினார்.
நம் நாட்டு அரச மரமும் ஓரிடத்தில் இருந்தது.   குல்மோகர் மரங்களில்  பூக்கள்  நிரம்பி வழிந்தன.செயற்கை நீரோடை குறுக்கும் நெடுக்குமாய்  ஓடிக் கொண்டிருந்தது.குளத்தில் அல்லிப் பூக்கள் மலர்ந்திருந்தன.
ஓரிடத்தில் இலையே இல்லாமல் பூ மட்டும் பூத்திருந்தது.

குழந்தைகளை மகிழ்விக்க ஆங்காங்கே விலங்குகளின் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.
பூங்காவிற்குள் திருமணம் நடத்த புல்வெளிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.அங்கு திருமணங்கள் நடைபெறுமாம்.ஓரிடத்தில் இசை எழுப்பும் கருவி வைக்கப் பட்டிருந்தது.

மரப்பொந்தில் தேன்கூட்டையும்,கொடுக்குகள்  இல்லாத தேனீக்களையும் கண்டோம். பழங்குடிமக்களான அபார்ஜின்களின் மொழியில் கூத் என்றால் தேன். அதிக அளவில் தேன் எடுக்கப் பட்டதால் இந்த இடம் கூத்தா எனப்பெயர்  பெற்றதாம். இறைவனின் படைப்பில் எத்தனை
அதிசயங்கள் உள்ளன என வியப்பு 
ஏற்பட்டது. 
இயேசு கிறிஸ்து சிலுவையில்அறையப்பட்ட போது மேலே இடம் பெற்றுள்ள செடியால் தான் கிரீடம் வைத்ததாகச் சொன்னார்கள்.உயிரியல் பூங்காவில் நாங்கள்  கண்ட தாவரங்களைப் பற்றி ஓரளவுதான் எழுதியுள்ளேன்.பல தகவல்களைத் தந்த எங்களது வழிகாட்டிப் பெண்மணிக்கு நன்றி கூறி  வெளியே வந்தோம்.
                        தொடரும்.