Tuesday, June 8, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர்_8

மகாலெட்சுமி ஆலயத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம்.இந்தக் கோவில் கட்டப்பட்டபின் தான் மும்பை ஒரு பெரிய தொழில் நகரமாக மாறியதாம்.குறுகலான தெருவின் இருபுறமும் பூக்கடைகள் இருந்தன.மலர் மாலைகளுடன் 
நிறைய தாமரைப் பூக்கள் இருந்தன. தேங்காய்கள் மற்றும் பூஜைப் பொருட்கள்  அனைத்தும் விற்கப்பட்டன.உயரமான இடத்தில் கோவில் இருந்தால்  பல படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்ல வேண்டியிருந்தது.அன்னையின் சன்னதியில் மகாகாளி, மகாலெட்சுமி, மகாசரஸ்வதி என்று மூன்று தேவியரும் வீற்றிருந்தனர். அன்னை மகாலெட்சுமி நடுவில் காணப்பட்டார்.தேவியர்களை வணங்கி விட்டு பின்னால் இருந்த குளத்திற்குச் சென்றோம்.அதன் பெயர் மணிகர்ணிகா  என்று கூறினார்கள்.தரிசனம் முடிந்து வெளியே வந்தோம்.பல வண்ணக் குங்குமங்கள், காப்புக் கயிறுகள், அம்மனின் திருவுருவப் படங்கள், பொம்மைகள் என எங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கினோம். எங்களது ஆசிரியை ஒருவரின்  அண்ணியார்  மும்பையில்  வசித்து வந்தார்.அவர் எங்களுக்காக தன்னுடைய  வீட்டில் இருந்து வடைகள் செய்து கொண்டு வந்திருந்தார்.  மகிழ்ச்சியுடன் அவற்றைச் சாப்பிட்டோம்.ஆசிரியர் ஒருவர் வாழைப்பழங்கள் வாங்கி வந்தார். அவைகளையும்  உண்டு தண்ணீர் குடிக்க வயிறு நிரம்பி விட்டது.ஹோட்டலுக்கு போகும் எண்ணமே போய்விட்டது. அங்கு அமர்ந்து சாப்பிடும் நேரத்தில் மும்பையைச் சுற்றிப் பார்க்கலாம் என ஏகமனதாக நினைத்தோம். தலைமை ஆசிரியை ,"இப்போது  சாப்பிடவில்லை எனில் இரவு உணவுதான் கிடைக்கும்." என்றார்."பரவாயில்லை அம்மா! இரவே சாப்பிட்டுக் கொள்கிறோம்." என்று அனைவரும்  கூறிவிட்டோம்.                      கேட் வே ஆஃப் இந்தியாவை நோக்கி பேருந்தில் பயணித்தோம். சினிமாக்களில் மட்டுமே பார்த்த அக்கட்டிடத்தை நேரில் கண்டோம். மிகப் பிரபலமான தாஜ் ஹோட்டல் அதனை அடுத்து அமைந்திருந்தது.
இரண்டுக்கும் இடையே இருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான புறாக்கள் இருந்தன.சிலர் தங்கள் கைகளில் தானியங்களை வைத்து நீட்ட பயமின்றி புறாக்கள் கைகளில் அமர்ந்து உண்டன.அடுத்து காணப்போவது காஜி அலி தர்ஹா இது கடற்கரையில் இருந்து 500மீட்டர் தொலைவில் உள்ள மணல்திட்டில் கட்டப்பட்டுள்ளது.நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது .கடல் அலைகள் தீவிரமாகும்போது தர்ஹாவை கடல்நீர் சூழ்ந்து விடும்.பேருந்தில் இருந்தபடியே தர்ஹாவைப் பார்த்தோம்.இரவு 10 மணிக்கு விமானம்  ஏறவேண்டும். எனவே விமான நிலையத்தை  நோக்கி பயணமானோம்.                                   தொடரும்.

Saturday, June 5, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர்_3

சென்னை விமான நிலையத்தின் அழகை ரசித்துக் கொண்டே உள்ளே நுழைந்தோம்.நள்ளிரவு 2 மணி ஆகி விட்டது. 3.30 மணிக்கு மும்பை விமானம் ஏற வேண்டும். தலைமை ஆசிரியை  மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவர் அவர்களும் வழிகாட்ட  ஜெட் ஏர்வேஸ் கவுண்டருக்குச் சென்று போர்டிங் பாஸ் பெற்றுக் கொண்டோம். லக்கேஜ்களை  ஒப்படைத்தோம்.காத்திருப்போர் அமர இருக்கைகள் அழகாகப் போடப்பட்டிருந்தன.அதில் அமர்ந்து கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தோம். சற்று நேரத்தில்  விமானத்தில் ஏறும்படி ஒலிபரப்பு வந்தது. சினிமாவில் பார்ப்பது போல படிக்கட்டுகளில் ஏறி விமானத்திற்குள் செல்லப் போகிறோம் என நினைத்தேன். ஆனால் குகை போல் தோற்றமளித்த பாதை அமைக்கப்பட்டு இருந்தது.அதன் வழியாக 
விமானத்திற்குள்  சென்று அவரவர் இருக்கைகளில் அமர்ந்தோம். முதல் விமானப் பயணம் என்பதால்  படப்படப்பாக இருந்தது. வயிற்றுக்குள் பூச்சி பறந்தது. இனி எத்தனை முறை விமானப் பயணம் செய்தாலும் முதல் அனுபவம் மறக்காது.எல்லாக் கடவுள்களையும் நினைத்துக் கொண்டேன். விமானம்     ஓடுபாதையில் தடதட என ஓடத் தொடங்கியது.சில நிமிடங்களில் சர் என்று மேலே ஏறியது. பின்னர் சீராகப் பறக்கத் தொடங்கியது.கீழே சென்னை மாநகரம் மின்விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டு இருந்தது.சில நிமிடங்களில் கருமையாக மாற்றிவிட்டது.கடலின் மேல் பறக்கிறோம் என்பது புரிந்தது.. சென்னைக்கும் மும்பைக்கும் இடையே நிலப்பரப்பு தானே உள்ளது.ஏன் கடலுக்கு மேலே பறக்கிறது? என நினைத்துக் கொண்டேன்.விமானத்தின் பணிப்பெண் வந்து வணங்கி விட்டு பேச ஆரம்பித்தாள்.விமானம் கடலில் விழ நேர்ந்தால் தலைக்கு மேலே இருக்கும்  லைஃப் ஜாக்கெட்டை எப்படி எடுப்பது என்பதையும் பயன்படுத்த வேண்டிய முறையையும் செய்து காட்டி விளக்கினாள். வயிற்றில் புளியைக் கரைத்து    ஊற்றியது  போல இருந்தது.இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின் மும்பைக்கு அருகில் வந்து விட்டதாக விமானி அறிவித்தார்.பொழுது புலர்ந்து விட்டது.கீழே அரபிக்கடல் காட்சி தந்தது.இந்திய வரைபடத்தில் மும்பையைக் குறிக்கச் சொல்லிக் கொடுக்கும் பொழுது "அரபிக்கடல் ஓரம் ஒரு அழகைக் கண்டேனே." எனப் பாடலைப் பாடி மாணவர்களின் கவனத்தை ஈர்த்து மும்பையின் அமைவிடத்தைக் கற்றுத் தருவோம்.இப்போது அரபிக் கடலையும் மும்பையையும் வானில் இருந்து காண்கிறோம்.மிக மகிழ்ந்தோம்.  விமானம் தரை இறங்கப் போவதாக விமானி அறிவித்தார். மனம் படபடவென அடித்தது.சிறிது சிறிதாக கீழே இறங்கி சக்கரங்கள் தடால் என்று தரையைத் தொட்டன.ஓடுபாதையில் ஓடி சில நிமிடங்களில் நின்றது. அப்பாடி! பத்திரமாக  தரையில் இறங்கி விட்டோம்.கடவுளுக்கு நன்றி கூறி மும்பையில் கால்  பதித்தோம்.                                   தொடரும்.
.

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் . தொடர் 2

சாய் பாபாவின் திருவருளால் முன்னேற்பாடுகள் மடமடவென நடந்தன.தலைமை ஆசிரியையும், அவரது வாழ்க்கைத் துணைவரும் சேர்ந்து பயணத்திற்கு பேருந்துகளை  ஏற்பாடு செய்தனர். 
விமான டிக்கெட் முன்பதிவு செய்யப் பட்டது.என்னைப் போன்று சிலர் வானில் தான் விமானத்தைப் பார்த்திருக்கிறோம். பக்கத்தில் கூடப் பார்த்ததில்லை.எனவே ஆர்வத்துடன் காத்திருந்தோம்.அன்று முதல், பயணத்தைப் பற்றி மாலைப் பொழுதில் பேசிக்கொண்டே இருந்தோம். தலைமை ஆசிரியை சிங்கப்பூருக்கு  பல முறைகளும், அமெரிக்காவிற்கு  ஒரு முறை தனியாகவும் சென்று வந்தவர். "அம்மா !விமானம் ரன்வேயில் ஓடி சர் என்று மேலே ஏறும் போது எப்படி    இருக்கும் ?"என நான் கேட்டேன் "நாம் ஊஞ்சலில்  ஆடி உயரே செல்லும் போது ஏற்படும் அதே உணர்வு தான் இருக்கும்." என்றார்  தலைமை ஆசிரியை. "ஏதோ ஜெட் லேக் என்று சொல்வார்களே. அது ஏற்படுமா? என்று ஒரு ஆசிரியை கேட்டார்.  "உள்நாட்டுப்பயணம் செல்லும்போது அதெல்லாம் ஏற்படாது. ஆனால் அவ்வப்போது காது அடைக்கும். அப்போது வாயைத் திறந்து மூடினால் சரியாகி விடும்" என்றார். "உங்களது லக்கேஜ்  பேக்குகள் பளிச் எனத் தெரியும்படி கலர் ரிப்பனைக் கட்டுங்கள். ஸ்டிக்கரும் ஒட்டுங்கள். கன்வேயர் பெல்டில்  இருந்து அப்போதுதான் டக்கென்று  எடுக்க முடியும்." என்றும் கைப்பைகளில் எவற்றை வைத்துக் கொள்ளலாம் என்பதையும்  தலைமை ஆசிரியை அறிவுறுத்தினார்.  மொத்தத்தில் விமானப் பயணம் பற்றிய அரிச்சுவடியை அறிந்து கொண்டோம்.                               எதிர்பார்த்த அந்த நாளும்  வந்தது. 2017 பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று பள்ளி முடிந்ததும் சிட்டுக்களாக வீடுகளை நோக்கிப் பறந்தோம். மூட்டை முடிச்சுகளோடு மாலை  7 மணியளவில் பள்ளியில் ஒன்று கூடினோம்.மெயின் ஹாலில் பிரார்த்தனை செய்தோம்."அன்பாக எனையும் கண் பார் அம்பிகா" என்று அன்னை மீனாட்சியைப் பாடி அவள் அருளை வேண்டினோம்.வாசலில் ஸ்லீப்பர் பேருந்து தயாராக இருந்தது.                            ஆசிரியர்களாகிய  நாங்கள் குழந்தைகள் போல் மாறிவிட்டோம். உற்சாகமாக பேருந்தில் ஏறினோம். சிறு பிரார்த்தனைக்குப் பின் சென்னையை நோக்கி பயணம் தொடங்கியது. மதுரை நகரைக் கடந்த உடன் பாடல்கள் பாட ஆரம்பித்தோம்.சில பக்திப் பாடல்களுக்குப் பிறகு திரைப்படப் பாடல்களைப் பாடத் தொடங்கினோம். அவரவர்களின் மனம் கவர்ந்த பாடல்களைப் பாடி அசத்தினர்.அடுத்ததாக ஆடலும் களை கட்டியது. பள்ளியில்  கலை நிகழ்ச்சிகளுக்காகவும், போட்டிகளுக்காகவும் மாணவ, மாணவிகளை ஆட்டுவித்த , ஆட்டிப் படைத்த ஆசிரியைகள்  ஆடத் தெரியாமல் இருப்பார்களா? ஆடத் தொடங்கினர். நான்  கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்தில் ஏறி இருந்ததால் வேடிக்கை மட்டுமே  பார்த்தேன். ஏற இறங்க சங்கடமாக இருந்தது. ஆடும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டேனே எனப்  பின்னாளில் நினைத்தேன். தில்லானா மோகனாம்பாள் பாடல்கள் முதல் புதிய  திரைப் பாடல்கள் வரை பல  பாடல்களுக்கு ஆடினர்.இரவு உணவை நாங்களே  எடுத்துச் சென்று இருந்தோம். வழியில் ஓரிடத்தில் பேருந்தை நிறுத்தி அதனை ‌உண்டோம். பயணம்  தொடர்ந்தது.யாருமே தூங்கவில்லை.  பேருந்து சென்னை விமான நிலையத்தை அடைந்தது.                       தொடரும்.

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர்_7

துவாரகாமாயி முன் பக்தர்கள்  நின்ற வரிசையில் நாங்களும் நின்றோம். இந்த  மசூதியில் தான் பாபா அறுபது ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். யாசகமாக கிடைத்த உணவுப் பொருட்களை இங்கு தான் சமைப்பாராம். சாளரம் வழியாக  மக்களை அழைத்து உணவைப் பகிர்ந்து உண்பாராம்.அவர் சாய்ந்து உட்காரப் பயன்படுத்திய வேப்பமரக் கட்டை  வைக்கப்பட்டுள்ளது. பாபாவின் திருவுருவப் படம் உள்ளது.
துனி  அதாவது உதி தயாரிக்கும் இடமும் அங்கு உள்ளது.வேப்பமரக் கட்டைகளையும் சாண வறட்டிகளையும் பயன்படுத்தி அதிகாலையில் தீ மூட்டுவார்கள்.அது பற்றி எரியும்போது நடுவில் பாபாவின் உருவம் தெரிவதாகக் கூறுகின்றனர்.அந்த துனியை அருமருந்தாக  எண்ணி பயபக்தியுடன்  பெற்றுச் செல்கின்றனர்.
அடுத்து சாவடிக்குச் சென்றோம்.அது ஊர்மக்கள் ஒன்று கூடும்  இடமாகும். மழைக்  காலத்தில்  துவாரகா மாயிக்குள் நீர் ஒழுகும்.  எனவே பக்தர்கள் அவரைக் கட்டாயப்படுத்தி இங்கு தூங்கச் செய்தார்களாம். தற்போது   ஒவ்வொரு வியாழன்றும் பாபாவின் திருவுருவத்தை இங்கு எழுந்தருளச் செய்கிறார்கள்.  சாய்பாபாவைத் தரிசிக்க மீண்டும் குடும்பத்தோடு வரவேண்டும் என அவரை மனதார வணங்கி ஹோட்டலுக்கு வந்தோம்.காலை உணவு அருமையாக இருந்தது. ஷீரடியில்  இருந்து மும்பையை நோக்கி பயணமானோம்.                                        அவரவர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். கேலியும்,கிண்டலும், சிரிப்பும்,உற்சாகமுமாகச் சென்றோம். அதிலும் நான் எஸ்கலேட்டரில் ஏற மறுத்து ஓடியதை நினைவுபடுத்தி சிரித்தனர். அதை நினைத்தால் எனக்கும் சிரிப்பு வருகிறது.நேரம் போனதே தெரியவில்லை.இடையில்  ஓரிடத்தில்  பேருந்து நின்றது.காஃபி, தேநீர்   என தேவையானதை அருந்தினோம்.பிஸ்கட், சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளை  வாங்கிக் கொண்டோம்.பயணம் தொடர்ந்தது.நேராக மும்பையில் உள்ள மகாலெட்சுமி கோவிலுக்குச் செல்ல விரும்பினோம்.  அம்மனைத்   
தரிசித்த  பின்னரே  மதிய உணவு உண்ண நினைத்தோம்.                                                             தொடரும்.

Wednesday, June 2, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர் _6

 சாய்பாபாவின் திருவுருவச் சிலைகள், காப்புக் கயிறுகள் ஆகியவற்றை வாங்க விரும்பினோம். எனவே கடையை
நோக்கி நடந்தோம். சூடாக மசாலா பால் ஒரு கடையில் வெளியே தயார் செய்து கொண்டு இருந்தார்கள். அதன் மணத்தால் கவரப்பட்டு அதை
வாங்கி அருந்தினோம்.அப்போது பாபா போல உடையணிந்த கம்பீரமான வட நாட்டு சன்யாசி வந்தார். வணக்கம் கூறி அவரிடம் பேசினோம்.தான் பிரயாகையில் இருந்து வந்துள்ளதாகக் கூறினார். தலையில் கை வைத்து ஆசி வழங்கினார். நாங்கள் பிறருக்காக் காத்திருந்தோம்.அப்போது ஒரு ஆசிரியை," கந்தம்மாள் டீச்சர்! அங்கே பாருங்கள்.இன்னோர் சன்யாசி உங்களைப் பார்த்து ஏதோ சொல்கிறார்" என்றார்.நான் அவரைப் பார்க்க அவர் தனது வயிற்றைத் தொட்டு இரு விரல்களைக் காட்டினார்.உண்மையான புகைப்படத்தில் காணப்படும் பாபாவைப் போல காட்சி அளித்தார். அதே போல  உடை. கையிலே ஒரு கமண்டலம். மற்றவர்கள்  அவரிடம் ஆசி பெறச் சென்றார்கள்.நான் திகைத்துப்போய் நின்று விட்டேன். சில ஆசிரியைகள் காணிக்கையாக பணம் தர அவர்  மறுத்து விட்டு வேகமாக நடந்து சென்றார். பேரக்குழந்தை வரம் தந்து சென்றதாகத்  தோன்றியது.பின்னர்  பாபா சிலைகள் ,காப்புக் கயிறுகள்,பாபா படம் உள்ள சிறிய நாட்காட்டி அட்டைகள் , கற்கண்டு
போன்றவைகளை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம்.
ஒரு அறையில் இருவர் தங்கினோம். AC மற்றும் குளியலறையில் ஹீட்டர் வசதிகள் இருந்தன.காலை எழுந்தவுடன் காஃபி தயாரிக்க வசதியாக சிறிய வாட்டர் ஹீட்டர் , காப்பித்தூள் , பால் பவுடர் ஆகியவை சிறிய பாக்கெட்களில் இருந்தன. தூங்கச் செல்லும் முன்பு அனைவரும் வரவேற்பு அறையில் கூடினோம். தலைமை ஆசிரியை," நாளை காலையில்  4 மணிக்கு நடை திறந்து விடுவார்கள்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ கிளம்பி விடுங்கள். மற்றவர்களுக்காக் காத்திருக்க வேண்டாம்.4,5 பேர் சேர்ந்து செல்லுங்கள்.8 மணிக்கு ஷீரடியில் இருந்து கிளம்பி விட்டால் மும்பையில் சில இடங்களைப் பார்க்கலாம்." என்றார்.அப்படியே செய்வதாகக் கூறினோம். 
                     மறுநாள் 4 மணிக்கு எழுந்து  நீராடி காஃபி குடித்து கிளம்ப 5 மணி ஆகி விட்டது. எங்களுக்கு முன்பே ஒரு குழு சென்று விட்டது.ஓட்டமும், நடையுமாக விரைந்து சென்றோம்.காலையில் நடைபெறும் காக்கட் ஆரத்தி நடந்து கொண்டிருந்தது.உள்ளே சென்றவர்கள் அமர்ந்து விட்டதால் அரை மணிநேரம் வரிசையில் நின்றோம்.எங்களுக்கு நேராக பாபா ஒரு குழந்தையின் தொட்டிலை ஆட்டுவது  போல படம் வரையப்பட்டு
இருந்தது.என் அருகில் நின்று கொண்டிருந்த ஆசிரியையும் பேரக்குழந்தைக்காக வேண்டியிருந்தார்."பாபா நம்மை அவசரப்படாதீர்கள்.பொறுமையுடன் இருங்கள்  என்று கூறுகிறார்" என்றார். ஆரத்தி முடிந்ததும் வரிசை வேகமாக நகர்ந்தது.பாபாவின் திவ்ய தரிசனம் கிடைத்தது.நன்கு ஆற அமர கண்ணார தரிசனம் செய்தோம். அடுத்து துவாரகா மாயிக்கும், சாவடிக்கும் செல்ல வேண்டும்.
         தொடரும்.

Tuesday, June 1, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர் _5

சாய் பாபாவைக் கண்டு அவரது அருளைப் பெற ஆனந்தமாகக் கிளம்பினோம்.எங்களது தலைமை ஆசிரியை," நாம் அனைவரும் இப்போது அனைவரும் சேர்ந்து செல்கிறோம்.திரும்பி வரும்போது நீங்கள் குழுக்களாகச் சென்று  உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு அறைகளுக்குத் திரும்புங்கள். வழியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.செல் ஃபோன்களை கோயிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.எனவே அவற்றை அறைகளில் வைத்து விட்டு வாருங்கள்." என்றார்.சரியென்று கூறி அவர்களுடன் கிளம்பினோம். சாய்பாபா  கோவில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் தான் இருந்தது. சாய் மகராஜ் கி ஜய்  என்ற கோஷத்துடன் மக்கள்  நடந்து கொண்டிருந்தனர். ஓம் சாய் !நமோ நமஹ! என்று  உச்சரித்துக் கொண்டு நாங்களும் நடக்க ஆரம்பித்தோம்.
          சாய்பாபா சமாதி மந்திர் என்ற அந்தக் கோயிலின் நுழைவாயில் வளைவு வடிவில் இருந்தது. அதன் வலதுபுறம் துவாரகாமாயி என்ற இடம் இருந்தது.கோயிலுக்குள் சென்று நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம். மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசன வசதி இருந்தது. எனவே அம்மா  அதில் சென்றார்கள்.நாங்கள் நீண்ட வரிசையில் நின்று சாய்பாபாவின் துதிப் பாடல்களைப் பாடிக் கொண்டே நகர்ந்தோம். "கருவறைக்குள் செல்லும் போது வரிசை இரண்டாகப் பிரியும்.நாம் சுவரை ஒட்டிய வரிசையில்  செல்ல வேண்டும் .அப்போதுதான் சாய்பாபாவின் திருவுருவை அருகில் கண்டு தரிசிக்கலாம்." என்று தலைமை ஆசிரியை கூறியிருந்தார். அவ்வாறே செய்தோம்.கூட்டம் அதிகமாக இருந்தது.  சாய்பாபாவிற்கு  அருகில் வந்து விட்டோம்.அவர் முன் நின்ற போது உலகமே மறந்து போனது. நல்ல  தெய்வீக அதிர்வலைகளை உணர முடிந்தது.பொதுவான பிரார்த்தனைக்குப் பின்னர்
"சாய்பாபா! எனது மருமகள் உங்களின் அருளால் விரைவில் தாயாக வேண்டும்.என் வாழ்க்கைத் துணைவர், மகள், மருமகன், பேரன், மகன்,மருமகள் ,அவர்களது  குழந்தை என அனைவரும் மீண்டும் தரிசனம் செய்ய வருவோம்."என்று மனதார 
வேண்டினேன். வெளியே வரும் போது சக ஆசிரியைகளிடம் என் வேண்டுதலைக் கூறினேன். வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம்.குரு ஸ்தான் என்ற இடத்தை அடைந்தோம்.அங்கே ஒரு வேப்பமரம் உள்ளது.அதன் இலைகள் கசப்புத் தன்மை அற்றதாக, இனிப்பாக உள்ளது.மரத்தைத் தொடாமல் இருக்க வேலி அமைத்து உள்ளனர். கீழே விழும் இலையைக் கூட எடுக்க முடியாது.எங்களது தாளாளர் அம்மா அமர்ந்து இருந்த இடத்தில் ஒரு இலை பறந்து வந்து விழுந்தது. அதனை குருவின் அருட்பிரசாதமாக எண்ணி பத்திரப் படுத்தி வைத்தோம். அந்த இடத்திற்கு அருகில்  துனி எனப்படும்  சாம்பல் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதனைப் பெற்றுக் கொண்டோம். வளாகத்திற்குள் நிறைய மரங்கள் இருந்தன.பாபாவால் வைக்கப்பட்ட மரம் ஒன்று இருந்தது.அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தனர். நாய்கள்  உள்ளே சுற்றிக் கொண்டு இருந்தன.அவை குரைத்து யாரையும் தொந்தரவு செய்வதில்லை. நாளை வரும்போது துவாரகா மாயி மற்றும் சாவடி ஆகியவற்றை நிதானமாகப் பார்க்கலாம் என்று எண்ணி வெளியே வந்தோம். இரவு உணவிற்கு எல்லோரும் ஒரே இடத்திற்குச்  சென்றால் பரிமாற நேரமாகும் என்பதால் பிரிந்து செல்வோம் என முடிவு செய்தோம்.எங்கே போகலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது அம்மா! அம்மா! என யாரோ அழைத்தார்கள்.திரும்பிப் பார்த்தால் 
ஒரு பெண்மணி பானை நிறைய வரகரிசி வெண்பொங்கல் வைத்து பிரசாதமாக வழங்கிக் கொண்டிருந்தார்.அவர் அருகில் இருந்த மற்ற ஒருவர் கேசரி வைத்திருந்தார்.தொன்னையில்  வெண் பொங்கலையும், கேசரியையும் வைத்து தந்தார்கள். சாய்பாபாவே அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தார் என்று மகிழ்ந்தோம்.முதலில் வந்த  பத்து, பதினைந்து பேருக்கு அந்த பிரசாதம் பெறும் பாக்கியம்  கிடைத்தது. மனமும் , வயிறும் நிரம்பியது.
                    தொடரும்.