Thursday, December 31, 2020

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 8


ஒரு நாள் இரவு நேரத்தில் வைத்திய நாதனைச் சுற்றி பத்து பேர் அமர்ந்து இருந்தனர்.கல்கத்தாவில் இருந்த போது அந்த நகரத்தைச்  சேர்ந்த வீரர்கள் மூலமாக அவன் நேதாஜியைப் பற்றி  அறிந்து வைத்திருந்தான். எனவே மற்றவர்களுக்கு அவரைப் பற்றி கூற ஆரம்பித்தான்."நேதாஜியின் அப்பாவின் பெயர் ஜானகி நாத் போஸ். அம்மாவின் பெயர் பிரபாவதி. அவர்களுக்கு 14 பிள்ளைகள். அவர்களின் ஒன்பதாவது பிள்ளை நம் நேதாஜி.பெரிய பள்ளி, கல்லூரிகளில் படித்தார். 
லண்டனுக்குப்  போய் ICS படித்து பாஸ் ஆனார். ஆனால்  ஆங்கிலேயரின் கீழ் வேலை பார்க்க மாட்டேன் என்று கூறி விட்டார். சித்தரஞ்சன் தாஸுடன்  சேர்ந்து விடுதலைப் போரில் ஈடுபட்டார்.
 
ஒரு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியின் அகிம்சை முறை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே பதவியை விட்டு விலகினார்.ஆங்கில ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்ட நேதாஜி காசநோய் வாய்ப்பட்டார். மக்களின் கோபத்தைக் குறைக்க அரசு  அவரை வீட்டுச் சிறையில் இட்டனர். ஆனால் ஆங்கிலேயரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு நேதாஜி 1941ல் ஜெர்மனிக்குப் பறந்து விட்டார். ஜெர்மன் நாட்டுப்  பத்திரிகையில் அவரது வருகையைப் பற்றி செய்தி வந்தது.அதன் பிறகுதான் ஆங்கில அரசிற்குத் தெரிந்தது.அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக நேதாஜி தெரிந்தார். இப்பொழுது ஜப்பானில் இருந்து யார் கண்ணிலும் படாமல் நீர் மூழ்கிக் கப்பலில் வந்திருக்கிறார்." என்று வைத்தியநாதன் சொல்ல கூட்டம் கை தட்டி ஆர்ப்பரித்தது. அனைவரும் சேர்ந்து ஜய் ஹிந்த் எனக் குரல் கொடுத்தனர்.
              பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் அனுப்பப்பட்ட வீரர்களில் ஒருவர்," நான் மதுரையில் நேதாஜியைப் பார்த்திருக்கிறேன்". என்றார்.அப்படியா! என்று ஆச்சரியமாகக் கேட்டனர்."ஆமாம்.  1939 செப்டம்பர் 6ஆம் தேதி  நேதாஜி தலைமையில் மதுரையில் ஃபார்வார்டு பிளாக் கட்சி  ஆங்கில அரசை எதிர்த்து மதுரையில் ஊர்வலம் நடத்தியது." என்றார். "நான் 1937ஆம் ஆண்டே ராணுவத்தில் சேர்ந்து மதுரையில் இருந்து கிளம்பி விட்டேன். எனவே எனக்குத் தெரியாது."என்றான் வைத்தியநாதன். மருதவாணன் ,"நான் ஒரு விஷயம்கேள்விப்பட்டேன். உண்மையா ? பொய்யா? தெரியாது.சொல்லட்டுமா?"என்றான்
    " ஹிட்லரைப் பார்க்க நேதாஜி போனார்.அவரை உட்கார வைத்து சற்று நேரத்தில் ஹிட்லர்  வருவார் என்றார்கள். ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். ஹிட்லர் அவரைக் கடந்து போனார்.இரண்டு, மூன்று முறை இவ்வாறு நடந்தது.அவர்கள் ஹிட்லர் போல் வேடமிட்டவர்கள். நேதாஜி கண்டு கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து ஒரு கை அவரது தோளைத் தொட்டது. "ஹிட்லர்! வந்து விட்டீர்களா?"எனக் கேட்டுக் கொண்டே நேதாஜி திரும்பினார். ஹிட்லர்  ஆச்சரியமாகப் பார்த்து "எப்படிக் கண்டு  பிடித்தீர்கள்?"எனக் கேட்டார். "என் தோளைத் தொட்டுக் கூப்பிடும் தைரியம் உங்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்காது." என்றாராம் நேதாஜி." உண்மைதான்" என்று அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். " நாளை நமக்கு நேதாஜியின் கட்டளை வந்து விடும். போய் ஓய்வு எடுப்போம்".என்று கூற ஒருவர் "நேதாஜிக்குத் திருமணம் ஆகி விட்டதா?" எனக் கேட்டார். "ஆமாம். அவரது துணைவியார் எமிலி,ஆஸ்திரியா நாட்டுப் பெண்.அவர்களுக்கு அனிதா போஸ் என்ற பெண் குழந்தையும் உள்ளது"என்று வைத்திய நாதன் கூறினான்.
  பின்பு வீரர்கள் அவரவர் இடங்களுக்குச் சென்றனர்.
                     தொடரும்.

Monday, December 28, 2020

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 7

பர்மாவில் இருந்த ஆங்கில ராணுவம்   போதிய பயிற்சி இல்லாமல் இருந்தது. நம்மை யாரும் தாக்க மாட்டார்கள் என கவனக் குறைவாக இருந்து விட்டார்கள். இந்தியாவில்  இருந்து வந்த ராணுவம் அவர்களுக்குப் பலம் அளித்தது. ஜப்பான், பர்மாவைக் கைப்பற்றினால்  அடுத்து மணிப்பூர் வழியாக இந்தியாவிற்குள் நுழையலாம் எனத் திட்டமிட்டது. எனவே ஜப்பான் படையினர்  பர்மாவைத் தாக்க ஆரம்பித்தனர். ஆங்கில இந்தியப் படைகள் அவர்களை எதிர்த்துப் போராடினர்.  1942ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை கடுமையான போர் நடந்தது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்தனர்.நம்மை வெல்ல யாராலும் வெல்ல முடியாது என்ற ஆங்கிலேயரின் நம்பிக்கை பொய்த்துப் போனது. ஜப்பானின் கை ஓங்கியது. 50,000 வீரர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அரக்கான் காடுகளில் கூடாரங்கள்  அமைத்து அவர்களைச்  சிறையில் இட்டனர். வைத்தியநாதன் நொந்து போனான். வீர மரணம் அடைந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என நினைத்துக் கொண்டான். மருதவாணனின் நிலைமை தெரியவில்லையே என வருந்தினான். ஒரு நாள் காலை குளிப்பதற்கு ஐராவதி ஆற்றுக்குச் சென்று திரும்பிய போது எதிரே வந்த வீரர்கள் கூட்டத்தில் மருதவாணன் இருந்தான்."வைத்தியா"என்றதும் அவனை நோக்கி வைத்தியநாதன் ஓடினான்."மருதா!நீ உயிரோடு இருக்கிறாயா? நான் எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன்.தெரியுமா?"என்று அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்."நானும் தான்"என்றான் மருதவாணன்‌. உடன் வந்த காவலன் பேச விடாமல் இழுத்துச் சென்று விட்டான்.
            ஓரிரு நாட்களில் இருவரும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.காட்டில் விறகு வெட்டும் பணிக்கு அனுப்பப் பட்டிருந்தனர்.பிறருக்குத் தெரியாமல் தள்ளி நின்று பேசினார்கள். "இவர்களிடம் இப்படி மாட்டிக் கொண்டோமே‌.கடவுள் நம்மை ஏன் காப்பாற்றினார்?"என்று மருதவாணன் புலம்பினான் .வைத்தியநாதன்,"மருதா! கடவுள் நம்மை ஏதோ காரணமாகத்தான்  காப்பாற்றி இருக்கிறார்."என்றான். "உன் சப்பாத்தி,சப்ஜி சாப்பிட ஒரு சர்தார்ஜி ஹவில்தார் வருவாரே. அவரும் இங்கே தான் இருக்கிறார்". என்று மருதவாணன் கூறினான். "எங்களது கூடாரத்தில்  வங்காளத்து டாக்டர் ஒருவர் இருக்கிறார். பாவம்.நல்ல மனிதர்."என்றான் வைத்திய நாதன்.பேசிவிட்டு அவரவர் குழுவிற்குச் சென்று வேலையைத் தொடர்ந்தனர். அவர்களைக் கடவுள் காப்பாற்றிய காரணம் ஓரிரு மாதங்களில் தெரிந்தது.
     பல மொழிகள் பேசும் இந்தியர்கள் தங்களுக்குள் நட்பானார்கள்.சில நாட்களுக்குப் பிறகு மோகன் சிங் என்பவர் அவர்களைச் சந்தித்துப்  பேசினார். நாம்  அனைவரும் சேர்ந்து ஆங்கில ஆகாதிபத்தியத்தை எதிர்ப்போம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொரு முகாமிற்கும் சென்று உரையாடினார். ஆங்கிலேயப் படை ராணுவ வீரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக மாறினார்கள்.இந்திய தேசிய ராணுவம் உருவானது.ஆனால் மோகன் சிங்கிற்கு போதுமான உதவி கிடைக்கவில்லை.அடுத்து ஜப்பான் நாட்டில் இருந்த ராஸ் பிகாரி போஸ் தலைமை ஏற்றார். அதுவும்  சரிப்பட்டு வரவில்லை.இதனை  நேதாஜி அறிந்து கொண்டார்.ஜெர்மனில் இருந்த அவர் நீர்மூழ்கிக் கப்பலில் 91 நாட்கள் பயணம் செய்து மலேசியா வந்து சேர்ந்தார் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்."ஒரு துளி ரத்தத்தை எனக்குத் தாருங்கள். நான் உங்களுக்கு  சுதந்திரத்தைத் தருகிறேன்"என்று வீரவுரை ஆற்றினார்.வைத்தியநாதனும், மருதவாணனும் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான வீரர்கள் அவரைத் தலைவராக ஏற்றனர். பர்மா, மலேசியா நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் அவர்களுடன் இணைந்து   கொண்டனர். தமிழகத்தில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 600 பேரை பர்மாவிற்கு அனுப்பி வைத்தார். ஜப்பானும்,ஜெர்மனியும் நேதாஜிக்கு ஆதரவு தந்தார்கள்.
              ஆஸாத் ஹிந்த் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.அதில் நேதாஜி உரையாற்றினார்.டில்லி சலோ என்ற அவரின் கட்டளையைத் தாரக மந்திரமாக வீரர்கள் ஏற்றனர்.நேதாஜி அவர்களுக்கு  சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினார். மாபெரும் வீரனின் தலைமையில் போருக்குத் தயார் ஆனார்கள்.                  
               தொடரும்.

Sunday, December 20, 2020

ஒரு இந்திய தேசிய ராணுவவீரனின் கதை 4 ,5.

 வைத்திய நாதன்  மதராஸ் பட்டினத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தான். பயணம் செய்தவர்கள்  ஒருவருக்கு ஒருவர் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். சிலர் வறுமை காரணமாகவும் சிலர் சாகசங்கள் புரிய விரும்பியும்  சேர்ந்திருந்தனர். 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக் காலத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மதராஸ் மாகாணத்தைக் கைப்பற்றி இருந்தது. அப்பொழுது ஒருவன் பேச ஆரம்பித்தான். " "இப்போது நமது முதல்வர் ராஜாஜி தானே.நாம்  அவரைப் பார்க்க வேண்டும் அல்லவா?"  வைத்தியநாதன் "காங்கிரஸ் பெயரளவில் தான் ஆண்டு கொண்டு இருக்கிறது.ஆங்கிலேயர்கள் கையில் தான் உண்மையான அதிகாரம் உள்ளது.அவரைப் பார்க்க விடமாட்டார்கள்." என்றான்."இப்போது மதராஸ் கவர்னர் யார்?" என்று ஒரு இளைஞன் கேட்டான்." எர்ஸ்கின் பிரபு" என்று வைத்தியநாதன் பதில் கூறினான்.ராணுவ ட்ரக்கில் சென்ற வீரர்களுக்கு  ஆங்காங்கே ஆங்கிலேய முகாம்களில் உணவு வழங்கப்பட்டது. இரவு நேரங்களில் கூடாரம் அமைத்துத் தங்கினர். காலையில் அருகில் உள்ள ஏரி, குளங்களில் குளித்தபின் மீண்டும் பயணம் தொடர்ந்தது. சில தினங்களில் மதராஸ் பட்டினத்திற்கு வந்து சேர்ந்தனர். "ஆங்கிலேயர் கட்டிய இந்தக் கோட்டையைப் பாருங்கள். அழகாக உள்ளது." என்று ஒருவன் கூறினான்.வீரர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கண்டு வியப்பு அடைந்தனர். கவர்னரின் அனுமதி பெற்ற பின் மதராஸ் ராணுவ வீரர்களுடன் இணைக்கப் பட்டனர். வேறு ஊர்களில் இருந்தும் புதிய வீரர்கள் வந்திருந்தனர்.அனைவருக்கும் பயிற்சி தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு கடுமையான உடற்பயிற்சியும் தொடர்ந்து ஓட்டப்பயிற்சியும் செய்தனர். சில மாதங்களுக்குப் பின் துப்பாக்கி  சுடும் பயிற்சி அளிக்கப் பட்டது.காக்கி அரைக்கால்  டிரௌசரும்,சட்டையும், தலையில் தொப்பியும்,கையில் துப்பாக்கியுமாக நின்ற வைத்திய நாதன் கம்பீரமாகக் காட்சி அளித்தான்.        
                           தொடரும்.

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை    5
  
        மறுநாள் உயரமான கட்டிடத்தில் உச்சியில் இருந்து தொங்க விடப்பட்ட கயிற்றின் மேல் சரசரவென ஏறிப் பயிற்சி செய்ய கைகளால் பற்றினான்.பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது."ஏய்!ஏறாதேப்பா.கயிறு அறுந்து விழுந்து விடும்". நிமிர்ந்து பார்த்தால் ஓரிடத்தில் கயிறு நைந்து போயிருந்தது. வைத்தியநாதன் நன்றி சொல்ல திரும்பிப் பார்த்தான். கருப்பு நிறமும்,நல்ல உயரமும், திடகாத்திரமான உருவமும் கொண்ட
ஒரு வீரன் நின்று கொண்டு இருந்தான்.நன்றி என்று கூறி அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கினான். கயிறை மாற்றி விட்டு பயிற்சியைத் தொடர்ந்தான். வைத்திய நாதனுக்கு உதவியவன் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மருதவாணன் என்பதைத் தெரிந்து கொண்டான்.
         மறுநாள் அணிவகுப்புப் பயிற்சியின் போது புதிய வீரர்களில் சிலருக்கு Ieft,right என்னும் போது எந்தக் காலை தூக்கி வைப்பது என்பது தெரியவில்லை. ஒரே குழப்பமாகி விட்டது.வைத்தியநாதன் ஆங்கிலேய அதிகாரியிடம் வந்தான். ஸார்,ஐடியா ஸார்,ஹெல்ப் யூ ஸார்.அவன் ஏதோ செய்யப் போகிறான் என உணர்ந்து தலையை அசைத்தார். ஓடிப்போய் கீழே கிடந்த தென்னை ஓலைகளை எடுத்து அவர்களின் இடது கால்களில் கட்டினான். இது ஓலைக்கால்,அது சீலைக்கால் எனக்கூறி ஓலைக்கால், சீலைக்கால் என்று மாற்றி மாற்றிக் குரல் கொடுத்தான்.சில நிமிடங்கள் கழித்து left,right எனக் கூற சரியாகச் செய்தனர்.அதிகாரி "குட் "என்றார்.
                              ஓராண்டுப்  பயிற்சி நிறைவடைந்தது.காய்ந்த ரொட்டி, கூழ்,கஞ்சி, சோறு எனஎதுவானாலும்  சாப்பிட்டுக் கொண்டான். எல்லாப் பயிற்சிகளையும் ஒழுங்காகச் செய்தான். ராணுவத்தினருக்கு சில நாட்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும்,சில நாட்கள் துறைமுகத்திலும் பணிகள் தரப்பட்டன. ஒரு நாள் ராணுவ உயர் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக வரும்படி ராணுவத் தளபதி அழைப்பு விடுத்தார். கூட்டத்தில் போர்க்காலச் சூழல் நிலவுவதாகவும் உத்தரவு வந்தவுடன் 
ராணுவத்தினர் கிளம்பத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டார். அதன்படி அனைவரும் தயாராய் இருந்தனர். ஜெர்மனி,இத்தாலி,  ஜப்பான் ஆகிய நாடுகள் போரினை ஆரம்பிக்கப் போவதாக உளவுத் துறை தகவல் தெரிவித்தது. சில நாட்களில் ஜெர்மன் படைகள் போலந்து நாட்டை முற்றுகை இட்டது. 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. மதராஸ் ராணுவத்தினர்  கிளம்பத் தொடங்கினர். வைத்தியநாதன் தபால் கார்டு ஒன்றில்  மாமாவிற்குத் தகவல் தெரிவித்தான். மதராஸில் இருந்து கிளம்புகிறோம். இறைவனின் அருள் இருந்தால் மீண்டும் சந்திக்கிறேன் என எழுதி இருந்தான்.அதைப் பார்த்த மாமா கண் கலங்கினார்.
                  தொடரும்.

Thursday, November 19, 2020

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 3

மதுரைக்குத் துவரம் பருப்பை ஏற்றிச் சென்ற முத்துலாபுரம் வியாபாரியிடம் பேசி சிறிது பணமும் கொடுத்து மாட்டுவண்டியில் பயணம் செய்தான். களைப்பு தெரியாமல் இருக்க வண்டிக்காரர் பாட ஆரம்பித்தார்.
"வண்டி !வண்டி!மாட்டு வண்டி. மருதைக்குப் போகும்  வண்டி
ஜல்ஜல் என்று சாலையிலே
சடுதியாக ஓடும் வண்டி"
 வைத்தியநாதன் அதைத் தொடர்ந்தான்.
"கருப்பசாமி நம்முடனே காவல் வர
கண்ணழகி மீனாளை கண்டு வர
கடகட என்று  பறக்கும் வண்டி". வண்டிக்காரர் கேலியாக " யாரப்பா அந்த மீனாள்? எனக் கேட்டார்." "மதுரையில் அருள் பாலிக்கும் மீனாட்சி அம்மனைப் பாடினேன்" என பதில்  கூறினான்.
கிராமத்தில்  இருந்த ஒன்று விட்ட அத்தை கொடுத்த புளிச்சாதமும்., எலுமிச்சம்  சாதமும்  இரண்டு நாட்களுக்கு இருந்தன. மூன்றாவது நாள்   மதுரைக்கு  வந்து சேர்ந்தார்கள். வைத்திய நாதனுக்கு வைகை ஆற்றைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்கவில்லை.ஆசை தீர மூழ்கிக் குளித்தான். மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களைப்  பார்த்து பயபக்தியுடன் வணங்கினான்.ஞாயிற்றுக் கிழமை சந்தைக்கு அடுத்த தெருவில் இருந்த மாமாவின் வீட்டிற்குச் சென்றான்.. மாமாவும், அத்தையும் வரவேற்றனர்.  அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் இருந்தாள்.புதிய ஆளைப் பார்த்ததும் அம்மாவின் பின் ஒளிந்து கொண்டாள்.அடுத்த நாளே மாமாவுடன் வேலை தேடிக் கிளம்பினான்.ஒரு பல சரக்குக் கடையில்   வேலை  கிடைத்தது. அவனது சுறுசுறுப்பும், கலகலப்பானபேச்சும்,முதலாளிக்கும்,
வாடிக்கையாளர்களுக்கும்  பிடித்து விட்டது.குறைந்த அளவு சம்பளம் தான்.சம்பளப் பணத்தை வாங்க மாமா மறுத்து விட்டார்.எனவே அவ்வப்போது பருப்பு, பலசரக்கு போன்ற பொருட்களை வாங்கிக் கொடுத்தான்.சிறிது பணம் சேர்ந்ததும் அக்காவையும்,அவள் குழந்தைகளையும் பார்த்து விட்டு வந்தான்.இரண்டு ஆண்டுகள் ஓடின.ஒரு நாள் சந்தையில் ஆங்கிலேயர் முகாமிட்டு இருந்தனர். வெளியே நிறைய இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது ராணுவத்திற்கு ஆள் சேர்க்கிறார்கள் எனத் தெரிந்தது.மாமா வேலை பார்க்கும் கடைக்கு  விரைந்தான். தான் ராணுவத்தில் சேர விரும்புவதாகக் கூற மாமாவிற்குக் கோபம் வந்தது."ஆங்கிலேயருக்கு அடிமை வேலை செய்யப் போகிறாயா? உன் அண்ணன் கல்யாணம் கூட வேண்டாம் என்று விடுதலைக்காக தேசபக்தர்களோடு அலைந்து கொண்டிருக்கிறான்.நீ ராணுவத்தில் சேர்ந்து  அவர்களுக்காக உயிரை விடப் போகிறாயா?"என்று சத்தம் போட்டார்."மாமா,காக்கிச் சட்டையும்,பூட்ஸும் மாட்டிக் கொள்ளலாம்.வேறுவேறு ஊர்களுக்குப் போகலாம்.தஸ்புஸ் என்று ஆங்கிலத்தில் பேசலாம். இப்போதெல்லாம்  அவர்கள் யாரோடும் சண்டை போடுவது இல்லை. ஆறிலும் சாவு,நூறிலும் சாவு.தயவு செய்து எனக்கு அனுமதி கொடுங்கள்." என்று கெஞ்சினான்.கடைசியில் மாமா சம்மதம் தெரிவித்தார்.அத்தை கண்ணீர் விட்டாள்.காடுமேடுகளில் சுற்றியதும்,வயலில் மழையிலும் வெயிலிலும் பாடு பட்டதும் உடலுக்கு உரமேற்றியிருந்தது.நேர் காணலில் எல்லா உடற் சோதனைகளிலும் தகுதி பெற்றான்.அவனைத் தேர்வு செய்து விட்டார்கள்.அடுத்த வாரமே மதராஸ் செல்ல வேண்டும். அத்தை, மாமாவின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டு வைத்திய நாதன் கிளம்பினான்.தேர்வு செய்யப் பட்ட பத்து பேர் ஏற ராணுவ ட்ரக் மதுரையில் இருந்து கிளம்பியது. வைப்பாற்றின் கரையில் கீழ்நாட்டுக் குறிச்சி என்ற குக்கிராமத்தில் பிறந்த வைத்திய நாதன் மதராஸ் பட்டினத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டான்.அதையும்  தாண்டி நீண்ட நெடும் பயணம் காத்துக் கொண்டு இருந்தததை அப்போது அவன் அறியவில்லை.
                        தொடரும்.

Tuesday, February 11, 2020

கங்காரு தேசம் 31

பிரிஸ்பேனை விட்டுக் கிளம்புமுன்  மாலை நேரத்தில் மீண்டும் ஒரு ஷாப்பிங் சென்றோம்.மழைத் தூரல்அன்று விட்டுவிட்டு  விழுந்து கொண்டிருந்தது.எனவே Mt.Gravatt பகுதியில் இருந்த ஷாப்பிங் மாலுக்குச் சென்றோம்.ஆலிவ் ஊறுகாயில் ஒரு வகை நம்முடைய மாவடு போல புளிப்பான நீரில் காரமின்றி ஊறிக் கொண்டு இருக்கிறது. அதை பிரட் சாண்ட்விச்சில் தடவி உண்கிறார்கள்.மற்ற ஒரு வகை உப்பு, பூண்டு,மிளகாய்த்தூளுடன் எண்ணெயில் பதப்படுத்தப் பட்டது. அதுதான்  நன்றாக இருப்பதாக எனக்குத் தோன்றியது.அதை வாங்கியவுடன் பயன்படுத்த வேண்டும்.நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்த முடியாது.எனவே அதை கடைசி நாளில் வாங்கினோம். சாக்லெட், பிஸ்கட் ஆகியவற்றையும்  வாங்கினோம். மறுநாள் காலை தங்கையிடமும், மகள்களிடமும் விடை பெற்றுக் கிளம்பினோம். மைத்துநர் முருகனுடன் காரில் விமான நிலையத்திற்கு  வந்து சேர்ந்தோம். 
லக்கேஜ் பேக்  அனைத்தையும்  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கவுண்டரில் ஒப்படைத்தோம். போர்டிங் பாஸை பெற்றுக் கொண்டு அமர்ந்து   தங்கை கொடுத்த இட்லியை சாப்பிட்டோம்
                                                         பாஸ்போர்டை சரிபார்த்தது.அடுத்து வைக்கப் பட்டிருந்த காமிரா  ஃபோட்டோ எடுத்தது.பின்னர்  கதவு திறந்து வழி விட்டது.விமானம் நிற்கும் இடத்திற்கு வந்தோம். செக்யூரிடி செக் செய்த போது  கைப்பையும்,வளையலையும் ஸ்கேன் செய்தார்கள்.பின் எங்களையும் சோதித்து அனுப்பினார்கள். காலை 9.10க்கு  விமானம் கிளம்பியது. பிரிஸ்பேனில் இருந்து சிங்கப்பூர் செல்ல பயண நேரம் 7மணி15 நிமிடமாகும்  என அறிவித்தார்கள். பிரிஸ்பேன் ஆறு வளைந்து செல்வதையும் நகரின்உயர்ந்த கட்டிடங்களையும் வானில் இருந்து கண்டோம்.ஆஸ்திரேலியா கண்டத்தைக் கடக்கவே 3 மணி நேரமாகி விட்டது.சில இருக்கைகள்  காலியாக இருந்தன.கரோனா வைரஸ்  பயம் காரணமாக இருக்கலாம்.இருக்கையின் முன் இருந்த மானிட்டரில் ஒரு தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்தேன். 10 நிமிடம்  ஆகும் முன்பே  படம் நின்று விட்டது. எனவே கேசரி என்ற இந்தி சினிமாவைப் பார்த்தேன். ஆங்கிலேயர் கால சீக்கிய ராணுவ வீரனைப் பற்றிய கதை.நேரம் போனதே தெரியவில்லை. ஒரு மணி நேரம் ஆனதும் விமானத்தில்  எங்களுக்கு வெஜிடபிள் நூடுல்ஸ்,
பழசாலட்,பன் வழங்கப்பட்டன. நூடுல்ஸை  ஃபோர்க் பயன்படுத்தி சாப்பிடத் தெரியவில்லை. சிறிது மட்டுமே சாப்பிட்டேன். இறங்கும் முன்பு தக்காளி,சீஸ் தடவப் பட்ட சாண்ட்விச்  தரப்பட்டது.காஃபி,டீயை வேண்டாம் என்று கூறி விட்டோம். சிங்கப்பூர் நேரப்படி 2.30. மணிக்கு சாங்கி விமான நிலையம் டெர்மினல் 3ல் இறங்கினோம். அடுத்து 8.20 க்குத் தான் சென்னைக்குச் செல்லும் விமானம் ஏற வேண்டும்.நன்றாக விமான நிலையத்தைச் சுற்றிப் பார்க்க நேரம் கிடைத்தது.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு ,ஒருவருக்கு  20 டாலர்களுக்கு கிஃப்ட் வவுச்சர் வழங்கப்படும்.I shop, Changi என்ற இடத்திற்குச் சென்று போர்டிங் பாஸைக் காட்டி 40 டாலர்களுக்கான வவுச்சரைப் பெற்றுக் கொண்டோம். அதைக் காட்டி விமான நிலையத்திற்குள்  மீண்டும் ஷாப்பிங். பேரன்,பேத்திகளுக்கு விளையாட பொம்மை விமானம், சாக்லெட் வாங்கினோம்.மேலும் 100 டாலர் செலவானது.T3 ல் இருந்து T2க்குச் செல்லும்  Sky trainல் சென்று பாதையில் Jewel விமானநிலையத்தைப் பார்த்தோம். விசா இருந்தால் மட்டுமே உள்ளே செல்லலாம்.
பெரிய செயற்கை அருவி இருந்தது.
காடு போல் மரம்,செடிகள் காட்சி அளித்தன.
Sky trainல் இருந்துதான் படங்களை எடுத்தோம்.Terminal 2ல் இறங்கி காவேரி ரெஸ்டாரண்டில் தோசை சாப்பிட்டோம்.நம் ஊரைப் போலவே 2 வகை சட்னி சாம்பாருடன் சுவையாகஇருந்தது.பின்னர் அந்தப் பகுதியையும் சுற்றிப் பார்த்தோம். விமானநிலையம் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.


மீண்டும் Terminal 3க்கு வந்து நாங்கள் ஏறவேண்டிய இடத்திற்கு வந்தோம்.Security check முடித்தவுடன்Form ஒன்றைக் கொடுத்தார்கள். அதை நிரப்பி சென்னையில் இறங்கியவுடன்  அங்குள்ள medicalCheck up குழுவிடம்  கொடுக்குமாறு கூறினார்கள். எங்களுடைய முழு விவரங்களுடன் சீனா சென்று வந்தோமா 
என்பதையும் எழுத வேண்டியிருந்தது.  சிங்கப்பூர் நேரப்படி இரவு 8.20க்கு விமானம் கிளம்பியது.இருக்கைகள் நிறைந்திருந்தது.தமிழர்கள் தான் அதிகம்.வெளிநாட்டவர் குறைவாகத் தான் இருந்தனர். ஒருமணி நேரத்திற்குப் பின் உணவு வழங்கப் பட்டது. சாதம், பருப்பு,குருமா,காய்றி சாலட்,தயிர், ஊறுகாய் ஆகியவற்றுடன் ஐஸ்கிரீமும் தரப்பட்டது.வயிறார உண்டோம். 4 மணி நேரத்தில் சென்னைக்கு வந்து விட்டோம். இந்திய நேரப்படி 9.55 க்கு இறங்கினோம்.மருத்துவர் குழு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.காய்ச்சல் உள்ளதா என அறிய Thermal test நடத்தப்பட்டு ரிசல்ட் தரப்பட்டது.அதைப் பெற்றுக் கொண்டு immigration ல் காட்ட பாஸ்போர்டில் ஸீல் செய்து வெளியே அனுப்பினார்கள்.லக்கேஜ் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்குப் பின் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.மகன் எங்களுக்காகக் காத்திருந்தான். மிகுந்த மகிழ்ச்சியோடு நம் தாய்த் திருநாட்டிற்கு வந்து சேர்ந்தோம்.  கங்காரு தேசத்தை காணச் செய்த இறைவனுக்கு நன்றி.
                    முற்றும்.


Friday, January 31, 2020

கங்காரு தேசம் 30

STORY BRIDGE 
பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள ஆற்றுப்
பாலங்களில் ஒன்று story bridge. அதைப் பார்க்க எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று மைத்துநர் விரும்பினார்.நாங்கள் விக்டோரியா பாலத்தைப் பார்த்து விட்டோமே எனக் கூறி விட்டோம்.இந்தியாவிற்குத் திரும்பும் முன்பு சிறிய மைத்துநர் வீட்டிற்குச் சென்று விடை பெற்று வரவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஜனவரி 26ஆம் நாள் ஆஸ்திரேலிய தினமாகக் கொண்டாடப் படுகிறது.அது ஞாயிற்றுக் கிழமை என்பதால்  27 ஆம் தேதி திங்கள் கிழமை தேசிய விடுமுறை விடப்பட்டது.அன்று சிறிய மைத்துநர்  எங்கள் அனைவரையும் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.எனவே நாங்கள் அங்கு சென்றோம்.சிறிய தங்கை, மைத்துநர் மற்றும் மகன்கள் ஆகியோருடன் உரையாடினோம். மதிய விருந்து அருமையாக இருந்தது.பின்னர் விடைபெற்றுக் கிளம்பினோம். மைத்துநர் முருகன் Story bridgeக்கு அழைத்துச் சென்றார்.
இந்தப்  பாலம் முழுவதும் இரும்பு, எஃகு ,சிமென்ட் கலவையால் உருவாக்கப் பட்டுள்ளது.இதைக் கேள்விப்பட்டதும்  மதுரை மணிநகரத்தில் உள்ள சிறிய ரயில் பாலத்தை கர்டர் பாலம் என்று கூறுவது நினைவுக்கு வந்தது. Girder bridgeல் மரமும் இவற்றுடன் பயன்படுத்தப்படும் எனத் தெரிந்தது.இந்தப் பாலம் 1940 ல் பயன்பாட்டுக்கு  வந்தது.777 மீட்டர் நீளமும், 24 மீட்டர் அகலமும்,74 மீட்டர் உயரமும் கொண்டது.இதன் மேல் பகுதியில் தக்க பாதுகாப்புடன்
நடைப்பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
(Downloaded picture)
இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.Day climb,night climb, cantilever climb,plank climb என பல நடைப்பயணங்கள் உள்ளன. பாதுகாப்பிற்கு ஒரு பெல்ட் அணிந்து கொள்ள  அது கைப்பிடி ஓரமாக ஏறுபவர்களுடன் நகர்ந்து கொண்டே வருமாம். இது பாதுகாக்க மட்டும் அல்ல.தற்கொலையைத் தடுக்கவும் தான்.கூடவே ஒரு வழிகாட்டியும் வருவார். Abseiling என்று பாலத்தின் உச்சியில் இருந்து கயிற்றைக் கட்டிக் கொண்டு கீழே இறங்குகிறார்கள்.
          (Downloaded picture)
  சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சாகசச் செயல்களில் மக்கள்  ஈடுபடுகின்றனர்.    
                    CLOCK TOWER TOUR
பிரிஸ்பேன் சிட்டி ஹாலை ஏற்கனவே பார்த்து விட்டோம். அங்குள்ள கடிகாரக் கூண்டைப் பார்க்க அனுமதிப்பார்கள் என்பதை அங்கு சென்ற பின்தான்  அறிந்தோம்.ஆன் லைனில் முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.ஒரு  குழுவில் ஏழு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.  அதைப் பார்க்கவில்லை.எனவே தங்கை ரமணாவும்,மைத்துநரும் அங்கு அழைத்துச் செல்ல விரும்பினர்.ஆன்லைனில் பதிவு செய்து மாலை 3.30 க்கு அங்கு பார்வையிட அனுமதி பெற்றோம்.  மைத்துநர் பணிக்குச் சென்று விட்டார்.நாங்கள்  ஐவரும் கிளம்பினோம்.பேருந்து சரியான நேரத்திற்கு வந்து விடும்.எனவே காலஅட்டவணையைப் பார்த்து  சரியான நேரத்திற்கு  பேருந்தில் ஏறி சிட்டி ஹாலுக்குச் சென்று விட்டோம்.  
           வழிகாட்டிப் பெண்மணி வந்து அழைத்துச் சென்றார்.சரியாக ஏழு பேர் மட்டுமே அனுமதிக்கப் பட்டோம். மூன்றாவது தளத்தில் இருந்து மேலும் ஒரு தளத்திற்கு  படிக்கட்டில் ஏறிச் சென்றோம்.அதன் பிறகு ஒரு மரத்தால் ஆன பழைய லிஃப்ட்டில் ஏறினோம்.கட்ட  ஆரம்பித்த போது பொருட்களை ஏற்றக்  கட்டப்பட்ட இந்த  லிஃப்ட்  மின்சாரத்தால் இயக்கப் படுவதில்லை.பழைய இயந்திரத்தால் இயக்கப் படுகிறது. 
கடிகாரத்தின் பின்புறத்தைப் பார்க்க நிறுத்தினார்கள்.வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

கடிகாரமணி அடிக்க உதவும் கருவியைப் பார்த்தோம். Master clock என்ற பெண்டுலம் உள்ள கடிகாரம் சுவரில் மாட்டப்பட்டுள்ளது. அதில் உள்ள நேரத்தைத் தான் பெரிய கடிகாரம்  காட்டுமாம்.
தரையில் இருந்து 87.47 மீீட்டர் உயரத்தில் உள்ளது.அதற்கு மேல் Observation deck உள்ளது.தூண்கள் அமைந்துள்ள அந்த சிறிய இடத்தைச் சுற்றி வந்தோம்.
(தூணின் ஒரு பகுதி)
அங்கிருந்து பிரிஸ்பேனின்  கட்டிடங்களின் அழகை ரசித்தோம்.
அவற்றைப் பார்த்து விட்டு கீழே வந்தோம்.மூன்றாம் தளத்தில் 
பிரிஸ்பேன் மியூசியம் உள்ளது. நாங்கள்  இருவரும் மீண்டும் அதைப் பார்த்தோம்.இம்முறை நிறைய படங்கள் எடுத்தோம்.
நின்று நிதானமாக ரசித்தோம். வரும்போது அடிலெய்டு வீதி  வழியாக வந்தோம்.வீட்டிற்குத் திரும்பும் போது  Queen street mallஐப்
பார்த்துக் கொண்டே வந்தோம்.Bus station சுரங்கத்தில் அமைந்துள்ளது.  பயணிகள் காத்திருக்க வேண்டிய பகுதியும் மாலின் ஒரு பகுதியில் மூடிய கதவுகளுடன் இருந்தன. நாங்கள்  பேருந்தில் ஏற வேண்டிய இடத்தை அங்குள்ள display ஐப் பார்த்து அறிந்து கொண்டோம். பேருந்தின் எண்ணுடன் அது எத்தனை நிமிடங்களில் வரும் என்பதையும்   அறிந்து கொள்ளலாம். பயணிகள் அழகாக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம். குளுகுளு பேருந்தில் ஏறி மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தோம்.   
                       தொடரும்.                        


 


   

Wednesday, January 22, 2020

கங்காரு தேசம் 29

CITY HALL
இது பிரிஸ்பேன் நகராட்சி அலுவலகம் ஆகும்.  மைத்துநர் சில நாட்களுக்கு முன்னதாகவே ஆன்லைனில்  விண்ணப்பித்து அனுமதி வாங்கி விட்டார்.கட்டணம் ஏதும் கிடையாது. பிற்பகல் 1.30 மணிக்கு guided tour இருந்தது.அதில் நாங்கள் கலந்து கொண்டோம்.
இந்த இடம் King square என்று அழைக்கப்படுகிறது.கட்டிடத்தின் முன் இருபுறங்களிலும் வெண்கலத்தால் செய்யப்பட்ட
சிங்கங்களின் சிற்பங்கள் இருந்தன.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலை ஒன்றும் உள்ளது. கட்டிடத்தூண்களைப் பார்த்த போது நமது நாட்டுப் பாராளுமன்றத் தூண்கள் போன்றே இருந்தது.
(இந்தியப் பாராளுமன்றக் கட்டிடம்)
பிரிஸ்பேன் நகரை உருவாக்கப்       பாடுபட்ட குடும்பங்களை                        
நினைவு படுத்தும் வகையில்  Petrie tableau என்ற சிற்பம் வைக்கப் பட்டுள்ளது.அதற்குக் கீழே இரு கங்காருகளின் சிலையும் உள்ளது
.
City hallன் முகப்பில் Tympanum என்ற சிற்பம் காணப்படுகிறது.    
      இவைகளைப் பார்த்த பின் உள்ளே சென்றோம்.  நமது பாராளுமன்றம் போன்றே  கீீழ்த் தளத்தில்  வட்ட வடிவத்தில் ஒரு அரங்கம் உள்ளது. அதன் மேல் பகுதி தாமிரத்தால் ஆன 31 மீட்டர் விட்டமுள்ள அரைக்கோள வடிவில் உள்ளது. மேடையின் பின்புறம் 4300 குழல்களை உடைய Organ என்ற பெரிய இசைக் கருவி இருக்கிறது. அரசாங்க நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன.மைத்துநர்,
தங்கை மற்றும் மகள்கள் இங்கு         நடைபெற்ற நிகழ்ச்சியில் தான்            ஆஸ்திரேலியக் குடியுரிமையைப்    பெற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. கட்டணம் செலுத்தி தனியார் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களையும் இங்கு  நடத்தலாம்.
மேல் தளத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக்  காண வசதி உள்ளது.அடுத்து கவுன்சில் கூடும் ஹாலுக்குச் சென்றோம்.அதைப் ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லை.
நடுவில் மேயருக்கு இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.ஆளுங்கட்சியினர்     சுயேச்சைகள்,எதிர்க் கட்சியினர்         அமரும்  இடங்களையும்  தனித்தனியே  அமைத்து உள்ளனர்.அழகாக மேசை, நாற்காலிகள், மைக்குகள் அமைக்கப் பட்டிருந்தன.மேயரின் ஆஃபீஸை வெளியில் இருந்து பார்த்தோம்.1925 முதல் பதவி வகித்த மேயர்களின் புகைப்படங்கள்மற்றும்
தற்போதைய மேயரின் புகைப்படம் மாட்டப் பட்டிருந்தன. சிறிய மியூசியம்
ஒன்றும் உள்ளது.அதில் பல ஓவியங்கள் இருந்தன.குழந்தைகள்
விளையாட தனி இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.
PARLIAMENT HOUSE
குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரம் பிரிஸ்பேன்.நம் நாட்டில் மாநில அளவில்  தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்களை M.L.A என்று கூறுவர்.இங்கு  M.P என்றுதான் கூறுகின்றனர். சட்டசபை, பாராளுன்றம் எனக் கூறப்படுகிறது.எனவே இங்கு Parliament house உள்ளது. முதலமைச்சர் Premier என அழைக்கப் படுகிறார்.    
 பார்வையாளர்கள் மறுபக்கம் உள்ள புதிய கட்டிடம் வழியாகத் தான் அனுமதிக்கப் படுகின்றனர்.
(downloaded picture)
மாலை 4 மணிக்கு உள்ளே சென்றோம். Security check செய்தனர்.கைப்பையும் ஸ்கேன் செய்யப் பட்டது.Pass port ஐப்பார்த்த பின்பு அனுமதி தந்தனர். பல லாக்கர்கள் உள்ளன.பையை  ஒரு லாக்கரில் வைத்து விட்டு சாவியை எடுத்துச்  சென்றோம்.வழிகாட்டிப் பெண் ஒருவர் குழுவை அழைத்துச்
சென்றார்.நடுவே இருந்த படிக்கட்டை மட்டுமே படம் எடுக்க அனுமதித்தார்.
பிற இடங்களைப் படம் எடுக்க அனுமதி கிடையாது. பாராளுமன்ற அறைக்குள் நுழைந்தோம். M.Pக்கள் அமரும் நாற்காலியில் அமரச் சொன்னார்கள். பட்டன் எதையும் தொடாமல் இருக்குமாறு கூறிவிட்டுபின் அறையைப் பற்றி விளக்கம்  
தந்தார்.  ஒரு நிமிட குவின்ஸ்லாந்து M.P.! ஒரே சிரிப்புதான்.           (Downloaded    picture)            
 ஆளுங்கட்சியினர்,எதிர்க்கட்சியினர்,சுயேச்சைகள் அமரும் இடங்கள், பத்திரிக்கையாளர்களுக்கு உரிய இடங்கள்,பார்வையாளருக்கு உரிய இடங்கள் ஆகியவற்றைக் காட்டினார்.பாராளுமன்றத்தில் பேசுபவர்கள் சரியாக உரையை முடிக்க நிமிடம்,நொடியைக் காட்ட பெரிய எலெக்ட்ரானிக் Stop watch வைக்கப் பட்டுள்ளது.
                    விருந்தினர் சந்திப்பு, பத்திரிக்கையாளர் சந்திப்பு ஆகியவற்றிற்கு ஒரு பெரிய அறை உள்ளது. ஓரிடத்தில் நூலகம் அமைக்கப் பட்டுள்ளது.அதில் ஆஸ்திரேலியாவின் எல்லா மாநிலப் பாராளுமன்றங்களின் நடவடிக்கைக் 
குறிப்புக்கள் தொகுக்கப்பட்டு புத்தகவடிவில் அடுக்கப் பட்டுள்ளன.  உட்கார்ந்து படிக்க நாற்காலிகள், மேஜைகள் உள்ளன.
            (Downloaded picture) 
எலிபெத் மகாராணி,அவரது தந்தை ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோரின்  படங்கள் இருந்தன. ஒரு தளத்தில் கண்ணாடியில் ஒரு அரசியாரின் படம் இருந்தது. பார்த்ததும் நினைவு வந்து விட்டது. படிக்கும் காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் விக்டோரியா மகாராணியாரின் பேரறிக்கையில் கூறப்பட்ட அம்சங்கள் மிக முக்கியமானது என திருப்பித் திருப்பிப் படித்திருக்கிறோம்.எட்டாம் வகுப்பு ஆசிரியையாக 22 ஆண்டுகள் பாடமாக நடத்தியிருக்கிறேன்.எனவே விக்டோரியா மகாராணியார் நன்கு தெரிந்தவராகி விட்டார்.
(Downloaded picture) 
பாராளுமன்றத்தின் ஒரு சுவரில் இதுவரை உள்ள உறுப்பினர்களின் படங்களும்,பெயர்களும் எழுதப்பட்டுள்ளன.தற்செயலாக பாராளுமன்றஉறுப்பினர் ஒருவர் அங்கு வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்கிருந்து வருகிறீர்கள்?   எனக் கேட்டதும் நான் இந்தியாவில் இருந்து  வந்திருக்கிறேன்   என பதில் கூறினேன். வழிகாட்டி எல்லா இடங்களையும் காட்டினார்.பின்னர் லாக்கரில் இருந்த பையை எடுத்துக்கொண்டு நன்றி கூறி விடை பெற்றோம்.நமது தலைநகர் தில்லியில்  பாராளுமன்றத்தை 1985ல் நானும்,என் கணவரும் பார்வை இட்டிருக்கிறோம். தில்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த மைத்துநர்,முதல் தங்கையின் கணவர்
திரு.ராமகிருஷ்ணன் அங்கு கூட்டிச் சென்றிருந்தார்.இரு மைத்துநர்கள் தயவால் இரு நாட்டுப் பாராளுமன்றங்களைப் பார்த்து  விட்டோம்.1867ல் கட்டப்பட்ட பிரிஸ்பேன் பாராளுமன்றம்
 1921-1927ல் கட்டப்பட்ட இந்தியப்   பாராளுமன்றம்,1920-30களில்     கட்டப்பட்ட சிட்டி ஹால்ஆகிய அனைத்தும் அக்கால  ஆங்கிலேயரின்  கட்டிடக்கலைக்குச்
சான்றுகளாகத் திகழ்கின்றன.    
                   எனது மைத்துனர் முருகன் வேறு எதையாவது பார்க்க விரும்பினால் சொல்லுங்கள். போகலாம் என்றார்.பிரிஸ்பேன் ஆற்றங்கரையில் உள்ள sign of Brisbane ஐ இரவில் தான் பார்த்தோம்.இப்பொழுது போகலாம் என்றேன். பிரிஸ்பேன் ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள விக்டோரியா பாலத்தில் ஆற்றை ரசித்துக் கொண்டே நடந்தோம். கோடைகாலத்தில் எப்படி இவ்வளவு 
நீர் ஓடுகிறதென ஆச்சரியப் பட்டேன்.         பிரிஸ்பேன் நகரம் ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ளதால் கடலில் ஓதங்கள் ஏற்படும் போது கடல் நீர் ஆற்றுக்குள் வந்து விடுகிறது. எனவே  எப்போதும் நீர் இருக்கும்.          இது நன்னீர் இல்லை.படகுப் போக்குவரத்துக்கு  மட்டுமே   இங்கு 
 பயன்படுகிறது.  உற்பத்தியாகும் இடத்தில் இருந்து வரும்போது   நன்னீராகத் தான் வருகிறது.இங்கு உப்புநீராக மாறிவிடுகிறது என்று மைத்துநர் விளக்கம்  கூறினார். 
ஆற்றங்கரையில்   BRISBANE  என       
ஆங்கில எழுத்துக்கள்  பெரியதாகக் காட்சி  தந்தன.                                                       

                            சற்று நேரம் அமர்ந்து விட்டு வீீட்டிற்குக் கிளம்பினோம். பிரிஸ்பேனில்  உள்ள முக்கிய இடங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம். இனி மூட்டை, முடிச்சுக்களைக் கட்டிக்  கிளம்ப வேண்டும்.
                            தொடரும். 
   
                                


 

Monday, January 20, 2020

கங்காரு தேசம் 28

BUS TOUR OF SYDNEY
ஹைட் பூங்காவில் பேருந்து வருவதற்காகக் காத்திருந்தோம். முதலில் வந்தவர்கள் வரிசையாய் நிற்போம் என ஒருவர் கூற மற்றவர்கள் ஏற்றுக் கொண்டனர். வரிசையாகக் காத்திருந்தோம். முதலில் டிரைவர் வந்து பெயர்களைக் குறித்துக் கொண்டு கட்டணம் வசூலித்தார். சரியாக 10.30க்கு அருகில் இருந்த சாலையில் பேருந்தில் ஏறினோம். டிரைவர் விளக்கம் கூறிக் கொண்டே வந்தார். Mrs.Macquarie's chair என்ற இடத்தில் நின்றது.நியூ சௌத் வேல்ஸ் கவர்னராய்  இருந்த மக்வாரிஸ் அவர்களின் துணைவியாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.மணற்பாறை ஒன்றில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கல்வெட்டும் காணப்படுகிறது.
முக்கியமான இடங்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.எங்கு போனாலும் கடலைக் காண முடிந்தது.Rose bay என்னும் இடத்தில் நின்றபோது தொலைவில் ஓப்ரா ஹவுஸ்  மற்றும் ஹார்பர் பிரிட்ஜ்  காட்சி தந்தது.
மரங்கள் அடர்ந்த The gap என்ற இடத்தில் இறங்கி சுற்றிப் பார்த்தோம்.
அடுத்து ஒரு கடற்கரையில் நின்ற போது  செங்குத்தான பாறை அடுக்குகளைக் காண முடிந்தது.அதன் மேல் யாரும் ஏற வேண்டாம் என டிரைவர் வேண்டுகோள் விடுத்தார்.
எனவே தொலைவில் நின்று ரசித்தோம். 
சிட்னியில் முதன்முதலில் அமைக்கப்பட்ட Macquarie light house ஐப் பார்த்தோம்.
பேருந்தில் பயணம் செய்து கொண்டே சிட்னியின் பல பகுதிகளைப் பார்த்து விட்டோம். அடுத்து  Bondi beachல் இறங்கினோம். நமது மெரினா கடற்கரையை விட மிகச் சிறியதாகஉள்ளது.மணல் நல்ல வெண்மையாக இருந்தது.
          (Downloaded picture)
கடற்கரைக்குச் சென்று கடலை நோக்கி நடந்தோம். மக்கள் ஆங்காங்கே மணலில் படுத்து சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருந்தனர்.கடல் அலையில் கால்களை நனைத்து மகிழ்ந்தோம்.ஸர்பிங் செல்பவர்களையும் காண 
முடிந்தது.கடலில் மூழ்குபவர்களைக்காப்பாற்ற Life guards அருகிலேயே உள்ளனர்.கடல் நீரில் நீந்திக் களித்தவர்கள் கரைக்கு வந்து குளிக்க நன்னீர் ஷவர்கள் உள்ளன. குறித்த நேரத்தில் அனைவரும் வந்து சேர பேருந்து கிளம்பியது.வழியில் El Alamine fountain ஐக் கண்டோம்.
இது 1942ல் இரண்டாம் உலகப்போரின் போது எகிப்து நாட்டில் El Alamine என்ற இடத்தில் உயிர் நீத்த போர்வீரர்களின் நினைவுச் சின்னமாகும்.சரியாக இரண்டு மணிக்கு மீண்டும் ஹைட்பூங்காவில் இறங்கினோம்.
             மதிய உணவை உண்ட பின்பு பூங்காவில் சற்று ஓய்வெடுத்தோம். Woolworth's ஷாப்பிங்  சென்டருக்குச் சென்றோம்.ஒரு சுற்று சுற்றி விட்டு North Indian Flavour உணவகத்திற்கு வந்தோம்.வெஜிடபிள் பக்கோடா,  பிரட் பக்கோடா வாங்கி சாப்பிட்டோம். மாலை 6 மணிக்கு சிட்னி விமான நிலையத்திற்கு வந்து விட்டோம். அங்கும் வின்டோ ஷாப்பிங் செய்தோம்.  இரவு உணவாக பிரட் சாண்ட்விச் வாங்கினோம். உள்ளே தக்காளி,வெங்காயம்,கீரை அத்துடன் கத்திரிக்காயும் இருந்தது.Tigerair விமானத்தை விட Virgin Australia விமானம் சற்று பெரியதாக இருந்தது. இரவு 9.30மணிக்கு விமானம் கிளம்பியது. விமானப்பயணம்  ஒரு மணி நேரம்தான். வாடகைக்காரில்  ஏறி 10 மணிக்கு பிரிஸ்பேன் வீீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.அது எப்படி? எனத் தோன்றுகிறதா? கோடைகாலத்தில் அதிகாலையிலேயே சூரிய ஒளி வீச 
ஆரம்பித்து விடுகிறது. எனவேநியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில்  கடிகாரம் ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றப்படுகிறது. குவின்ஸ்லாந்து அதை ஏற்கவில்லை. எனவே சிட்னி நேரப்படி 11 மணி.பிரிஸ்பேன் நேரம் 10 மணிதான்.
             தொடரும்.


Saturday, January 18, 2020

கங்காரு தேசம் 27

HYDE PARK
சிட்னியில் மூன்றாவது நாள் காலை  சுற்றுலா பேருந்தில் ஊரைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்திருந்தோம்.அது 2 மணிக்குத் தான் நிறைவு பெறும். மதியஉணவை முடித்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்கு வந்து கிளம்புவது வீண் அலைச்சலாகும் என நினைத்தோம்.மாலை 5 மணிக்கு ஏர்போர்ட்டிற்குச்  சென்று 6 மணிக்குக் கிளம்பும் tigerairல் கிளம்ப எண்ணி  காலை 11.30 மணி வரை
மட்டுமே அறையை முன்பதிவு செய்திருந்தோம்.காலை 5 மணிக்கு விமானநிறுவனம்,மாலை 6மணிக்கு புறப்படும் விமானம் ரத்து செய்யப் பட்டதால் 9.30க்குக் கிளம்பும் virgin australia விமானத்தில் பயணம் செய்யுமாறு குறுந்தகவல் அனுப்பியது.சிட்னிக்கு எங்களை விட மனமில்லையோ என நினைத்துக் கொண்டேன்.                  
                 காலை உணவாக பிரெட் சாப்பிட்டுவிட்டு மதிய உணவிற்கு தயிர் சாதம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.அறையைக்  காலி செய்து பெட்டிகளோடு கிளம்பினோம். கடந்த இரு நாட்களில் நாங்கள் பயணம் செய்த கார்களின் டிரைவர்கள் லெபனான், ஈரான்,பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.இன்று வந்தவர் நம் நாட்டு சீக்கியர்.  அவரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
HYDE PARK
Anzac war memorial பூங்காவின் ஒரு பகுதியில் இருந்தது.நாங்கள் சென்றபோது அது மூடியிருந்தது. அதன் முன்னால் இருந்த குளத்தின்
நீரில் அக்கட்டிடம் பிரதிபலிக்குமாம். மேகமாக இருந்ததால் நாங்கள் பார்க்க இயலவில்லை.
             சாலையைக் கடந்து பூங்காவின் மறுபகுதிக்குச் சென்றோம். பெரிய மரங்கள்  அடங்கிய சோலை போல இருந்தது.
நடுவில் Archibald fountain உள்ளது. பாரிஸ் நாட்டு சிற்பக் கலைஞர்கள் வடித்த சிற்பங்கள் இங்கு வைக்கப் பட்டுள்ளன.
பூங்காவின் மற்றோர் பகுதியில் தற்போது மாலையில் மட்டும் பொருட்காட்சி நடைபெறுகின்றது.
நன்றாக பூங்காவைச் சுற்றிப் பார்த்து விட்டு Archibald fountain அருகே சுற்றுலா பேருந்துக்காகக் காத்திருந்தோம்.
                தொடரும்.