தொடரும்.
Sunday, May 30, 2021
மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர் -4
மும்பை விமானநிலையத்தில் தான் முதன் முதலாக ட்ராவலேட்டர் என்னும் நகரும் பாதைகளைப் பார்த்தோம். ஏற்கனவே எங்கள் தலைமை ஆசிரியை அதைப்பற்றி சொல்லி இருந்தார். சிறிது தூரம் தான் செல்ல வேண்டியது இருந்தது. எனவே ஏறவில்லை. நடந்தே சென்றுவிட்டோம்.எங்களது பெட்டிகள் கன்வேயர் பெல்ட்டில் வந்து கொண்டு இருந்தன.அவற்றை எடுத்துக் கொண்டோம். ஓய்வறைக்குச் சென்று கை,கால்,முகம் கழுவி புத்துணர்வு பெற்றோம்.வெளியேறும் வாயிலுக்குச் செல்ல எஸ்கலேட்டரில் ஏற வேண்டியது இருந்தது.இதுவரை நான் அதில் ஏறியதில்லை.காலை வைக்கவே பயமாக இருந்தது.என்ன செய்வது எனத் தெரியவில்லை. "வாங்க டீச்சர்! உங்களை பத்திரமாக கையைப் பிடித்து கூட்டிக்கொண்டு போகிறோம்." என்று சக ஆசிரியைகள் அழைத்தனர்.மறுத்து விட்டேன்.அருகில் படிக்கட்டுகள் உள்ளதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.ஏதும் இல்லை. அப்போது ஆசிரியர் ஒருவர் எங்களது அம்மாவிடம் வந்து ,"அம்மா!அதோ அங்கே லிஃப்ட் உள்ளது . நீங்கள் அதில் ஏறி வந்து விடுங்கள்." என்றார். அம்மாவும் , ஒரு ஆசிரியையும் லிஃப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.உடனே நான் தப்பித்தோம், பிழைத்தோம் என்று கிளம்பினேன்."நான் அம்மாவிற்குத் துணையாகப் போகிறேன்' என்று கூறி அவர்களுடன் இணைந்து கொண்டேன்.யாருக்கு யார் துணை என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். வெளியே ஒரு பேருந்து தயாராக நின்று கொண்டு இருந்தது.அதில் ஏறி ஷீரடியை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கினோம்.சிறிது தூரம் சென்றபின் பார்த்தால் மும்பை நகர் வேறுவிதமாகக் காட்சி அளித்தது.சீட்டுக்கட்டுகளை அடுக்கி வைத்ததுபோல் அடுக்கு மாடி வீடுகள் காட்சி அளித்தன. வண்ணம் மாறிய சுவர்கள். இவர்கள் நம்மைப் போல் வீடுகளைப் பராமரிப்பு செய்வது இல்லை என்று தோன்றியது. சாலைகளும் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. இந்த புறநகர் பகுதிதான் இப்படி உள்ளது.பிற பகுதிகள் நன்றாக இருக்கும் என்று திரும்பி வந்த போது தெரிந்து கொண்டேன். வழியில் ஓரிடத்தில் பேருந்தை நிறுத்தி உணவகத்தில் காலை உணவை எடுத்துக் கொண்டோம். மீண்டும் பயணம் தொடர்ந்தது.. ஆங்கிலேயர் காலத்தில் முதன் முதலில் இருப்புப் பாதை மும்பை முதல் தானே வரை போடப்பட்டது என்று படித்துள்ளோம். அந்த தானேவைக் கடந்து சென்றோம். வழியில் நில அமைப்பு சமவெளியாக இல்லை. சிறு குன்றுகளும் ,மேடுகளும் ,பள்ளதாக்குகளுமாக இருந்தன. நாசிக் நகருக்குச் செல்லும் பாதை வழியாகச் சென்றோம்.நாசிக், இராமாயணத்தில் இடம்பெறும் நகரம் ஆகும்.ராமர், சீதை , லெட்சுமணன் இங்கு சில காலம் தங்கியிருந்தனராம். சூர்ப்பனகையின் மூக்கை லெட்சுமணன் நறுக்கிய இடம் இதுதான் என்று எங்கள் தலைமை ஆசிரியை நினைவுபடுத்தினார். நகருக்குள் செல்லவில்லை. ஆசிரியர்கள் தங்கள் செல்ஃபோனில் பதிவு செய்து வைத்திருந்த பாடல்களை பேருந்தில் ஒலிக்கச் செய்தனர்.அவற்றைக் கேட்டு ரசித்துக் கொண்டே சென்றோம். மதிய உணவிற்கு வழியில் இருந்த உணவகத்திற்குச் சென்றோம். சப்பாத்தி, பருப்பு, கூட்டு, சாதம் ஆகியவை இருந்தன. அங்கு பணியாற்றியவர்களிடம் எங்கள் தலைமை ஆசிரியையின் வாழ்க்கைத் துணைவர் ஹிந்தியில் பேசி தேவையான தகவல்களைக் கேட்டு வந்தார்.இன்னும் 50 கிலோ மீட்டர் தான் செல்ல வேண்டியது இருந்தது என்பதை அறிந்து கொண்டோம்.மீண்டும் பயணம் தொடர்ந்தது. கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் கழித்து சாய் பாபா அவர்கள் வாழ்ந்து மறைந்த புண்ணியத் தலமாகிய ஷீரடிக்கு வந்து சேர்ந்து விட்டோம்.ஹோட்டல் துவாரகாவில் எங்களுக்கு அறைகள் பதிவு செய்யப் பட்டிருந்தன.அங்கு சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் சாய் பாபாவைத் தரிசிக்கச் சென்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)
" எஸ்கலேட்டர்" மேட்டர் இப்ப மட்டுமில்லாமல் எப்ப நினைத்தாலும் பயங்கர சிரிப்பு கந்தம்மாள் டீச்சர்.செம ஜாலியா இருந்தது
ReplyDeleteவாழ்க வளமுடன்.நானும் அதை நினைத்து சிரித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஅப்புறம் எஸ்கேலட்டர் ல எப்படி ஏறி இறங்குவது என மதுரை போத்தீஸ் ல training எடுத்துக்கிட்டேன் ன்னு நீங்கள் சிறு குழந்தை போல் எங்களிடம்கூரியதை மறக்க முடியுமா டீச்சர்
ReplyDelete