Monday, March 16, 2026

நீளாயுள்.

நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை.இறையருளால் அருமையான மகன் ,மருமகள்,இரு பேத்திகள்.மேலும் அன்பான மகள்,மருமகன்,இரு பேரன்கள் உள்ளனர்.என்னால் இயன்ற வரை அவர்களுக்கு உதவியாக இருக்கிறேன்.எப்போது கோவிலுக்குப் போனாலும் என் பேரன்கள், பேத்திகள் நன்றாகப் படிக்க வேண்டும்.அவர்கள் கல்லூரியில் எதில் சேரப் போகிறார்கள் என்பதை அறியும் வரை நீளாயுள் கொடு என வேண்டுவேன்.தற்போது வேண்டுதல் மாறி விட்டது.இந்த உடலும் 
மூளையும் இயல்பாக வேலை செய்யும் போதே என்னை எடுத்துக் கொள் என வேண்டுகிறேன்.ஏன் தெரியுமா? என் ஒன்று விட்ட அத்தையைப் பார்த்தேன்.எண்பது வயதைத் தாண்டியவர்கள்.அல்ஸீமர் என்ற மறதி நோய் வந்துவிட்டது. ஒரு பேரன் பொறியியல் பட்டதாரி.வங்கிப் பணி.மற்றும் பேத்தியும் பொறியியல் பட்டதாரி.ஒரு பேரன் மருத்துவ மேல்நிலைப் பட்டதாரி.கடைசிப் பேரனும் மருத்துவராகி விட்டான்.என் அத்தைக்கு
இவை எல்லாம் தெரியுமா என்பதை நான் அறியேன்.அவர்களுக்கு எல்லா நேரமும் ஒரு உதவியாள் தேவை.அவர்களுக்கு இரு மகன்கள்  மட்டுமே உள்ளனர்.மகள் கிடையாது.ஆனால் மருமகள்கள் இருவரும் மகள்களை  விட மேலாகப் பார்த்துக் கொள்கிறார்கள். உதவி செய்ய நர்ஸ்  ஒருவரும் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.பேரனின் கல்யாணத்திற்கு அவர்களை  நாற்காலியில் அமர்த்தித் தூக்கி வந்து உட்கார வைத்திருந்தார்கள்.வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தார்கள். அருகில் சென்று பேசினேன். அவர்களுக்கு  என்னைத் தெரியவில்லை. இரு வருடங்களுக்கு முன்னால் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அத்தை எனக் குரல் கொடுத்தவுடன் வாசலில்  கண்ணம்மா சத்தம் கேட்கிறது என்று கூறிவிட்டார்கள்
 கண்ணம்மா  எப்படி இருக்கிறாய்? மகன்,  மகள் நன்றாக இருக்கிறார்களா என விசாரிக்கவும் செய்தார்கள்.அத்தைக்கு  மறதி நோய் 
என்றீர்கள்.என்னைத் தெரிகிறதே என்றேன்.அவர்களுக்கு பழைய நினைவுகள் உள்ளன.நோய் வந்தபின் 
நடக்கும் நிகழ்ச்சிகள்  மறந்துபோய் விடுகின்றன என்றும்,தற்போதைய நினைவுகள்  இல்லை என்றும் கூறினார்கள்.என்னுடைய அத்தை என் நினைவில் ஒரு கம்பீரமான ஆசிரியை.எனக்கு ஆசிரியப் பயிற்சிக்கு விண்ணப்பம் வாங்கி வந்து படிக்கச் செய்தவர்.என் வாழ்க்கைத் துணைவரைத் தேடி எங்கள் வீட்டில் அறிமுகம் செய்தவர்.அவர் அறிவுரைகளை இன்றும் நடைமுறைப்  படுத்துகிறேன்.உதாரணமாக. ஒன்று. பள்ளிக்கு  விடுமுறை என்றாலும் அதிகாலையில் எழுந்து விடவேண்டும். பணி ஓய்வு பெற்றபின்னும் அது தொடர்கிறது.அனைவருக்கும் விடுமுறை என்றாலும் எனக்குத்  தூக்கம்
வராது. அதிகாலை 4.45 அல்லது 5 மணிக்கு எனக்கு விழிப்பு வந்துவிடும்.   
         அத்தையைக் கண்ட பின்புதான்  என்னுடைய கை ,கால்களும், மூளையும்  நன்றாக இருக்கும்போதே இறையடி  சேர வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்கிறேன்.அண்மையில் சகோதரர் ஒருவர் முகநூலில் பதிவு செய்திருந்தார். "இரவில் தூங்கும் போது நாம்அறியாமல்   உயிர் பிரிந்தால் அது சிலருக்கு மட்டும் இறைவன் தரும் பம்பர் பரிசு"  அப்படி ஒரு பம்பர் பரிசு கிடைத்தால் நன்றாக இருக்கும். 

 

.

No comments:

Post a Comment