Sunday, September 22, 2019

முன்னாள் மாணவன்.


அதிகாலை நேரத்தில் எஃப்.எம்.ரேடியோ  சுப்ரபாதம் பாடிக் கொண்டு இருந்தது. பணி ஓய்வு பெற்ற ஆசிரியை சாரதா
மருமகளுக்கு உதவியாக காய்கறி நறுக்கிக் கொண்டே பாடலை  முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள். எல்லா வேலைகளும் முடிந்தன.மகன், மருமகள்,பேத்தி என எல்லோரும் கிளம்பி விட்டனர்.கணவரின் கையில் "இருந்த செய்தித்தாளைப் பார்த்தாள்.
ஏங்க, அந்தப் பேப்பரை எனக்குக் கொடுங்கள்.எவ்வளவு நேரமாக வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?" என்று கேட்க அவர்  சாரதாவின் கையில்
கொடுத்தார்.அவள் வாசிக்க ஆரம்பித்தாள் .தமிழகத்தின் புதிய பொதுப் பணித் துறை அமைச்சராக திரு.புகழேந்தி பாண்டியன் பொறுப்பு ஏற்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.அவர் மதுரையில் பிறந்தவர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை மதுரையில் படித்தவர் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.சாரதாவிற்கு அவரது பெயர்
நன்கு தெரிந்ததாய் தோன்றியது. நம்
பள்ளியில்  படித்திருப்பானோ என்று
நினைத்தாள்.உடனே ஓய்வு பெற்ற
தலைமை ஆசிரியை திருமதி.சரஸ்வதியைஅலைபேசியில்
தொடர்பு கொண்டாள்."வணக்கம்.அம்மா நன்றாக இருக்கிறீர்களா?"என்று கேட்டதும்" சாரதா! எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்க பேச்சு
தொடர்ந்தது." இன்று செய்தித் தாளில் புகழேந்தி பாண்டியன் பற்றி வந்த செய்தியைப் படித்தீர்களா?"என்றதும்
"ஆமாம். நம் பள்ளியின் பழைய பையன் மாதிரி தான் உள்ளது.இனிமேல் செய்திகள் வந்தால் தெளிவாகத் தெரியும்." என்றார் சரஸ்வதி." ஏப்ரல் மாதம் மதுரைகலெக்டர் அலுவலகத்திற்கு நீங்கள் போகும் போது சொல்லுங்கள்.நானும் வருகிறேன் ." என்றாள் சாரதா." நானும், சீதாவும் பத்தாம் தேதி போகலாம் என முடிவு செய்திருக்கிறோம்."என்று கூறிய
உடன் " சரி.நானும் சென்னையில் இருந்து வந்து விடுகிறேன். " என்றாள்
சாரதா.ஓய்வு பெற்ற ஆசிரியைகள்
அறிவுமதி, முத்தம்மாள், ஈஸ்வரி என்பவர்களுடனும்  அலைபேசியில்
பேச அனைவரும் மஸ்டர் ரோல், அதாவது நேர்காணலுக்கு ஒரே நாளில் செல்ல முடிவு செய்தனர்.
                   ஏப்ரல் பத்தாம் நாள்  கருவூல அலுவலகத்தில் அனைவரும் சந்தித்தனர்.  முதலில் அறிவுமதியும்,
ஈஸ்வரியும் வந்து பேசிக்கொண்டு
இருக்க, சற்று நேரத்தில் முத்தம்மாளும்
சாரதாவும் சேர்ந்து கொண்டனர்.சிறிது
நேரத்தில்  தலைமை ஆசிரியையாக
இருந்த சரஸ்வதி அம்மாளும், சீதாவும்
காரில் வந்து இறங்கினர்.ஆறுபேரும்
அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
" காலை பதினோரு மணிக்கு மேல் தான் ஓய்வூதியர்கள் உள்ளே அழைக்கப் படுவார்கள்.கணினியை
சரி செய்ய வேண்டியுள்ளது". என ஒருவர்  வந்து கூறிச்
சென்றார்.ஆசிரியைகள் ஆறு பேரும்
நீண்ட வராந்தாவில் அமர்ந்தனர்.
புகழேந்தி பற்றி பேச ஆரம்பித்தனர்.
" அவர் மிக கண்டிப்பாக இருக்கிறாராம்.பொதுப் பணித் துறை வேலைகள் அனைத்தும் மிக நன்றாக
நடக்கின்றன.ஊழல் என்பதே நடக்க  வாய்ப்பு இல்லையாம்." என்றார் முத்தம்மாள்." ஆமாம்.வேலை நடக்கும் இடங்களைப் பார்வையிட முன்னறிவிப்பு இன்றி வந்து விடுகின்றார் என செய்திகள் வருகின்றன". என்றார் சீதா." அம்மா, அவர் நம் பள்ளியில் படித்தவர்தான்" என உறுதியாகச் சொன்னார் அறிவுமதி.சரஸ்வதிஅம்மாள், "எப்படி
உறுதியாகக் கூறுகிறாய்?" எனக் கேட்க பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்
நடந்த ஒரு நிகழ்ச்சியை விவரித்தார்.கண் முன் காட்சி விரிந்தது.
                    பிப்ரவரி 28 ஆம் நாள் பள்ளியில் அறிவியல் கண் காட்சி நடந்தது.மாணவ, மாணவியர் படைத்திருந்த  காட்சிப் பொருட்கள்
அனைவரையும் கவர்ந்தது.சிறப்பு விருந்தினராக  அறிவியல் பேராசிரியர் ஒருவர் அழைக்கப் பட்டிருந்தார்.அவர்
பார்வையிட்டு முடித்த பின் குழந்தைகளிடம் உரையாற்றினார்.பின் மாணவர்களிடம்  " நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டார். போலீஸ், படைவீரர், மருத்துவர், இஞ்சினியர், அறிவியல் ஆராய்ச்சியாளர் என்று பலர் பதில் தந்தனர். ஒரு மாணவன் மட்டும் அரசியல்வாதி என்று கூற அவனை மேடைக்கு அழைத்தனர்." தம்பி! நீ ஏன் அரசியல்வாதியாக விரும்புகிறாய்?" என்று கேட்க அவன் பதில் கூறினான்.
" அரசியல் ஒரு சாக்கடை என்று கூறுகின்றனர்.அதில் இறங்கி சுத்தம் செய்ய நினைக்கிறேன்". உடனே தலைமை ஆசிரியை  எழுந்து நின்று
" இவன் அரசியல்வாதியாக சரியான
ஆள் தான்.ஏனெனில் இந்த ஆண்டு 
எட்டாம் வகுப்பில் இவன் பெயர் ‌ஒரு பிரிவில் இருக்கிறது.ஆள் வேறு பிரிவில் இருந்தான்.கூப்பிட்டு விசாரித்த போது எனக்கு இந்த
பிரிவும் பிடிக்கவில்லை என்று ஒரு மணி நேரம் நின்று சாதித்து விட்டான்.
இப்போது அவனுக்குப் பிடித்த  மூன்றாவது பிரிவில்  படிக்கிறான்". என்றார்.கூட்டத்தினர் பலமாக கை தட்டினர்.அந்த மாணவன் தான் புகழேந்தி பாண்டியன் என்றார் ஆசிரியை அறிவுமதி.மீதி ஐவரும் அதை ஏற்றுக் கொண்டார்கள். நேர் காணல் முடிந்து வெளியே வந்தனர்.
                    அலுவலகத்தில் ஒரே பரபரப்பு. போலீசார்  ஆங்காங்கே  நின்று கொண்டு இருந்தனர்.ஒருவரிடம்
என்ன என்று விசாரிக்க "பொதுப் பணித் துறை அமைச்சர் வந்து கொண்டு இருக்கிறார் " என பதில் கிடைத்தது.சில நிமிடங்களில் பாதுகாப்பு போலீசார் வண்டி வர ,  பின்னால் சைரன் பொருத்தப் படாத  தனது சொந்த காரில் வந்தார்.உள்ளே நுழையும் போதே 
அமைச்சர் ஆசிரியைகளைப்  பார்த்து
விட்டார்.அவர்கள் அருகில் கார் நின்றது.அமைச்சர் கூப்பிய கரங்களுடன் இறங்கினார்." டீச்சர் வணக்கம் .  உங்களை எல்லாம் பார்த்ததில்  எனக்கு மிக மகிழ்ச்சி.எல்லோரும் நன்றாக  இருக்கிறீர்களா?" எனக் கேட்டார். " நீ சொன்ன மாதிரியே அரசியல்வாதியாகி
விட்டாய்.மிக்க மகிழ்ச்சி. சிறப்பாக பணி தொடர  வாழ்த்துக்கள்". என்றார் சரஸ்வதி.அதற்குள் கலெக்டர்  வந்து வரவேற்க ஆசிரியைகளிடம் விடை
பெற்றார் அமைச்சர் திரு.புகழேந்தி பாண்டியன்.  ஓய்வு பெற்ற அந்த ஆசிரியைகள் மன நிறைவோடு
கிளம்பினார்கள்."  மீண்டும் அடுத்த ஆண்டு , இதே ஏப்ரல் மாதத்தில் ,இதே இடத்தில் சந்திப்போம்." என்று வானொலி  அறிவிப்பாளர் போல சாரதா அறிவிக்க அனைவரும் சிரித்தனர். பிரியா விடை பெற்று அவரவர் ஊர்களுக்குச் சென்றனர்.
            
  

       

No comments:

Post a Comment