Friday, September 13, 2019

கண்ணாடி

துள்ளித் திரிந்த பள்ளிப் பருவம். மதிய உணவு  இடைவேளையில் எனது ஆச்சியும் ஆசிரியையும் ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர்.சற்று நேரத்தில் ஆச்சி கண்ணீருடன் என் அருகில் வந்தார்.என்னாயிற்று ஆச்சி? எனக் கேட்டேன். உன்னை கண்ணாடி போடச் சொன்னார்கள்.நீ கண்ணாடி போட்டால் உனக்கு கண் தெரியாது என்று எல்லோரும் கூறுவார்கள். மாப்பிள்ளை கிடைப்பது கடினம் என்று கூறினார். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்த எனக்கு அவர்களின் கவலை புரியவில்லை.
மறுநாள் அப்பாவும் நானும்  கண் மருத்துவரிடம் சென்றோம். கண்ணாடி
போடத் தொடங்கினேன்.அது என்னுடைய அடையாளம் ஆகியது.கண்ணாடி போட்ட மாணவி,கண்ணாடி போட்ட பெண்,
கண்ணாடி போட்ட அம்மா,கண்ணாடி போட்ட ஆசிரியை, கண்ணாடி போட்ட
ஆச்சி என பருவங்கள் கடந்தன.
அம்மா,கண்ணைத் திறங்கள் என்ற
மருத்துவரின் குரல் கேட்டு கண் விழித்தேன்.கண் புரை சிகிச்சை முடிந்தது. விழிலென்ஸ் பொருத்தி விட்டோம். இனி கண்ணாடி அணியத்
தேவை இல்லை. படிக்கும் போது மட்டும்
போடுங்கள்என்று கூறினார். நன்றி கூறி விட்டு வெளியில் வந்தேன்.
வீட்டுக்கு வந்து முகம் காட்டும் கண்ணாடி முன் நின்றேன். ஆச்சியின்
நினைவு வந்தது. கண்ணாடி இல்லாத
கந்தம்மாளைக் கண்டு மகிழ ஆச்சி
இல்லையே எனக் கலங்கி நின்றேன்.
நரைத்த முடியும், சற்றே எற்றிய  முன் பற்களும் ஆச்சி உனக்குள் தான்  இருக்கிறாள் என்றன.

No comments:

Post a Comment