Tuesday, September 17, 2019

அந்த மனம்

                அன்று விடுமுறை நாள் என்பதால் பிள்ளைகள் ஏழு  மணி ஆகியும் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவில்லை.வேலைக்குச் செல்லும் அம்மா என்பதால் சுந்தரி அன்று தான் வீட்டை சுத்தம் செய்ய, துணி துவைக்க ,மாவு அரைக்க  என பல வேலைகள் செய்ய வேண்டும்.நல்ல வேளையாக இந்த சனிக்கிழமை விடுமுறை கிடைத்தது. இன்று   வேலைகளை முடித்துவிட்டால்  நாளை ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டே பரபர என இயங்கினாள்.
வெளியே அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த நடராஜன் குரல் கொடுத்தார்.சுந்தரி! வழக்கம்போல காலையிலேயே சமைத்து விடு.அப்பா
வருவதாகச் சொல்லி இருக்கிறார்.
சரிங்க என்றாள் சுந்தரி.                                                   சுந்தரிக்கு
மாமனார் மீது ஒரு மரியாதை இருந்தது.மூன்று குழந்தைகளை விட்டு விட்டு மனைவி இறந்து போக அவர் தனியாளாக வளர்த்து படிக்க வைத்து நல்ல வேலைகளில் அமரவும் செய்து விட்டார்.திருமணத்தின் போது எதுவும் கேட்கவில்லை.உங்கள் பெண்ணிற்கு
நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்யுங்கள் என்று கூறி விட்டார். அவருடைய கிராமத்தில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது.விவசாயி என்றாலும் அக்காலத்தில் ஓரளவு படித்தவர் அவர் மட்டுமே.எல்லோருக்கும் நல்ல உதவிகள் செய்தார்.விவசாயக்
கடன் பெற வங்கிக்குச் செல்லும் போதும், பத்திரப் பதிவு செய்யவும் அவரை அழைத்துச் செல்வார்கள்.எந்த பிரதி பலனையும்  ஏற்க மாட்டார். சுந்தரி ஒரு தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது உனக்கு நல்ல அரசு வேலை கிடைக்கும் என்று உறுதியாகச் சொன்னார்.அவர் சொன்னது போலவே நடந்து விட்டது.உதவி என்று கேட்டவர்களுக்கு தயங்காமல் உதவுவார்.காலை பத்து மணிக்கு இரண்டு கைகளிலும் கனத்த படைகளுடன் வந்து சேர்ந்தார்
தாத்தா என்று பேரனும், பேத்தியும் ஓடி காலைக் கட்டிக் கொண்டனர்.ஒரு பையில் அரிசி இருந்தது.நம் வயலில் விளைந்தது என்று கூறினார்.இன்னோர் பையில் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் இருந்தன.இனிமேல் இப்படி கனத்தை சுமந்து கொண்டு வரவேண்டாம்.நாங்கள் வரும் போது எடுத்துக் கொண்டு வருகிறோம் என்றார் நடராஜன். நான் பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.இன்று புரட்டாசி சனிக்கிழமை என்று பெரியவர் கூறினார்.உங்களுக்காக சமையல் செய்து விட்டேன்.சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று கூறி உட்கார வைத்தாள்.பெரியவர் சரிம்மா என்று அமர்ந்தார்.சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது வெளியே வெங்கட் ராமா ! கோவிந்தா! என குரல் கேட்டது.யாசகம் கேட்டவருக்கு அரிசி போட நினைத்த சுந்தரி பையில் இருந்த அரிசியை எடுத்தாள்.பெரியவர் அதை எடுக்காதே.வீட்டில் வாங்கி வைத்திருக்கும் அரிசியைப் போடு என்றார்.சுந்தரிக்கு என்னவோ போலாகிவிட்டது. வாங்கி வைத்திருந்த அரிசியை போட்டு விட்டு வந்தாள். இந்த வருடம் நெற்பயிருக்கு குலை நோய் வந்து விட்டது.ஏகப்பட்ட மருந்து தெளித்து விளைந்திருக்கிறது .           ‌ ‌   ‌‌எனவே தான் நல்ல அரிசியை போடச் சொன்னேன் என்று கூறிய பெரியவர் சுந்தரியின் மனத்தில் உயர்ந்து நின்றார்.       
                  
             

No comments:

Post a Comment