மதுரைக்குத் துவரம் பருப்பை ஏற்றிச் சென்ற முத்துலாபுரம் வியாபாரியிடம் பேசி சிறிது பணமும் கொடுத்து மாட்டுவண்டியில் பயணம் செய்தான். களைப்பு தெரியாமல் இருக்க வண்டிக்காரர் பாட ஆரம்பித்தார்.
"வண்டி !வண்டி!மாட்டு வண்டி. மருதைக்குப் போகும் வண்டி
ஜல்ஜல் என்று சாலையிலே
சடுதியாக ஓடும் வண்டி"
வைத்தியநாதன் அதைத் தொடர்ந்தான்.
"கருப்பசாமி நம்முடனே காவல் வர
கண்ணழகி மீனாளை கண்டு வர
கடகட என்று பறக்கும் வண்டி". வண்டிக்காரர் கேலியாக " யாரப்பா அந்த மீனாள்? எனக் கேட்டார்." "மதுரையில் அருள் பாலிக்கும் மீனாட்சி அம்மனைப் பாடினேன்" என பதில் கூறினான்.
கிராமத்தில் இருந்த ஒன்று விட்ட அத்தை கொடுத்த புளிச்சாதமும்., எலுமிச்சம் சாதமும் இரண்டு நாட்களுக்கு இருந்தன. மூன்றாவது நாள் மதுரைக்கு வந்து சேர்ந்தார்கள். வைத்திய நாதனுக்கு வைகை ஆற்றைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்கவில்லை.ஆசை தீர மூழ்கிக் குளித்தான். மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களைப் பார்த்து பயபக்தியுடன் வணங்கினான்.ஞாயிற்றுக் கிழமை சந்தைக்கு அடுத்த தெருவில் இருந்த மாமாவின் வீட்டிற்குச் சென்றான்.. மாமாவும், அத்தையும் வரவேற்றனர். அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் இருந்தாள்.புதிய ஆளைப் பார்த்ததும் அம்மாவின் பின் ஒளிந்து கொண்டாள்.அடுத்த நாளே மாமாவுடன் வேலை தேடிக் கிளம்பினான்.ஒரு பல சரக்குக் கடையில் வேலை கிடைத்தது. அவனது சுறுசுறுப்பும், கலகலப்பானபேச்சும்,முதலாளிக்கும்,
வாடிக்கையாளர்களுக்கும் பிடித்து விட்டது.குறைந்த அளவு சம்பளம் தான்.சம்பளப் பணத்தை வாங்க மாமா மறுத்து விட்டார்.எனவே அவ்வப்போது பருப்பு, பலசரக்கு போன்ற பொருட்களை வாங்கிக் கொடுத்தான்.சிறிது பணம் சேர்ந்ததும் அக்காவையும்,அவள் குழந்தைகளையும் பார்த்து விட்டு வந்தான்.இரண்டு ஆண்டுகள் ஓடின.ஒரு நாள் சந்தையில் ஆங்கிலேயர் முகாமிட்டு இருந்தனர். வெளியே நிறைய இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது ராணுவத்திற்கு ஆள் சேர்க்கிறார்கள் எனத் தெரிந்தது.மாமா வேலை பார்க்கும் கடைக்கு விரைந்தான். தான் ராணுவத்தில் சேர விரும்புவதாகக் கூற மாமாவிற்குக் கோபம் வந்தது."ஆங்கிலேயருக்கு அடிமை வேலை செய்யப் போகிறாயா? உன் அண்ணன் கல்யாணம் கூட வேண்டாம் என்று விடுதலைக்காக தேசபக்தர்களோடு அலைந்து கொண்டிருக்கிறான்.நீ ராணுவத்தில் சேர்ந்து அவர்களுக்காக உயிரை விடப் போகிறாயா?"என்று சத்தம் போட்டார்."மாமா,காக்கிச் சட்டையும்,பூட்ஸும் மாட்டிக் கொள்ளலாம்.வேறுவேறு ஊர்களுக்குப் போகலாம்.தஸ்புஸ் என்று ஆங்கிலத்தில் பேசலாம். இப்போதெல்லாம் அவர்கள் யாரோடும் சண்டை போடுவது இல்லை. ஆறிலும் சாவு,நூறிலும் சாவு.தயவு செய்து எனக்கு அனுமதி கொடுங்கள்." என்று கெஞ்சினான்.கடைசியில் மாமா சம்மதம் தெரிவித்தார்.அத்தை கண்ணீர் விட்டாள்.காடுமேடுகளில் சுற்றியதும்,வயலில் மழையிலும் வெயிலிலும் பாடு பட்டதும் உடலுக்கு உரமேற்றியிருந்தது.நேர் காணலில் எல்லா உடற் சோதனைகளிலும் தகுதி பெற்றான்.அவனைத் தேர்வு செய்து விட்டார்கள்.அடுத்த வாரமே மதராஸ் செல்ல வேண்டும். அத்தை, மாமாவின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டு வைத்திய நாதன் கிளம்பினான்.தேர்வு செய்யப் பட்ட பத்து பேர் ஏற ராணுவ ட்ரக் மதுரையில் இருந்து கிளம்பியது. வைப்பாற்றின் கரையில் கீழ்நாட்டுக் குறிச்சி என்ற குக்கிராமத்தில் பிறந்த வைத்திய நாதன் மதராஸ் பட்டினத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டான்.அதையும் தாண்டி நீண்ட நெடும் பயணம் காத்துக் கொண்டு இருந்தததை அப்போது அவன் அறியவில்லை.
தொடரும்.
No comments:
Post a Comment