Sunday, October 18, 2026

கிராமத்து நினைவுகள் பாகம் 1

என்னுடைய அப்பாவின் தாயார் லெட்சுமி அம்மாள்.அவர்களது பூர்வீக கிராமம் கீழ்நாட்டுக்குறிச்சி.அது வைப்பாற்றங்கரையில் அமைந்துள்ள
குக்கிராமம் ஆகும்.ஆற்றங்கரையில் அவர்களுக்கு சொந்தமான நிறைய பனைமரங்களும், ஒரு புளிய மரமும் இருந்தன.எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து நானும்,என் தங்கைகளும் கோடை விடுமுறையில் அங்கு சென்று விடுவோம்.ஆச்சிக்கு சொந்தமான ஓட்டு வீடும் அங்கிருந்தது.  
         சமையல் செய்யத் தேவையான சில பாத்திரங்களும் இருந்தன. கீழ்நாட்டுக்குறிச்சிக்குச் செல்ல அருப்புக்கோட்டையில் இருந்து கோவில் பட்டி செல்லும் வழியில் தாப்பாத்தி என்ற ஊரில் இறங்கி அரைமணி நேரம் வயல் வெளிகளுக்கு நடுவில் நடந்து
செல்ல வேண்டும்.அல்லது முத்துலாபுரம் செல்லும் பேருந்தில் ஏறி முத்துலாபுரத்தில் இறங்கி  வைப்பாற்றுக்குள் நடந்து சென்று மறுகரையில் உள்ள கீழ்நாட்டுக்குறிச்சிக்கு சென்று விடலாம்.
                 பனை மரங்களை குத்தகைக்கு விட்டிருந்தார்கள்.ஓராண்டுக்கு இத்தனை படி பதநீர், இத்தனை வட்டுக் கருப்பட்டிகள்  எனப் பேசி இருப்பார்கள்.நாங்கள் கோடை விடுமுறைக்கு செல்லும்போது அவை கிடைத்து விடும்.காலை எழுந்த உடன் ஆற்றுக்குச் சென்றுவிடுவோம்.குடி நீருக்கும் பிறதேவைகளுக்கும் ஊற்று நீரை முகர்ந்து வரவேண்டும். எனவே ஆச்சி பெரிய குடத்துடனும்.நாங்கள் சிறிய குடங்களுடனும் செல்வோம்.கோடையிலும் ஆற்றில் குளிக்க துவைக்க போதுமான நீர் ஓடிக் கொண்டிருக்கும். குளித்து துவைத்து.ஊற்றில் நீரை எடுத்துக் கொண்டு கரையில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபட்டு விட்டு பனந்தோப்புக்குச் சென்றுவிடுவோம்.
பனைமரங்களின் சலசலப்பைக்கேட்டுக் கொண்டே அங்கு அமர்ந்துவிடுவோம்.குத்தகைக்கு எடுத்தவர் பனை ஓலையால் செய்யப் பட்ட கோப்பையில் பதநீரை ஊற்றித் தருவார்.பனை மட்டையில் குடித்த அந்தப் பதநீரின்  ருசி இன்றும் என் நினைவில் நிற்கிறது. பதநீரைக் காய்ச்சி  கருப்பட்டி செய்வதையும் சில நேரங்களில் பார்த்திருக்கிறேன்.  
              எங்களுடைய வீட்டுக்கு நேரே இருந்த வீட்டை கரையாளப் பிள்ளை வீடு என்று சொல்வார்கள்.அவர்கள் வீட்டில் என்னை விட வயதில் மூத்த குழந்தைவேல் அண்ணனும்,அவரது இரு சகோதரிகளும் இருந்தனர்.லெட்சுமி,சங்கரி என்பது அவர்கள் பெயர்கள். எங்கள் தெருவில் அனைவருமே சைவர்கள்   தான்.எங்களது அடுத்த வீட்டில் ஜோதிடம் கூறும் ஐயர் தாத்தா இருந்தார்.அவரைத் தேடி பல ஊர்களில் 
இருந்தும் வருவார்கள்.அவரது மகள் பேபி அத்தை உடற்குறைபாடு உடையவர்கள்.எனவே தாத்தாவின் மகன் வழிப்பேரன் ரமேஷ் அத்தைக்குத் துணையாக  இருந்தான்.என்னை விடச்சிறியவன். காளியம்மாள் என்ற என் வயதை ஒத்த சிநேகிதியும் கிடைத்தாள்.மாலை இருள்
கவியத் தொடங்கியவுடன் தெருவில்  கூடி விடுவோம். நொண்டி ஆட்டம்,கல்லா  மண்ணா? ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூத்ததாம் என பல விளையாட்டுக்கள்  விளையாடுவோம்.சிறுவர்கள் சடுகுடு விளையாட்டைப் பாடிக்கொண்டே விளையாடுவார்கள்."நான் தான் வர்ரேன்டா.நல்லமுத்து பேரன்டா.தங்கப் பிரம்பெடுத்து தாவி ஓடி வர்ரேண்டா.வைரப் பிரம்பெடுத்து விளையாட வர்ரேண்டா"என்னும் பாடலை இன்றும் நினைக்கிறேன்.சொட்டாங்கல் விளையாடும் போதும் பாட்டுப் பாடுவார்கள்.அந்தப் பாடல் நினைவில் இல்லை.
                   தொடரும்.
 




No comments:

Post a Comment