Monday, October 19, 2026

கிராமத்து நினைவுகள் பாகம் -2

 கீழ்நாட்டுக் குறிச்சி வைப்பாற்றங்கரையில் தான் இருந்தது ஆனால் பெரிய மணல் மேட்டைத் தாண்டி அமைந்திருந்தால் ஆற்று நீரை கண்மாய்க்குக் கொண்டு வர இயவில்லை.எனவே வானம் பார்த்த பூமியாக இருந்தது. பனை மரங்களை வைத்திருந்தவர்களுக்கு அதில் இருந்து கோடை காலத்தில் வருமானம் வந்தது.மீதமுள்ளவர்கள் கருவேல  மரங்களை வெட்டி காயவைத்து கரிமூட்டம் போடுவார்கள்.கரி மூட்டைகளை விற்று வாழ்ந்து வந்தார்கள். கிணறு வைத்திருந்தவர்கள் ஏதோ பெயருக்கு விவசாயம் செய்து குறைவான வருமானமே பெற்றார்கள்.                    டவுனில் இருந்து பிள்ளைகள் வந்திருக்கிறார்கள் என்று அங்குள்ள
ஆச்சிகள் அனைவரும் பார்க்க வருவார்கள்.அவர்கள் வீட்டிற்கு  விருந்திற்கு அழைப்பார்கள்.தவிர்க்க முடியாமல் ஆச்சி அவர்கள் வீட்டில் ஒருநேரம் உணவு உண்ண அனுப்புவார்கள்.எங்களைப் பார்த்ததும்  பாயை விரித்து அமர வைப்பார்கள். தரையில் உட்கார விட மாட்டார்கள். ராமலெட்சுமி என்று ஒரு சிறுமி இருந்தாள்.அவர்கள் வீட்டில் சாப்பிட்டபோது பச்சடிக் குழம்பு பறிமாறினார்கள்.வெண்டைக்காயில் புளி   சேர்த்து சரியான அளவு உப்பு காரத்துடன்  அருமையாக இருந்தது. தொடுகறி வைக்கும் பழக்கம் இல்லை.அதற்கு வசதி வாய்ப்பு இல்லை. பச்சை மொச்சைப் பயிற்றுக் குழம்புடன் இன்னொரு வீட்டில் சாதம் சாப்பிட்டோம்.மற்றோர் வீட்டில் பதநீரில்  செய்த சாதம் தந்தார்கள்.சர்க்கரைப் பொங்கல் போல் இனித்தது.எதிர் வீட்டில் வைக்கும் கம்மங்கூழுக்கும், புளிமிளகாய்க்கும் அடிமையாகிப் போனோம்.அவர்களுடன்  அமர்ந்து உண்ட காலத்தை மறக்க இயலாது.
   எங்கள் புளியமரம் அந்த ஊரின் தொடக்கப் பள்ளியின் எதிரில் இருந்தது.குழந்தைகள்  கல்லால் அடித்து புளியம் பழங்களை எடுத்துச் சாப்பிடுவார்கள்.மீதமுள்ள பழங்களை ஆச்சி ஆள் வைத்துப்  பறிப்பார்கள்.பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியோடு தோட்டை உடைத்து கொட்டையை நீக்குவோம். மதுரைக்கு கொண்டுவர தயாராக்கி விடுவோம்.
                  ஒரு வருடம் புளியம் பழங்களை வீட்டிற்குள் போட்டுவிட்டு ஆச்சி அதன் மேல் கயிற்றுக்கட்டிலை போட்டு படுத்து விட்டார்கள்.  நாங்கள் மூன்று பேர் கீழே படுத்திருந்தோம் நாங்கள் காலையில் கண்விழித்தபோது எதிர் வீட்டில் இருந்தோம்.ஆச்சி ஓடி வந்தார்கள். எந்த சாமி புண்ணியமோ உங்களுக்கு ஆபத்து நேரவில்லை என்று கூறி கண் கலங்கினார்கள்.இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது கட்டிலுக்கு அடியில் சரசர என சத்தம் கேட்டிருக்கிறது.மின்சார வசதி இல்லாததால் லாந்தர் விளக்கை  இலேசான தீபத்துடன் வைத்திருந்தார்கள்.அதை உயர்த்தி கட்டிலுக்கு அடியில் பார்க்க நாகம் ஒன்று ஊர்ந்து சென்றது.கால்களின் சத்தம் கேட்ட அது அருகில் இருந்த சாக்குகளுக்கு அடியில் பதுங்கிக் கொண்டது.கதவைத் திறந்து குழந்தைவேல் என ஒரு குரல் கொடுத்ததுமே அவர் ஓடி வந்து விட்டார்.அவரை நிற்க வைத்து விட்டு ஆச்சி எங்கள் மூவரையும் தூக்கிச் சென்று எதிர் வீட்டில் படுக்க வைத்து விட்டு அதை அடித்து விட்டார்கள்.  அதை அண்ணன் புதைத்துவிட்டு இடத்தை அடையாளப்படுத்த  கல் ஒன்றை வைத்து விட்டு வந்தாராம்.அடுத்த நாள் ஆச்சி அங்கு போய் பாலூற்றி வந்தார்கள்.   மற்றோர் நிகழ்வை அடுத்த பகுதியில்  பார்க்கலாம்.
                   நினைவுகள் தொட.ரும்.


Sunday, October 18, 2026

கிராமத்து நினைவுகள் பாகம் 1

என்னுடைய அப்பாவின் தாயார் லெட்சுமி அம்மாள்.அவர்களது பூர்வீக கிராமம் கீழ்நாட்டுக்குறிச்சி.அது வைப்பாற்றங்கரையில் அமைந்துள்ள
குக்கிராமம் ஆகும்.ஆற்றங்கரையில் அவர்களுக்கு சொந்தமான நிறைய பனைமரங்களும், ஒரு புளிய மரமும் இருந்தன.எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து நானும்,என் தங்கைகளும் கோடை விடுமுறையில் அங்கு சென்று விடுவோம்.ஆச்சிக்கு சொந்தமான ஓட்டு வீடும் அங்கிருந்தது.  
         சமையல் செய்யத் தேவையான சில பாத்திரங்களும் இருந்தன. கீழ்நாட்டுக்குறிச்சிக்குச் செல்ல அருப்புக்கோட்டையில் இருந்து கோவில் பட்டி செல்லும் வழியில் தாப்பாத்தி என்ற ஊரில் இறங்கி அரைமணி நேரம் வயல் வெளிகளுக்கு நடுவில் நடந்து
செல்ல வேண்டும்.அல்லது முத்துலாபுரம் செல்லும் பேருந்தில் ஏறி முத்துலாபுரத்தில் இறங்கி  வைப்பாற்றுக்குள் நடந்து சென்று மறுகரையில் உள்ள கீழ்நாட்டுக்குறிச்சிக்கு சென்று விடலாம்.
                 பனை மரங்களை குத்தகைக்கு விட்டிருந்தார்கள்.ஓராண்டுக்கு இத்தனை படி பதநீர், இத்தனை வட்டுக் கருப்பட்டிகள்  எனப் பேசி இருப்பார்கள்.நாங்கள் கோடை விடுமுறைக்கு செல்லும்போது அவை கிடைத்து விடும்.காலை எழுந்த உடன் ஆற்றுக்குச் சென்றுவிடுவோம்.குடி நீருக்கும் பிறதேவைகளுக்கும் ஊற்று நீரை முகர்ந்து வரவேண்டும். எனவே ஆச்சி பெரிய குடத்துடனும்.நாங்கள் சிறிய குடங்களுடனும் செல்வோம்.கோடையிலும் ஆற்றில் குளிக்க துவைக்க போதுமான நீர் ஓடிக் கொண்டிருக்கும். குளித்து துவைத்து.ஊற்றில் நீரை எடுத்துக் கொண்டு கரையில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபட்டு விட்டு பனந்தோப்புக்குச் சென்றுவிடுவோம்.
பனைமரங்களின் சலசலப்பைக்கேட்டுக் கொண்டே அங்கு அமர்ந்துவிடுவோம்.குத்தகைக்கு எடுத்தவர் பனை ஓலையால் செய்யப் பட்ட கோப்பையில் பதநீரை ஊற்றித் தருவார்.பனை மட்டையில் குடித்த அந்தப் பதநீரின்  ருசி இன்றும் என் நினைவில் நிற்கிறது. பதநீரைக் காய்ச்சி  கருப்பட்டி செய்வதையும் சில நேரங்களில் பார்த்திருக்கிறேன்.  
              எங்களுடைய வீட்டுக்கு நேரே இருந்த வீட்டை கரையாளப் பிள்ளை வீடு என்று சொல்வார்கள்.அவர்கள் வீட்டில் என்னை விட வயதில் மூத்த குழந்தைவேல் அண்ணனும்,அவரது இரு சகோதரிகளும் இருந்தனர்.லெட்சுமி,சங்கரி என்பது அவர்கள் பெயர்கள். எங்கள் தெருவில் அனைவருமே சைவர்கள்   தான்.எங்களது அடுத்த வீட்டில் ஜோதிடம் கூறும் ஐயர் தாத்தா இருந்தார்.அவரைத் தேடி பல ஊர்களில் 
இருந்தும் வருவார்கள்.அவரது மகள் பேபி அத்தை உடற்குறைபாடு உடையவர்கள்.எனவே தாத்தாவின் மகன் வழிப்பேரன் ரமேஷ் அத்தைக்குத் துணையாக  இருந்தான்.என்னை விடச்சிறியவன். காளியம்மாள் என்ற என் வயதை ஒத்த சிநேகிதியும் கிடைத்தாள்.மாலை இருள்
கவியத் தொடங்கியவுடன் தெருவில்  கூடி விடுவோம். நொண்டி ஆட்டம்,கல்லா  மண்ணா? ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூத்ததாம் என பல விளையாட்டுக்கள்  விளையாடுவோம்.சிறுவர்கள் சடுகுடு விளையாட்டைப் பாடிக்கொண்டே விளையாடுவார்கள்."நான் தான் வர்ரேன்டா.நல்லமுத்து பேரன்டா.தங்கப் பிரம்பெடுத்து தாவி ஓடி வர்ரேண்டா.வைரப் பிரம்பெடுத்து விளையாட வர்ரேண்டா"என்னும் பாடலை இன்றும் நினைக்கிறேன்.சொட்டாங்கல் விளையாடும் போதும் பாட்டுப் பாடுவார்கள்.அந்தப் பாடல் நினைவில் இல்லை.
                   தொடரும்.