வருவது வரட்டும் என்ற மனஉறுதியுடன் செயல்பட்டனர். வைத்தியநாதன் குண்டு வீீசுவதற்காக தாழ்ந்து பறந்த விமானத்தைக் குறிவைத்து குழலை நகர்த்தினான். அன்று காற்று வீசிய திசையை அறிந்து அதன் போக்கிலேயே பீரங்கியை இயக்கினான்.குண்டு சரியாக இலக்கை அடைந்தது.விமானம் சுட்டு வீீழ்த்தப் பட்டது.மகிழ்ச்சி அடைந்த வீரர்கள் மற்ற பீரங்கிகளையும் அதைப் போலவே இயக்கினர். தாக்குதலைத் தீவிரப் படுத்தினர். வானில் பறந்த இரண்டு விமானங்கள் திரும்பி விட்டன. வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கிக் கொண்டனர். கை தட்டி மகிழ்ந்தனர்.மேஜர், " சாதித்து விட்டாய் வைத்தியநாதா! நல்ல முன் மாதிரியாய் செயல்பட்டாய்". என்று கூறி கை குலுக்கினார்."அடிபட்ட அவர்கள் நம்மை சும்மா விட மாட்டார்கள்.நாளை மிக அதிகமான விமானங்களை எதிர்பார்க்கலாம்." என்றார். மேஜர்கள் அனைவரும் தங்களது படைகளைப் பிரித்து வெவ்வேறு பகுதிகளுக்கு வழிநடத்தும்படி நமது தளபதி தில்லான் கட்டளை இட்டுள்ளார். நாளை நாம் ஆயிரக்கணக்கில் ஒன்றாகச் செல்லப் போவதில்லை." என்று கூறிச் சென்றார்.மறுநாள் பிரேம் ஷாகல், ஷா நவாஸ் கான்,குரு பக்ஷ் தில்லான் மூவரும் ஆங்காங்கே வீரர்களிடம் வீரவுரை ஆற்றி ஊக்கப் படுத்தினர் .பின்னர் பிரிந்து வேறுவேறு பகுதிகளுக்குச் சென்றனர். "நம் போன்ற வீரர்களை குண்டு வீசித் தாக்கினால் பரவாயில்லை. ஜப்பானில் அணுகுண்டை வீசி ஒன்றும் அறியாத மக்களைக் கொன்ற அமெரிக்காவை நினைத்தால் எனக்கு வயிறு பற்றி எரிகிறது." என்றான் வைத்திய நாதன். "இப்பொழுது மட்டும் ஆங்கில வீரர்கள் வரட்டும்.சுட்டுக் கொன்று விடுவோம்". என்றான் மருத வாணன்."ஆமாம். அவர்களை விடக்கூடாது."என்று ஒரு வீரன் கூறினான்.விமானம் வீழ்த்தப் பட்டதை அறிந்த ஆங்கிலப் படை ஆக்ரோஷமாக பதிலடிகள் கொடுக்க ஆரம்பித்தது.உதவிய ஜப்பானும் ஜெர்மனும் ஏற்கனவே சரணடைந்து விட்டது. எனவே இந்திய தேசிய ராணுவம் கையறுநிலையை அடைந்தது. போர் ஆரம்பித்ததில் இருந்து கிட்டத்தட்ட 130 கி.மீ.தூரம் நடந்தே வந்திருந்த படையினர் சோர்வு அடைந்து விட்டனர். மருதவாணனிடம் வைத்தியநாதன், "மருதா !இன்னும் இரண்டு,மூன்று நாட்களுக்குத் தான் உணவுப் பொருட்கள் உள்ளது". என்றான். விவரம் அறிந்த மற்றவர்கள், "பயப்படவேண்டாம்.காட்டில் கிடைக்கும் காய்கறிகள்,பழங்களைப் பறித்து உண்போம் "என்றார்கள். ஒருவன்,"ஒரு நேரம் மட்டும் சமைக்கலாம்".என்றான்.அனைவரும்ஒத்துக் கொண்டனர். கையெறி குண்டுகள்,துப்பாக்கி குண்டுகள் அனைத்தும் காலி ஆகிவிட்டன. தற்காத்துக் கொள்ள துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த கத்திகள் மட்டுமே இருந்தன. நேசப்படையின் விமானங்கள் விடாமல் துரத்தித் துரத்தி குண்டுகளை வீசின.கண் எதிரே கொத்துக் கொத்தாக வீரர்கள் மடிந்தனர்.காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் விழுந்து கிடந்தனர். கை,கால்களை இழந்தவர்கள் மன உறுதியை இழக்கவில்லை. "ஜய்ஹிந்த்" எனக் கூறி கையசைத்து பிறரை வழியனுப்பினர். செஞ்சிலுவைச் சங்கம் உதவ வரும் போது எத்தனை பேர் பிழைத்திருப்பார்கள் எனத் தெரியவில்லையே என்று கனத்த மனதுடன் வைத்தியநாதனும், மருதவாணனும் நடந்தனர். நம்மிடம் பயிற்சி பெற்று நம்மையே எதிர்த்துப் போராடுகிறார்களே என்று ஆங்கிலேயர்கள்கோபமடைந்தனர்.தாக்குதல் மென்மேலும் தீவிரமானது.நேசப்படை அவர்களைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தது.நான்கு புறமும் அவர்களின் படையைச் சுற்றி வளைத்தது.வேறு வழியில்லாமல் மீதி இருந்த வீரர்கள் சரண் அடைந்தனர்.ஆங்கிலேயர்கள் அவர்களை பர்மாவிற்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். இந்திய விடுதலைக்காகப் போரிட்ட அந்த மாவீரர்கள் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்தனர்.
தொடரும்.
No comments:
Post a Comment