Saturday, June 5, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் . தொடர் 2

சாய் பாபாவின் திருவருளால் முன்னேற்பாடுகள் மடமடவென நடந்தன.தலைமை ஆசிரியையும், அவரது வாழ்க்கைத் துணைவரும் சேர்ந்து பயணத்திற்கு பேருந்துகளை  ஏற்பாடு செய்தனர். 
விமான டிக்கெட் முன்பதிவு செய்யப் பட்டது.என்னைப் போன்று சிலர் வானில் தான் விமானத்தைப் பார்த்திருக்கிறோம். பக்கத்தில் கூடப் பார்த்ததில்லை.எனவே ஆர்வத்துடன் காத்திருந்தோம்.அன்று முதல், பயணத்தைப் பற்றி மாலைப் பொழுதில் பேசிக்கொண்டே இருந்தோம். தலைமை ஆசிரியை சிங்கப்பூருக்கு  பல முறைகளும், அமெரிக்காவிற்கு  ஒரு முறை தனியாகவும் சென்று வந்தவர். "அம்மா !விமானம் ரன்வேயில் ஓடி சர் என்று மேலே ஏறும் போது எப்படி    இருக்கும் ?"என நான் கேட்டேன் "நாம் ஊஞ்சலில்  ஆடி உயரே செல்லும் போது ஏற்படும் அதே உணர்வு தான் இருக்கும்." என்றார்  தலைமை ஆசிரியை. "ஏதோ ஜெட் லேக் என்று சொல்வார்களே. அது ஏற்படுமா? என்று ஒரு ஆசிரியை கேட்டார்.  "உள்நாட்டுப்பயணம் செல்லும்போது அதெல்லாம் ஏற்படாது. ஆனால் அவ்வப்போது காது அடைக்கும். அப்போது வாயைத் திறந்து மூடினால் சரியாகி விடும்" என்றார். "உங்களது லக்கேஜ்  பேக்குகள் பளிச் எனத் தெரியும்படி கலர் ரிப்பனைக் கட்டுங்கள். ஸ்டிக்கரும் ஒட்டுங்கள். கன்வேயர் பெல்டில்  இருந்து அப்போதுதான் டக்கென்று  எடுக்க முடியும்." என்றும் கைப்பைகளில் எவற்றை வைத்துக் கொள்ளலாம் என்பதையும்  தலைமை ஆசிரியை அறிவுறுத்தினார்.  மொத்தத்தில் விமானப் பயணம் பற்றிய அரிச்சுவடியை அறிந்து கொண்டோம்.                               எதிர்பார்த்த அந்த நாளும்  வந்தது. 2017 பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று பள்ளி முடிந்ததும் சிட்டுக்களாக வீடுகளை நோக்கிப் பறந்தோம். மூட்டை முடிச்சுகளோடு மாலை  7 மணியளவில் பள்ளியில் ஒன்று கூடினோம்.மெயின் ஹாலில் பிரார்த்தனை செய்தோம்."அன்பாக எனையும் கண் பார் அம்பிகா" என்று அன்னை மீனாட்சியைப் பாடி அவள் அருளை வேண்டினோம்.வாசலில் ஸ்லீப்பர் பேருந்து தயாராக இருந்தது.                            ஆசிரியர்களாகிய  நாங்கள் குழந்தைகள் போல் மாறிவிட்டோம். உற்சாகமாக பேருந்தில் ஏறினோம். சிறு பிரார்த்தனைக்குப் பின் சென்னையை நோக்கி பயணம் தொடங்கியது. மதுரை நகரைக் கடந்த உடன் பாடல்கள் பாட ஆரம்பித்தோம்.சில பக்திப் பாடல்களுக்குப் பிறகு திரைப்படப் பாடல்களைப் பாடத் தொடங்கினோம். அவரவர்களின் மனம் கவர்ந்த பாடல்களைப் பாடி அசத்தினர்.அடுத்ததாக ஆடலும் களை கட்டியது. பள்ளியில்  கலை நிகழ்ச்சிகளுக்காகவும், போட்டிகளுக்காகவும் மாணவ, மாணவிகளை ஆட்டுவித்த , ஆட்டிப் படைத்த ஆசிரியைகள்  ஆடத் தெரியாமல் இருப்பார்களா? ஆடத் தொடங்கினர். நான்  கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்தில் ஏறி இருந்ததால் வேடிக்கை மட்டுமே  பார்த்தேன். ஏற இறங்க சங்கடமாக இருந்தது. ஆடும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டேனே எனப்  பின்னாளில் நினைத்தேன். தில்லானா மோகனாம்பாள் பாடல்கள் முதல் புதிய  திரைப் பாடல்கள் வரை பல  பாடல்களுக்கு ஆடினர்.இரவு உணவை நாங்களே  எடுத்துச் சென்று இருந்தோம். வழியில் ஓரிடத்தில் பேருந்தை நிறுத்தி அதனை ‌உண்டோம். பயணம்  தொடர்ந்தது.யாருமே தூங்கவில்லை.  பேருந்து சென்னை விமான நிலையத்தை அடைந்தது.                       தொடரும்.

No comments:

Post a Comment