ஆச்சிகள் அனைவரும் பார்க்க வருவார்கள்.அவர்கள் வீட்டிற்கு விருந்திற்கு அழைப்பார்கள்.தவிர்க்க முடியாமல் ஆச்சி அவர்கள் வீட்டில் ஒருநேரம் உணவு உண்ண அனுப்புவார்கள்.எங்களைப் பார்த்ததும் பாயை விரித்து அமர வைப்பார்கள். தரையில் உட்கார விட மாட்டார்கள். ராமலெட்சுமி என்று ஒரு சிறுமி இருந்தாள்.அவர்கள் வீட்டில் சாப்பிட்டபோது பச்சடிக் குழம்பு பறிமாறினார்கள்.வெண்டைக்காயில் புளி சேர்த்து சரியான அளவு உப்பு காரத்துடன் அருமையாக இருந்தது. தொடுகறி வைக்கும் பழக்கம் இல்லை.அதற்கு வசதி வாய்ப்பு இல்லை. பச்சை மொச்சைப் பயிற்றுக் குழம்புடன் இன்னொரு வீட்டில் சாதம் சாப்பிட்டோம்.மற்றோர் வீட்டில் பதநீரில் செய்த சாதம் தந்தார்கள்.சர்க்கரைப் பொங்கல் போல் இனித்தது.எதிர் வீட்டில் வைக்கும் கம்மங்கூழுக்கும், புளிமிளகாய்க்கும் அடிமையாகிப் போனோம்.அவர்களுடன் அமர்ந்து உண்ட காலத்தை மறக்க இயலாது.
எங்கள் புளியமரம் அந்த ஊரின் தொடக்கப் பள்ளியின் எதிரில் இருந்தது.குழந்தைகள் கல்லால் அடித்து புளியம் பழங்களை எடுத்துச் சாப்பிடுவார்கள்.மீதமுள்ள பழங்களை ஆச்சி ஆள் வைத்துப் பறிப்பார்கள்.பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியோடு தோட்டை உடைத்து கொட்டையை நீக்குவோம். மதுரைக்கு கொண்டுவர தயாராக்கி விடுவோம்.
ஒரு வருடம் புளியம் பழங்களை வீட்டிற்குள் போட்டுவிட்டு ஆச்சி அதன் மேல் கயிற்றுக்கட்டிலை போட்டு படுத்து விட்டார்கள். நாங்கள் மூன்று பேர் கீழே படுத்திருந்தோம் நாங்கள் காலையில் கண்விழித்தபோது எதிர் வீட்டில் இருந்தோம்.ஆச்சி ஓடி வந்தார்கள். எந்த சாமி புண்ணியமோ உங்களுக்கு ஆபத்து நேரவில்லை என்று கூறி கண் கலங்கினார்கள்.இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது கட்டிலுக்கு அடியில் சரசர என சத்தம் கேட்டிருக்கிறது.மின்சார வசதி இல்லாததால் லாந்தர் விளக்கை இலேசான தீபத்துடன் வைத்திருந்தார்கள்.அதை உயர்த்தி கட்டிலுக்கு அடியில் பார்க்க நாகம் ஒன்று ஊர்ந்து சென்றது.கால்களின் சத்தம் கேட்ட அது அருகில் இருந்த சாக்குகளுக்கு அடியில் பதுங்கிக் கொண்டது.கதவைத் திறந்து குழந்தைவேல் என ஒரு குரல் கொடுத்ததுமே அவர் ஓடி வந்து விட்டார்.அவரை நிற்க வைத்து விட்டு ஆச்சி எங்கள் மூவரையும் தூக்கிச் சென்று எதிர் வீட்டில் படுக்க வைத்து விட்டு அதை அடித்து விட்டார்கள். அதை அண்ணன் புதைத்துவிட்டு இடத்தை அடையாளப்படுத்த கல் ஒன்றை வைத்து விட்டு வந்தாராம்.அடுத்த நாள் ஆச்சி அங்கு போய் பாலூற்றி வந்தார்கள். மற்றோர் நிகழ்வை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நினைவுகள் தொட.ரும்.
No comments:
Post a Comment