விமானத்திற்குள் சென்று அவரவர் இருக்கைகளில் அமர்ந்தோம். முதல் விமானப் பயணம் என்பதால் படப்படப்பாக இருந்தது. வயிற்றுக்குள் பூச்சி பறந்தது. இனி எத்தனை முறை விமானப் பயணம் செய்தாலும் முதல் அனுபவம் மறக்காது.எல்லாக் கடவுள்களையும் நினைத்துக் கொண்டேன். விமானம் ஓடுபாதையில் தடதட என ஓடத் தொடங்கியது.சில நிமிடங்களில் சர் என்று மேலே ஏறியது. பின்னர் சீராகப் பறக்கத் தொடங்கியது.கீழே சென்னை மாநகரம் மின்விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டு இருந்தது.சில நிமிடங்களில் கருமையாக மாற்றிவிட்டது.கடலின் மேல் பறக்கிறோம் என்பது புரிந்தது.. சென்னைக்கும் மும்பைக்கும் இடையே நிலப்பரப்பு தானே உள்ளது.ஏன் கடலுக்கு மேலே பறக்கிறது? என நினைத்துக் கொண்டேன்.விமானத்தின் பணிப்பெண் வந்து வணங்கி விட்டு பேச ஆரம்பித்தாள்.விமானம் கடலில் விழ நேர்ந்தால் தலைக்கு மேலே இருக்கும் லைஃப் ஜாக்கெட்டை எப்படி எடுப்பது என்பதையும் பயன்படுத்த வேண்டிய முறையையும் செய்து காட்டி விளக்கினாள். வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றியது போல இருந்தது.இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின் மும்பைக்கு அருகில் வந்து விட்டதாக விமானி அறிவித்தார்.பொழுது புலர்ந்து விட்டது.கீழே அரபிக்கடல் காட்சி தந்தது.இந்திய வரைபடத்தில் மும்பையைக் குறிக்கச் சொல்லிக் கொடுக்கும் பொழுது "அரபிக்கடல் ஓரம் ஒரு அழகைக் கண்டேனே." எனப் பாடலைப் பாடி மாணவர்களின் கவனத்தை ஈர்த்து மும்பையின் அமைவிடத்தைக் கற்றுத் தருவோம்.இப்போது அரபிக் கடலையும் மும்பையையும் வானில் இருந்து காண்கிறோம்.மிக மகிழ்ந்தோம். விமானம் தரை இறங்கப் போவதாக விமானி அறிவித்தார். மனம் படபடவென அடித்தது.சிறிது சிறிதாக கீழே இறங்கி சக்கரங்கள் தடால் என்று தரையைத் தொட்டன.ஓடுபாதையில் ஓடி சில நிமிடங்களில் நின்றது. அப்பாடி! பத்திரமாக தரையில் இறங்கி விட்டோம்.கடவுளுக்கு நன்றி கூறி மும்பையில் கால் பதித்தோம். தொடரும்.
.
அருமை அருமை,தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteடீச்சர் தாமதத்திற்கு மன்னிக்கவும்.பயண கட்டுரை மிக மிக அருமை.இப்பொழுதுதான் பயணம் செய்வது போல் தோன்றுகிறது.இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வீட்டிலிருந்து உங்கள் பயணக் கட்டுரையை படிப்பதற்கு மனதிற்கு மிகவும் இதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.உங்கள் பயண கட்டுரை தொடர்ந்து பயணம் செய்யட்டும். வாழ்க வளமுடன்.
ReplyDeleteநன்றி.வாழ்க வளமுடன்.
ReplyDelete