4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு ஷீரடியில் இருந்து கிளம்பினோம்.வழியில் காலை உணவை முடித்துக் கொண்டோம். 10 மணிக்கு சிங்கணாப்பூரை அடைந்து விட்டோம்.இரண்டு பூஜைத் தட்டுக்களை வாங்கினோம். கடைக்காரரே சனீஸ்வர ஸ்லோகங்களைக் கூறி எங்களையும் கூறச் செய்தார்.உள்ளே பூஜை கிடையாது எனவும் கூறினார்.
சனீஸ்வரரைத் தரிசிக்க செல்லும் வழியில் இருந்த திரிசூலத்தில் இலையால் ஆன மாலையைப் போட்டோம்.இலையின் பெயர் தெரியவில்லை. தேங்காயை அதற்கென வைக்கப்பட்ட கூடையிலும்,பூக்களை ஒரு கூடையிலும் வைத்தோம். கருப்பு நிற பொம்மையையும், லாட வடிவில் இருந்த இரும்புத் தகடையும் கூடைகளில் போட்டோம்.விரும்பினால் தகடை வீட்டிற்கு எடுத்துச் சென்று தினந்தோறும் பூஜிக்கலாம் என்றார்கள். பகவானின் எதிரில் இருந்த பெரிய தட்டுக்களில் எண்ணெயை ஊற்றினோம். அந்த எண்ணெய் குழாய் மூலம்
எடுத்துச் செல்லப்பட்டு பகவானின் சிரசில் விழுகிறது.சனீஸ்வரரை அருகில் நின்று நன்கு தரிசித்தோம். ஃபோட்டோ எடுக்க
அனுமதி இல்லை.அருகில் அனுமானுக்கு சன்னதி உள்ளது. அவரையும் வழிபட்டோம். பிரசாதமாக விற்கப்பட்ட தேங்காய் பர்பியை வாங்கி உண்டோம்.மரங்களுடன் பரந்த காலி இடம் இருந்தது. இருக்கைகளும் போடப்பட்டிருந்தன.அதில் சிறிது நேரம் நாங்கள் அமர்ந்தோம். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பின்னர் கிளம்பினோம்.சாலையின் இருபுறமும் கரும்புத் தோட்டங்கள் இருந்தன. மாட்டுச் செக்கில் ஆட்டப்படும் கரும்புச்சாறு கடைகள் நிறைய இருந்தன. அமர நாற்காலிகளும், குழந்தைகள் விளைையாட ஊஞ்சல்களும் இருந்தன.பல வண்ண பலூன்கள் தொங்க விடப்பட்டிருந்தன.ஒரு கடையில் அமர்ந்து அன்று வெட்டப்பட்ட கரும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றைக் குடித்தோம்.மிக அருமையாக இருந்தது.அந்தக் கடைகள் அமைந்திருந்த கிராமத்தின் பெயர் சோனாய்.மதியம் ஒரு மணிக்கு ஷீீீரடிக்கு வந்து சேர்ந்தோம். அடுத்து சென்ற இடம் Sai theerth devotional theme park. இதுவே பெரியவர்,சிறுவர் அனைவரைையும் கவர்ந்த இடம்.
தொடரும்.
No comments:
Post a Comment