நியூசௌத்வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமான சிட்னியில் துறைமுகத்தின் அருகில் ஓப்ரா ஹவுஸ் அமைந்துள்ளது.ஐ.நா சபை இதை உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்து உள்ளது. பொறியியல் துறை படிக்காமலேயே நம் முன்னோர்கள் கட்டிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலையும்,தஞ்சைப் பெரிய கோவிலையும் பார்த்த நமக்கு இது சாதாாரணமாகவே காட்சி தருகிறது.ஓப்ரா ஹவுஸின் உள்ளே எல்லாப் பகுதிகளையும் பார்க்கவும் அவற்றைப் பற்றி அறியவும் விரும்பினோம்.எனவே guided walking செல்ல மைத்துநர் ஆன் லைனில் கட்டணம் கட்டி பதிவு செய்திருந்தார். 10 மணிக்கு நடை தொடங்கியது. வழிகாட்டி பேசுவதைக் கேட்க எங்களுக்குஇயர்ஃபோன் வழங்கப்பட்டது.அதை மாட்டிக் கொண்டு பின்தொடர்ந்தோம்.
ஓப்ரா ஹவுஸின் வடிவமைப்பு புதுமையாக உள்ளது. கோள உருண்டையில் இருந்து நேர்த்தியாகப் பிரிக்கப்பட்ட வடிவங்கள் மேற்கூரைகளாக அமைக்கப் பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய அரசாங்கம் பிரமாண்டமான கலை அரங்கம் ஒன்றை அமைக்க முடிவு செய்து சர்வதேச அளவில் பொறியியல் வல்லுநர்களுக்குப் போட்டி ஒன்றை அறிவித்தது. அதில் வந்த 232 வரைபடங்களில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோஆன் உட்ஜான் என்னும் பொறியியல் வல்லுநரின் திட்டம் 1957ல் தேர்வு செய்யப்பட்டது. அவரது தலைமையில் கட்டிடப்பணிகள் தொடங்கின.10,000 பணியாளர்கள் 14 ஆண்டுகள் வேலை செய்தனர்.பணி நிறைவு செய்யும் முன்பு அப்போதைய நியூசெளத் வேல்ஸ் முதன் மந்திரி நிதிச்சுமை அதிகமாகிக் கொண்டே போவதாக குற்றம் சாட்டினார். பொதுப் பணித் துறை அமைச்சரின் ஆதரவும் கிடைக்கவில்லை.எனவே 1966ல் உட்ஜான் மனம் நொந்து தலைமைப் பொறுப்பைத் துறந்து தன் நாட்டிற்குச் சென்று விட்டார். மேற்கூரைப் பணி நிறைவு பெற்றிருந்தது. அரங்கங்களும் ஓரளவு முடிக்கப் பட்டிருந்தன.பின்பு 3 பேர் கொண்ட வல்லுநர் குழு பணிகளைத் தொடர்ந்தது.1973ல் பணிகள் நிறைவு பெற்றன.இரண்டாம் எலிசபெத் ராணியார் ஓப்ரா ஹவுஸைத் திறந்து வைத்தார். திறப்புவிழாவிற்கு உட்ஜான் அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை கட்டிமுடிக்கப்பட்ட ஓப்ரா ஹவுஸைஅவர் பார்க்கவே இல்லை.2007 ஆம் ஆண்டு உட்ஜானால் வடிவமைக்கப் பட்ட ஓப்ரா ஹவுஸ் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப் பட்டது.அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற புகழ் கிடைத்தது. 2008ல் தனது 90ஆம் வயதில் மறைந்த அவர் குவையத் பாராளுமன்றக் கட்டிடத்தையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
THE CONCERT HALL
இதில் ஒலி, ஒளிக் கருவிகள் மிக அருமையாக அமைக்கப் பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 2679 பேர் அமரலாம்.பல பிரபல இசைக் குழுக்கள் இங்கு நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளன.Six pack body buildingஐ விரும்பும் இன்றைய இளைய தலைமுறை ஆண்களின் கனவுக் கண்ணனான அர்னால்ட் தனது டைட்டிலை இங்கு பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
THE FORECOURT
ஓப்ரா ஹவுஸின் முன்னால் உள்ள படிக்கட்டுக்களின் மேல்பகுதி மேடையாக அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப் பெரிய திறந்தவெளி அரங்கமாகத் திகழ்கிறது.1990ல் நெல்சன் மன்டேலா இங்கு உரையாற்றி உள்ளார்.THE JOAN SUTHATHERLAND THEATRE
இங்கு 1507 பேர் அமரலாம்.70 இசைக் கலைஞர்கள் உட்கார இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.திரைக்குப் பின் காட்சி இடம் பெறுவதைத் தவிர்த்து தரையின் கீழிருந்து தேவைப்படும் பின்புலக் காட்சி மேலே ஏற்றப்படுகிறது.ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
THE DRAMA THEATRE
544 பேர் அமரக்கூடிய வகையில் இந்த நாடக அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது.
THE PLAYHOUSE
398 பேர் அமரக்கூடிய இந்த இடத்தில் சிறுவர்,சிறுமியருக்கான கதை சொல்லும் நிகழ்வு நடைபெறுகிறது.
THE STUDIO
2 வயது முதலான சிறுவர், சிறுமியருக்கான நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக இது உள்ளது.சர்க்கஸ் நிகழ்ச்சிகள் கூட இங்கு நடைபெறுகின்றன.
UTZON ROOM
இந்த அறையின் உள்ளரங்கம் முழுவதும் உட்ஜானால் வடிவமைக்கப்பட்டு அவர் பொறுப்பில் இருந்த போதே முடிவும் பெற்றது.இதன் ஒரு புறம் தரை முதல் கூரை வரை முழுவதுமாக உள்ள கண்ணாடிச் சுவர் வழியே சிட்னி துறைமுகம் முதல் தாவரவியல் பூங்கா வரை பார்க்க முடியும். ஒரு சுவரில் அவர் இசை நுணுக்கங்களுடன் கூடிய ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
அவருடைய ஒப்புதலைப் பெற்றபின் இந்த அரங்கத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.இங்கு 200 பேர் அமரலாம்.
ஆறு அரங்குகளிலும் மொத்தமாக 5728 பேர் நிகழ்ச்சிகளைக் காணலாம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மாடிப்படிகளில் ஏறி இறங்கி முழுமையாகப் பார்த்து முடித்தோம்.மிக அருமையாக எல்லாத் தகவல்களையும் தந்த வழிகாட்டிக்கு நன்றி கூறி விடை பெற்றோம்.
தொடரும்
No comments:
Post a Comment