Thursday, January 16, 2020

கங்காரு தேசம் 25

AUSTRALIAN NATIONAL MARITIME MUSEUM


சிட்னி நகரத்தின் துறைமுகத்தின் பெயர் டார்லிங் ஹார்பர். அங்குதான் மியூசியம் உள்ளது.அலுவலகத்தில்  எங்களிடம் நாங்கள்  செல்ல வேண்டிய பகுதிகள்,பார்க்க அனுமதிக்கப்படும் கப்பல்கள்,மிக முக்கியமான கப்பலைப் பார்க்க வேண்டிய நேரம் ஆகியவற்றை ஒரு கையேட்டில் குறித்துத் தந்தார்கள். அது மட்டுமின்றி எங்கள் வலதுகை மணிக்கட்டில் ஒரு ஸீல் வைத்தார்கள். அதை ஆங்காங்கே காட்ட வேண்டியிருந்தது.
                    முற்காலத்தில் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் எலும்புக் கூடுகள் பார்வைக்கு ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்தன.பெரியமீனின் வயிற்றுப்பகுதியில் அது சாப்பிட்ட சிறிய மீனின்  எலும்புக் கூடும் இருந்தது.
மோர்ஸ் குறியீட்டுக் கருவியும், ஆங்கில எழுத்துக்களும் அவற்றின் குறியீடுகளும் அடங்கிய சார்ட்டும் வைக்கப்பட்டுள்ளது.நாம் அதில் செய்தியை அடித்துப் பார்க்கலாம்.பெரிய நங்கூரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.  
3D CINEMA 
அங்கு அமைந்திருந்த தியேட்டரில் Wonders of arctic என்ற 3D படம் பார்த்தோம். 3D கண்ணாடி அணிந்து பார்க்கும் போது ஆர்க்டிக் பகுதிக்கு நேரில் சென்றது போல் இருந்தது.  அங்கு வாழும் மனிதர்கள், வாழ்க்கை முறை,நாய்களால் இழுத்துச்    செல்லப்படும் ஸ்லெட்ஜ் வண்டி ஆகியவற்றைப் பார்த்தோம்.பனி படர்ந்த பகுதியில் செல்லும்  தற்காலக் கப்பலையும் காட்டினார்கள்.பனிக்கட்டிகளின் நகர்வு  மற்றும் உருகும் நிகழ்வு படத்தில் காட்டப்பட்டது.20 நிமிடங்கள் படம் ஒளிபரப்பட்டது.
RV FALKOR
 மாலை  3.10க்கு RV falkor என்ற கப்பலைப் பார்க்க நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது.ஒரு குழுவில் 12 பேருக்கு
மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டது. பெயர்களைக் குறித்துக் கொண்டுதான் கப்பலில் ஏற்றினர்.
வழி காட்டி ஒருவர் எங்களுடன் வந்தார்.ஒவ்வொரு பகுதியிலும் கப்பலில் பணியாற்றும் அதிகாரிகள் விளக்கம்  தந்தனர்.
Falkor என்ற இக்கப்பல் கடல் ஆராய்ச்சி  செய்கிறது .Schmidt Ocean Institute என்பது ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயராகும்.கடல் வளங்களை ஆய்வு செய்ய ஆய்வுக்கூடம்  உள்ளது.
( கணினி அறை)
(முன்பகுதியில் ஓய்வறை) 
            (சாப்பாட்டு அறை)

  (தங்கும் அறை)
           (கப்பலுக்குள் நாங்கள் )
இந்தக் கப்பல் உலகம் முழுவதும்  சுற்றி வருகிறது. இன்னும் சில நாட்களில் சிட்னியில் இருந்து கிளம்பிவிடும் என்று கூறினார்கள். 2012ஆம் ஆண்டு முதல் இது உலகத்தை எட்டு முறை சுற்றி வர ஆகும் தூரத்தின் அளவிற்கு பயணம் செய்திருக்கிறது.250 மாணவர்கள் உட்பட 700 விஞ்ஞானிகள் கடல் ஆய்வு  செய்துள்ளனர்.
           ( பின்புறத்தோற்றம்)
செயற்கைக்கோள் மூலம் எப்போதும் இன்டர்நெட் தொடர்பில் உள்ளது.Face book,Google மூலம் Schmidtocean என்ற முகவரியில் தொடர்பு கொண்டால் அந்த நேரத்தில் அது உள்ள இடம்,ஆற்றும் பணி ஆகியவற்றை அறியலாம்.அடுத்து பார்த்த கப்பல்கள் மியூசியத்தில் பார்வைக்காக  வைக்கப்பட்டவை.  பணி ஓய்வு பெற்றவை.
HMB ENDEAVOUR
அடுத்து HMB Endeavour கப்பலைப்
பார்க்கச் சென்றோம்.கேள்விப்பட்ட பெயராக உள்ளதே என்று தோன்றும். ஆம்.மாலுமி ஜேம்ஸ் குக்    ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையை வந்தடைந்தது  என்டோவர் கப்பலில்தான்.அதைப் போன்றே இது வடிவமைக்கப் பட்டுள்ளது. 
துறைமுக மேடையில் இருந்து கப்பலின் மேல்தளத்திற்குச் சென்றோம். கீழ்த்தளத்திற்குச் செல்ல படிக்கட்டு இல்லை. இருபுறமும் கனமான கயிற்றின் நடுவே பலகைகள் ஏணி போல இருந்தது. நாம் பின்புறமாகத்
திரும்பித்தான்  இறங்க வேண்டும்.எனவே இறங்க பயந்து பெண்கள் நால்வரும்      மேல்தளத்திலேயே நின்று விட்டோம்.
கீழ்த்தளத்திற்கு  எனது கணவரும் மைத்துநரும் சென்றார்கள்.அங்கு உயரம் குறைவாக இருந்ததாகவும், கேப்டனின் அறை,மாலுமிகளின் அறை,சமையலறை என அனைத்தும் இருந்ததாகச் சொன்னார்கள்.
SUBMARINE HMAS ONSLOW
நீர்மூழ்கிக் கப்பலுக்குள் செல்லும் முன்பு  ஒரு  அடையாள அட்டை தந்தார்கள்.அதை உடையில் மாட்டிக் கொண்டு உள்ளே சென்றோம். 
      இதில் கட்டாயமாக கீழ்த்தளம்       இருக்கும்.இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது.எப்படியாவது  இறங்கிவிட வேண்டும் என்று பெண்கள் 4 பேரும் முடிவு செய்தோம்.
எதிர்பார்த்தது போல் கீழே இறங்க வேண்டியிருந்தது.  குனிந்து, பின்னால்  திரும்பி இறங்க வேண்டும்.இதில் இருபுறமும் முக்கால் அளவுக்கு கைப்பிடி இருந்தது.சூடிதார் அணிந்திருந்தால் வசதியாக இருந்திருக்குமே என நினைத்துக் கொண்டேன்.
  வேம்பையர் கப்பலில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் உள்ளதைப் போலவே  படிக்கட்டு அமைந்து இருந்தது.சேலையை தூக்கிச் சொருகி இறங்கத் தயார் ஆனேன்.முன்னால் சென்றவர்களைக் கவனித்தேன். மெதுவாகத் திரும்பித் திரும்பிப் பார்த்து ஒவ்வோர் படியாக இறங்கி விட்டேன்.  நீளமான குறுகலான பாதை வழியே நடந்தோம்.
பக்கவாட்டில் அறைகள் இருந்தன.கப்பலைச் செலுத்தும் கருவிகள், ஓய்வறைகள், சமையலறை,சாப்பிடும் அறை என அனைத்தும் இருந்தன.

ஆங்காங்கே உயரமான நடைப்படிகளைத்  தாண்ட.  வேண்டியிருந்தது. வெளிக்காற்று உள்ளே வராது.எனவே சற்று சிரமமாக இருந்தது. போர்க்காலத்தில் கப்பல் படை வீீீரர்கள் எவ்வளவு சிரமம் அடைைந்திருப்பார்கள் என நினைத்தேன்.இரண்டாம் உலகப் போரின் போது சென்னையில் குண்டு வீீசிய எம்ப்டன் நீீர்மூழ்கிக் கப்பலும்,வீீரர் செண்பகராமனின் தீரச்செயலும் நினைவுக்கு வந்தது. உள்ளே ஏறி இறங்கி வெளியே வந்ததும் ஏதோ பெரிய சாதனை செய்தது போல் உணர்ந்தேன்.
DESTROYER HMAS VAMPIRE

இக்கப்பல் கடற்படையில் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றது.இரண்டாம் உலகப் போரில் இந்தியப் பெருங்கடலில்  விமானங்கள்  ஏந்திய  மற்றோர் பெரிய கப்பலுக்குப் பாதுகாப்பாகச் சென்றது. 1942ல் ஜப்பானின் கடற்படைத் தாக்குதலுக்கு உள்ளாகி  கடலில் மூழ்கியது. ஐந்து முறை விருது பெற்ற அதை மீட்டு சரி செய்து மியூசியத்தில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
(கட்டுப்பாட்டு அறை)
(படுக்கையறை)
( சமையலறை)
          (கேப்டனின் சீருடை)
கப்பலின் மேல்தளத்தில் bofors gun இரண்டு இடங்களில் பொருத்தப்  பட்டிருந்தன.அவற்றின் திசையை மாற்ற முடியும்.இவை Anti air craft guns. நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி வரும் விமானங்களை இவற்றின் மூலம் சுட்டு வீழ்த்தலாம்.போர்க் கப்பல்களின் அமைப்பை நன்கு அறிந்து  கொண்டோம்.

Tall ship James craig என்ற மற்றோர் கப்பல் இருந்தது.1874ல் உருவாக்கப்
பட்டது. பலமுறை கடற்பயணங்களை
மேற்கொண்டு மக்களையும் காலனி நாடுகளுக்குத் தேவையான 
பொருட்களையும்  சுமந்து சென்றிருக்கிறது.

 பழங்கப்பலாகி கைவிடப்பட்டு கடலில் நின்ற அதை பல மில்லியன்  டாலர்கள் செலவு செய்து  புதுப்பித்துள்ளார்கள். சனிக்கிழமை ,ஞாயிற்றுக் கிழமைகளில் ஜாலியாக அதில் பயணம் செல்லலாம். ஏற்கனவே நான்கு கப்பல்களைப் பார்த்து விட்டதால் இக்கப்பலில் ஏறிப்
பார்க்கவில்லை.
தொடரும். 










No comments:

Post a Comment