சென்னை.
எங்களது ஆஸ்திரேலிய பயணக் கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.22.11.2019, வெள்ளிக்கிழமை அன்று இரவு 8மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டோம். மகன் மற்றும் மகள் தங்கள் குடும்பத்தோடு வழியனுப்ப வந்திருந்தனர்.அவர்களிடம் விடை பெற்று உள்ளே சென்றோம்.மகன் நாங்கள் உள்ளே சென்றவுடன்
செய்ய வேண்டியவற்றை நன்கு கற்றுக் கொடுத்திருந்தான்.
நுழைவு வாயிலில் பாஸ்போர்ட், டிக்கெட் இரண்டையும்
காட்டி உள்ளே சென்றோம்.அடுத்து எங்களது லக்கேஜ் சோதனை செய்யப்பட்டது.பின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கவுண்டருக்குச் சென்றோம். பாஸ்போர்ட்,விசா, டிக்கெட் ஆகியவற்றைப் பார்த்து விட்டு முகத்தை காமிராவில் பதிவு செய்த பின் போர்டிங் பாஸ் தந்தார்கள்.எங்களுடைய இரு செக் இன் பேக் எடுத்துச் செல்லப்பட்டது. இனி பிரிஸ்பேனில் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.அடுத்த கட்டமாக இம்மிகிரேஷன் நடந்தது. பாஸ்போர்ட் , டிக்கெட் இரண்டையும் காட்டினோம்.ஸீல் வைத்த பின் உள்ளே சென்றோம்.செக்யூரிட் செக் செய்ய நீண்ட வரிசையில் நின்றோம்.பெண்களுக்குத் தனி கவுண்டர் . எனவே எங்கு மீண்டும்
சந்திக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டோம்.கொடுக்கப்பட்ட ட்ரேயில் செல்ஃபோன், சார்ஜர் மற்றும் சாவிகளை வைத்தோம். ஹேன்ட் பேக்,செக் இன் பேக் ஆகியவை தனியே ஸ்கேன் செய்யப்பட்டன. பெண் அதிகாரி பெண்களை சோதனை செய்தார். பின் இருவரும் விமானம் ஏற வேண்டிய பகுதியில் வந்து அமர்ந்தோம்.சென்னை சர்வதேச விமான நிலையம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி,சுகாதாரமான ஓய்வறைகள் இருந்தன.ஆங்காங்கே கடைகள் இருந்தன.சிற்றுண்டி ஸ்டால் ஒன்றும் இருந்தது.அங்கு ஒரு வெளிநாட்டுத் தம்பதி காஃபி வாங்கி அருந்திக் கொண்டிருந்தினர்.கை நழுவி காஃபி தரையில் சிந்தி விட்டது. உடனே டிஸ்யூ பேப்பரை எடுத்து அந்தப் பெண்மணி சிறிதும் தயங்காமல் குனிந்து அதைச் சுத்தம் செய்தார். மனதிற்குள் அவரைப் பாராட்டினேன். ஒரு விமான நிலையப் பணியாளர் வந்து விமானம் ஏற வேண்டிய இடம் மாற்றப்பட்டு உள்ளதாகக் கூறிச் சென்றார். எனவே அங்கே சென்றோம். ஒலிபெருக்கியிலும் அதை அறிவித்தார்கள்.சிறிது நேரம்
காத்திருந்தோம். சிங்கப்பூர் செல்லும் விமானம் வந்து விட்டது.
விமானத்திற்குள் செல்லும் வழியில் இயர் ஃபோன், நியூஸ் பேப்பர் வழங்கப்பட்டன. இயர் ஃபோனை மட்டும் பெற்றுக் கொண்டோம். பணிப்பெண்கள் சிரித்த முகத்துடன் வரவேற்றனர். இரவு 11.15க்கு குட் ஈவினிங் என்றதும் எனக்கு குட் நைட் என சொல்லத் தோன்றியது.உரிய நேரத்தில் விமானம் கிளம்பியது. எனக்கு ஜன்னல் ஓரம் இருக்கை கிடைத்தது.விமானத்தில் இருந்து பார்க்கும் போது நம் சிங்காரச் சென்னை ஒளி விளக்குகளால் ஜொலித்துக் கொண்டு இருந்தது. குட் பை சென்னை என மனத்திற்கும் நினைத்துக் கொண்டேன்.
தொடரும்
No comments:
Post a Comment