தொடர் 2
குழந்தை வைத்திய நாதன் எல்லோருக்கும் செல்லப் பையன் ஆனான்.துறுதுறு என சேட்டை செய்து கொண்டே இருப்பான். ஆவுடை ஆச்சி முழு நேரமும் பேரன் பின்னால் சுற்றுவாள்.நடக்க,ஓட ஆரம்பித்ததும் அவனைப் பிடிக்க முடியவில்லை.5 வயதான போது பேரனைக் காணோமென்று ஊர் பூராவும் சுற்றித் திரிந்தாள். "வைத்தியா! எங்கேடா இருக்கிறாய்?" எனக் கேட்டுக் கொண்டே நடக்க மாமரத்தின் மேல் இருந்து "ஆச்சி",எனக் குரல் கேட்டது. மரக்கிளைகளை நன்கு பிடித்துக் கொண்டு அவன் இறங்கிய வேகத்தைப் பார்த்து மலைத்துப் போனாள்.ஒரு நாள் கையில் ஏதோ கீறல் விழுந்து ரத்தம் வந்து கொண்டு இருந்தது.கூட்டி வந்த பையன்கள் பதறினார்கள்."குரங்கு நகங்களால் கீறி விட்டது."என்றார்கள்.அம்மா அவனை வைத்தியரிடம் இழுத்துக் கொண்டு போனாள்.பச்சிலையைக் கசக்கி அந்த இடத்தில் வைத்தார்.பயப்பட வேண்டாம் என அனுப்பி விட்டார். வீட்டிற்கு வந்த உடன் விஷயத்தைச் சொன்னான்."ஆச்சி! நீ பஞ்சு கொடுத்தாய் இல்லையா.அதைக்கொண்டு போய் கடையில் கொடுத்து விட்டு வாழைப்பழம் வாங்கினேன். அதைக் குரங்கு என்னிடம் இருந்து
பறித்தது.நான் சண்டை போட்டேன். ஆனால் அது பிடுங்கி விட்டது" என்றான்.அந்த வடு மாறவேயில்லை.
5 வயது ஆனதும் திண்ணைப் பள்ளிக்கு அனுப்பினார்கள்.ஐந்து வருடங்கள் ஓடின.அதற்குப் பின் வெளியூர் தான் செல்ல வேண்டும். அண்ணன் குமரனை திருமங்கலத்தில் இருந்த தாய்வழித் தாத்தா வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். ராசாத்திக்குத் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்று விட்டாள்.வைத்தியநாதனை வெளியூர் அனுப்ப அம்மாவிற்கு மனமில்லை. வயல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்.அவன் உழைப்பால் நல்ல விளைச்சல் கிடைத்தது.ஓரிரு வருடத்தில் விதி விளையாடத் தொடங்கியது .வைத்தியநாதனின் தந்தை அண்ணாமலை திடீரென்று நெஞ்சுவலியால் காலமானார். அடுத்தடுத்து ஆச்சியும்,அம்மாவும் இறைவனடி சேர்ந்தனர்.அக்கா தன்னுடன் வருமாறு அழைத்தாள்.ராசாத்திக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர்.கணவரின்
குறைந்த வருமானத்தில் எப்படியோ சமாளித்து வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருந்தாள்.எனவே அங்கு செல்ல வைத்திய நாதனுக்கு மனமில்லை.அண்ணன் குமரன் திருமங்கலத்தில் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு செயலாற்றிக் கொண்டிருந்தான். ஊரில் மழை, தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போனது.15 வயதான வைத்திய நாதன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தான். தாய்மாமன் முத்துச் சாமி மதுரையில் குடியேறி இருந்தார். ஏதேனும் வேலை கிடைக்கும். மதுரைக்கு வந்து விடு என்று கடிதம் எழுதியிருந்தார்.வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது என்பதை அறியாமல் வைத்திய நாதன் டிரங்குப் பெட்டியுடன் மதுரையில் காலடி வைத்தான்.
தொடரும்.
No comments:
Post a Comment