தொடர் 1
பசு மாட்டின் "ம்மா" என்ற குரல் கேட்டு தங்கம் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.மூத்த பெண் ராசாத்தியும், இரண்டாவது பையன் குமரனும் தூங்கிக் கொண்டு இருந்தனர். பொழுது புலர்ந்து விட்டது.கணவர் உழுவதற்கு கலப்பையோடு கிளம்பிப் போயிருப்பாரே.நீராகாரம் குடித்து விட்டுப் போனாரா? என நினைத்துக் கொண்டே வெளியே வந்தாள். மாமியார் ஆவுடையம்மாள் வாசலில் சாணி தெளித்து மாக்கோலம் போட்டிருந்தார்.பின்கட்டுக்குப் போனாள்.விறகு அடுப்பில் தண்ணீர்
காய்ந்து கொண்டிருந்தது."அத்தை!என்னை ஏன் எழுப்பவில்லை?ஒரு சத்தம் கொடுத்து இருந்தால் எழுந்திருப்பேனே".என்றாள் தங்கம்."நீ நிறை மாதக் கர்ப்பிணி.குழந்தை பிறந்து விட்டால் தூங்க முடியாது தாயீ.அண்ணாமலைை நீராகாரம் குடித்து விட்டுதான் போனான். உனக்கு வெந்நீர் போட்டிருக்கிறேன். பல் தேய்க்க,வாய் கொப்பளிக்க, முகம் கழுவ அதை எடுத்துக் கொள்.நான் போய் ஆற்றில் போய் துவைத்துக் குளித்து விட்டு வருகிறேன்".என்று கூறிக் கிளம்பினாள் ஆவுடையம்மாள்.
வைப்பாற்றில் தண்ணீர் சலசல என ஓடிக் கொண்டிருந்தது. அங்கே தோண்டப் பட்டிருந்த ஊற்றுத் தண்ணீர் தேனாய் இனிக்கும். குளித்து விட்டு ஒரு குடம் தண்ணீரோடு துவைத்த துணிகளைத் தோளில் போட்டுக் கொண்டு ஆவுடையம்மாள் நடந்தாள்.அடுத்த வீட்டுச் சிறுமி "ஆச்சி! தங்கம் அத்தைக்கு இடுப்பு வலிக்குதாம் சீக்கிரம் வாங்க" என்றாள்.பின்னால் வந்த பெண் குடத்தை வாங்கிக் கொள்ள ஆவுடையம்மாள் ஓட்டமும் நடையுமாய் வீடு போய்ச் சேர்ந்தாள்.வயதில் மூத்த பெண்கள் வந்து தங்கத்தை ஓரத்தில் பிள்ளைப் பேற்றுக்கு என ஒதுக்கி இருந்த அறைக்குள் அழைத்துச் சென்றனர்.மருத்துவச்சி வந்து விட்டார்.அரை மணி நேரத்தில் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. கத்திய கத்தே ஆண் குழந்தை என்பதை உணர்த்தியது. சற்று நேரத்தில் அண்ணாமலையும் வந்து சேர்ந்தார்.பக்கத்து வீட்டு ஜோசியர் " உன் பிள்ளை பிறந்த நேரம்,அருமையான நேரம்.அயல் நாட்டுக்குப் போவான்.வீரதீரமாய் வருவான்."என்றார்.1920ல் பிறந்த அந்தக் குழந்தைக்கு வைத்திய நாதன் எனப் பெயரிட்டனர்.
தொடரும்.
No comments:
Post a Comment