புத்தாண்டுக் கொண்டாட்டம் 2020 பிரிஸ்பேன் நகரத்தில் புத்தாண்டை முன்னிட்டு இரு நேரங்களில் பட்டாசுகள் பொருத்தப்பட்டு வானவேடிக்கை நடைபெறுகிறது. டிசம்பர் 31ஆம் நாள் இரவு 8.30 மணிக்கு முதல் வானவேடிக்கை நடைபெறுகிறது.இதைக் காண பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகிறார்கள். இரவு 12 மணிக்கு இளவயது ஆண்கள்,பெண்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் வந்து வானவேடிக்கையைக் கண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து புத்தாண்டை வரவேற்கிறார்கள்.
நாங்கள் மாலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினோம்.நகர்ப் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஆட்கள் ஏறினார்கள்.நிற்கும் பயணிகளை இன்றுதான் கண்டேன். சிறுவர், சிறுமியர் நிறைய இருந்தனர். கலகல எனப் பேசிக் கொண்டிருந்தனர். கல்ச்சுரல் சென்டர் நிறுத்தத்தில் இறங்கினோம். பிரிஸ்பேன் ஆற்றங்கரையில் திருவிழாக் கூட்டம் இருந்தது. சித்திரா பௌணர்மியன்று
ஆற்றங்கரையில் நாம் கூடுவது போல் மக்கள் குழுமி இருந்தனர். குடும்பம்குடும்பமாக விரிப்பை விரித்து அமர்ந்திருந்தனர். சிலர் படுத்துக் கொண்டிருந்தனர்.இடம் பிடிப்பதற்காக காலை முதலே வரத் தொடங்கி விடுவார்களாம். ஆற்றங்கரை ஓரமாக சற்று நேரம் நடந்தோம். கூட்டமான இடங்களைத் தவிர்த்து விட்டு ஒரு பாலத்தில் நிற்க முடிவு செய்தோம். கல்ச்சுரல் சென்டர் அமைந்திருந்த ரோட்டைக் கடக்க பாலம் இருந்தது. அதில் கைபிடிச் சுவரை ஒட்டி நின்று கொண்டோம்.
ஆற்றின் நடுவில் ஐந்து இடங்களில் barge எனப்படும் மேடைகளை அமைத்து பட்டாசுகளை வைத்திருந்தார்கள். சரியாக 8.30 மணிக்கு அனைத்தையும் வெடிக்க ஆரம்பித்தனர்.
சுமார் 10 நிமிடங்கள் பட்டாசுகள் பூப்பூவாய் வெடித்துச் சிதறின. இந்நிகழ்ச்சி காண்போர் உள்ளத்தைக் கவர்ந்தது.இது அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது.தனி மனிதர்கள் பட்டாசு வெடிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. கிளப் நடத்துபவர்கள் உரிய அனுமதி பெற்று பட்டாசு விற்கும் நிறுவனம் மூலம் வெடிக்கலாம். நிகழ்வை ரசித்துவிட்டு வீீடு திரும்பும் போது பேருந்துப் பயணத்திற்குக் கட்டணம் செலுத்தவில்லை. ஏனெனில் 31 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 1ஆம் தேதி மாலை5.30 வரை பேருந்துப் பயணம் இலவசம்.இரவு 9.30 மணிக்கு வீீடு வந்து சேர்ந்தோம்.
தொடரும்.

No comments:
Post a Comment